அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

இரு தளத்தில் ஓர் உலகம்

நுரை கொண்ட அலை வந்து உடல் சிதறிப்போகும்;
கரை எங்கும் கறுப்பாக சதைக்குவை கிடந்து நாறும்;
சிலை போலும் மனிதர் வெளி விழி நிலைத்து நிற்பார்;
தலை உருகி மணநிணமோ பெரு அருவியெனப் பாயும்.

சிறு பயல்கள் புரிந்திருந்த செயல் மழலை அற்றார்;
வரி க்குதிரையுடை அணிகையிலே ஆயுதங்கள் பெற்றார்;
திரை மறைவின் கொலைகளெல்லாம் தெருவில் வரக் கண்டேன்;
சிரை த்திருந்த முண்டம் செல் தரை பரவத் துவண்டேன்.

விலை கொடுக்க மனிதவுயிர் விற்பவர்கள் தேடி
தொலை நகர்க்கு நலிந்தவர்கள் தொலைந்திருக்க விழைவர்;
கலைகளெல்லாம் காய்ந்திருந்து கசடுகள் ஆகும்;
கால்தடக்கத் தாமுதிர்ந்து சருகெனவும் மாறும்.

பாம்புகளும் பல்லிகளும் பட்டங்கள் சூடும்;
தீங்கிழைக்கும் தேள் கொடுக்கான் ஆட்சியிலே ஏறும்;
வீம்புகளும் வம்புகளும் ஊர்ந்திருக்க உள்ளே,
தான் சுமப்பான், ஆண்டவனே(¡) பல்லக்குத் தாங்கி.

ஆங்கே,
விதிர்விதித்தேன்;
வியர்த்தெழுந்தேன்;
விழி கசக்கி விரித்திருந்தேன்;
முன்னைப்போல்,
முடிவற்ற வெளியில் நிலா எறித்திருக்கும்;
முகில் ஜன்னலில் முகம் புதைத்திருக்கும்;
கடலலைகள், களங்கமற்ற குழந்தை மன
அலை நுரை எழுப்பி அடித்தோயும்.
கண்டதெல்லாம் வெறும் கற்பிதம் என்றெண்ண,
வந்த கொடூரங்கள் வடிவம் தப்பி எங்கென்றிலாது
கணநேர இடைவெளியில் கண்ணின்று இறந்திருக்கும்...

...இல்லையேல்,
கவனமாய்,
ஒளிந்திருக்கும்;

மீண்டும் நான் சாய்ந்திருக்க,
இந்த நிலை மெல்ல நசியும்;
இன்னொரு வன்னுலகம் வலிமைபெறும்.
பஞ்சு மேகம் நைந்து மறைந்து
பிஞ்சுப்பாம்புகள் பிளவு நா நீட்டி நெளியும்;
நிலாச் சிதறல் தொலைந்து
நிணநீர் மழை கொட்டிக்கிடக்கும்;
குளிர் அலையிருந்து அனற்புகையெழும்.
அதிலிருந்து தேர் கட்டியிழுத்த சிறுவர்,
காலற்றுக் கையற்று
முட வரிக்குதிரையாகி இடுப்பிலே
ஆயுதங்கள் உற்பவித்து எழுந்திருப்பார்.
தேள்கள் கொடுக்கற்று புதிதாய்
வேறொரு கொல்லும் கருவி பொருத்தி
குத்த ஆள் தேடி நகரும்.

விழிக்க, எல்லாம் மீளச் செத்து
மயக்கும் நிலா மௌனித்துக்
கிடக்கும் முகத்தில்
மஞ்சள் ஒளியாய் எறித்து.

எனது நித்திரை உலகம்,
போனதொரு காலத்தின் எச்சக்கூறென்றும்
வரவிருக்கும் விளைவுகளின் முற்கூற்றுக்கீற்றென்றும்
பிறபகுதி நாடொன்றின் தற்காலப்போரென்றும்
இரத்த விளாறாய்,
சிந்தை உற்பத்திப்பூமியில்
பலவிதமாய் கீறும்,
குழப்பத்தின் கூர் நகங்கள்.

பின்பிறக்கும் காலை நாட்பொழுதில்,
பை பற்றிப் போகும்
பள்ளிச்சிறுவர் பால்முகங்களில்
பலியிடு போரின்
முடக்குதிரைகளின் மூர்க்கம் துருவி,
காற்சட்டைப்பைகளுள்
உருளைக்கோலிகள்,
உயிர்கொல்குண்டுகளாயும்
உரு மாறிபோனதுவா
என்றும் தேடிக்
கிடந்தேன் நான்.

98 ஆனி 29, திங்கள் 19:20 CST

0பின்னூடுகை:

Post a Comment

<< Home