அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

இன்றைக்கு இறந்துபோகும் எல்லா அப்பாவிகளுக்குமாய்...

அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை
அவன் இறந்துபோனானென்று;
கூடவே, கொன்றதும் அவர்களின் குரூரந்தானென்றும்.

அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை
அவனுக்கு, அவள், அவர், அது
என்று பலமுகங்கள் இருந்ததென்றும்
கொன்ற தங்களுக்கும் இருந்ததறியாததுபோல.

அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை
இது அவர்கள் எண்ணும் கம்பிளிப்பூச்சிக்கு கம்பியாற்
குத்தும்
விநோத வேடிக்கை விளையாட்டுவகையில்லை என்று.

அவனாக ஒரு காட்டில் மண்ணுக்காய் அநாதைப்
பிணமானது
தெரிந்திருக்காது;
அவளாக ஒரு அடுப்புக்கட்டில் அகமும் வெந்துபோனது
அறிந்திருக்கப்படமாட்டாது;
அவராக முதியோர் விடுதி மூட்டைகளின் கட்டிலில்
அழுக்கு
மூட்டையாய் முடிந்ததுவுந்தான்;
அதுவாக இன்றைய காரம் ஆகிப்போன சிறு
கதையாக....

ஆக, கொல்லப்படுதல் தவிர்க்க இயலாதது,
மனிதனோ, மனமோ எதுவெனினும், பிறரால்
கொல்லப்படுதல் தவிர்க்க இயலாதது;
பின்னரும் ஏன் கொலைஞனை விரல்கள் காட்டி.....

அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்;
அவர்களும் அறியா அப்பாவிகளே
விடுங்கள்,
விளையாடட்டும் விநோதம் இதுவென,
அவர்கள் வினை வேறு விளையாட்டு வேறு
என்று அறியப்படும்
அவர்கள் விரல் சுட்டுக்கொள்ளும் விரை காலம்
வரை.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home