அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

என் தொட்டி மீன்குஞ்சு

என் மீன்குஞ்சுக்குப் பேசத்தெரியாது;
குறைந்த பட்சம்,
ஒரு வீட்டு நாயைப் போல,
காணும்போது மட்டுமே வாலாட்டவேண்டும் என்பதுகூட
இரு மாதக்
குண்டுத்
தங்கமீனுக்கு
புரியாதவற்றுள் அடக்கம்.

கண்ணாடிக் குடுவை மைய 'ஐதிரில்லா'ப் புதரில்
குவிய அச்சு நிலைத்துச் சுற்றும் என் விழியோடு
கோளத்தொட்டியில்
மேலாய்/
கீழாய்/
சிறிதாய்/
பெரிதாய்/

வ ள்
ட் க
ட தி
த் கு
தொ,


ன்


ச்
சி றி, இ
ல், ற் ற
தான் ஏ க்
கு
ம்
ஏக்கத்தே விழி வைத்து
என் இடம் அதில் விழுத்தி.

வாரத்தொரு முறை
நீர் மாற்றல்களில்,
வெளி வளியில்
வாய் விரித்து
உயிர்வாழ் நீர் நிலைக்காய்
திமிறித் துடிக்கும்
கணங்கள்
பங்கீட்டடிப்படையில்
எனக்குமுரியவை.

பெட்டி

ரி
த்
துக்
கொ
ட்
டி
த்
தின்னப்பட்டிருக்கா
தொட்டி அடித் தீனிகள்,
மதியக் கோப்பைச் சோறு
பசிப்பட்டும் உண்டிருக்கா
என் வயிறை,
மனதை,
குப்பைத்தொட்டியை
நினைவில்
மெல்லியதாய் எடுத்துச் சொல்லும்.

கண்ணாடிக்கூண்டுக்கு வெளியே
உயிர்கொல்லு காற்று மட்டும் உள்ளதென்று
அறிந்திருக்கும்;
ஆயினும், குடுவை விடுத்து
வெளித்துள்ளும் வேட்கை
விளைந்திருக்கும்;
விழிவழி தெரியும்;
சொரியும்; மறையும்;
கரையும் நீரொரு
தனிமைத்துயர் நிறை
நிரம்பற்கரைசலாகும்.

தூங்க மறுக்கும் என்னிரவுகளில்
தூரத்தே பூச்சிய நீல ஒளியில்
தானும் மறுத்து
துடுப்பு சளைக்காது
சுழரும் நீர் மரங்கள்.
விருட்சங்களில்
நள்ளிரவு வேண்டுதல்கள்
என்னவென்று
நானறிவேன்.

பொன்மீனுக்கு
வீணாகத்
தலை கிறுகாதோ?

ஒற்றை மீனின்
வெளியில் விழி பற்று
கண்ணாடிக்
கதை மாற்ற,
அது பின் சுற்ற, முன் சுற்ற
இன்னொரு பொன் மீன்,
பெண்மீன்
இட்டு விடல்,
இலகுவென்று
அதைப்போல
நானும்
அறிவேன்.

ஆனால்,
என்னைப் புரிந்த
ஒற்றைச் சின்னவுயிர்த்
துணையுமற்றுப் போயிருக்க
அச்சமாய்க் கிடக்கிறது,
இற்றைப்பொழுதுக்கு
இங்கே
எனக்கு.

98 November 05, 19:51 CST

0பின்னூடுகை:

Post a Comment

<< Home