அலைஞனின் அலைகள்: கணம்

Saturday, December 25, 2004

அலையும் கதைகள்

பசும்புல்லிருந்து பொதிந்த பழங்கதைகள்
அள்ளியள்ளிப் பேசியே அலர்ந்ததெம்
நிலாக்காலம். எறிந்தவொளி உலரவென
அலை அலட்டிக் கடல் தள்ளிக் கரை
கால் அள்ளிப்போடவும் மெல்ல எழுந்து
புறமணல் தட்டிப்போய்
எம் காலநிலா அலரப் பேசவென
அள்ளவள்ளப் பழங்கதைகள்
பொதிந்தன புல்லின் பசப்பிலே.

இறந்த எலும்புகட்கு இரைந்திரைந்து
எண்ணச்சுதை சேர்த்தோம் - கூட்டமாய்
இறந்த எலும்புகட்கு இருப்போர் நாம்
அள்ளிச் சேர்த்தோம் ஆவி.
அவரவர் அவிர்ப்பாகம் அசை மெல்ல,
மெள்ள மேனி முளைத்து
அசைந்தலைந்த பழங்கதைகள்
சொல்லாமல் அள்ளிப்போனதாம் - அலை
தள்ளிக்குவித்த தறிநிலாத்துண்டெல்லாம்.


பின்னொரு நாள்,
இறந்த எலும்புகட்கு இரைந்திரைந்து
எண்ணச்சுதை சேர்த்தார் - கை நிறைய
அள்ளிக்கொண்டோம் சொரிவெள்ளிநிலா.

03, ஏப்ரல் 30, புதன்

எமக்கானது/எம்மாலானது

குழம்பியிருக்கிறேன்
-நிரம்ப, உட்குடம் ததும்பத் ததும்ப.
குழப்பம் - மனிதரால், நிகழ்வால்
மேலாய், - எரிநாள் நெடுக்க
பேசியதை மீள மூளப் பேசவேண்டிய
மிருகவதை மூளை மேல் துரத்திப் படர்வதனால்.
ஓங்கு தான் உள்ளே ஒரு கணம் தயங்கினாலும்,
ஒன்று சொல்லித்தான் ஆகவேண்டும்;
"நான் குழம்பியிருக்கிறேன் - முக்கியமாய்
பேசப்படும் நான் பிம்பமில்லாதா னானதினால்."

இடது வலது எல்லாம் நாணிக் குழைந்தொன்றாய்
தெரு வழிந்தோடிப் போக, சுற்றி அவகதிலயத்திலே
அதிர்கிறது சொத்திக்கூத்து.
கொள்ளிக்கையனும் அள்ளித்தின்னியும்
கையைக்கோர்த்துக்கொண்டு
துள்ளித் துள்ளி ஆடும் துடிநாட்டியத்துரிதம்.
இடையிடையே எனதென்ற கடிதத்தில்
என்னைக் கொள்ளையடித்தவனுக்கும்
இறுக்கிக் விட்டோம் குத்தென
ஏராளமிட்டுக்கொண்டார் கையப்பம் -
என் பெயரால், உன் பெயரால்
ஊரிருந்தார், இறந்தார்
உருப்பெயர்ந்தார், பெயரார்
எல்லார் பெருகுதுயர் பெயராலும்.
அடுத்தவேளைக்குப் பருப்புத்தேடும் சிறுத்த மனிதப்புள்ளி
அரசு விளம்பரப்பொறி பரந்த சுவரில்
மூச்சுத் தப்பொரு பொட்டிடுக்குத் தேடி
மறுப்பறிக்கை சுழித்துக் காட்டமுடியுமா,
மெய் சொல்.
'கொள்கைக்காரன்', 'கொள்ளைக்காரன்'
எல்லாச் சொற்களும் நானே வகுத்தேன்
என்ற (அ)மங்கச்செய்திச்செவியுறுவீர் நாளை;
நீங்கள் நெறி வகுத்தீரென்றும் நானுந்தான்.

முகமில்லார் எம்பெயரால் முழுவதும்
இனியும் நடக்குமாம் முருங்கைமரமேற்றம்.

நம்பங்காய் எம் கையை முறித்துக் கொள்வோம் வா
- அழுகு கவிதையேனும் அழுகை பிழைத்துப் போகட்டும்
அடுத்த இயலு தலைமுறைக்கும் எஞ்சுகிற பூக்களுக்கும் .

'03 மார்ச், 20 வியாழன் 18:06 மநிநே.

அந்தகக்கவிக்கான அ(¨)வத்திரை

அந்தகக்கவிக்கும் அரசனுக்கு மிடை அவிழ்
திரை தொங் கவை யென்றான வாழ்வறை;
எரியும் உலைகளும் எளிய மனிதரும் புரி
நூல் திரிந்து கீற்றாய்ப் பொசிந்து புகை பரவ,
உருட்டி உருட்டி உண்கி றேனென் உணவை;
எண்ணெய்த்தேச எரிகொள்ளிக்கிடை
பதுங்கிப் பருகுநீருக்கலை சிறுவர்
கண் தெரியும் பயத்தை, பசியை,
துரத்தித் தனக்குள் அமுக்கி,
எனக்குப் பிதுக்கும் படக்கருவி.
ஓலமும் உறுமலும் ஓருடல் கூறும்
அர்த்தநாரீஸ்வரம்; அறைச்சுவர்
அதிர்ந்து அனுங்கி அமுங்கும்;
அடக்கம்,
அடுத்த ஒப்பாரி வரை நிலைக்கும்.
அத்தனை ஆயுததாரிகளும்
பொய்யைப் மெல்லப் பிடியென்று
அள்ளித் தருகிறார் அவல்;
கிள்ளி மெல்ல மெல்ல,
இன்னும் விரியுமாம்
குசேலர் தேசத்தே கூற்றுவன் நாட்டியம்.
உள்ள முத்திரை,
முழுதாய்த் தோற்றுமோ திரை?
என்னைவிட எவரேனும் கண்டீரா,
எரிந்த தெரியாதா தென் றிலா
தெல்லாப் பிணங்களின் திறந்த கண்களும்
இ·தெதற்கென்று கேட்பதை?

தொடர்ந்து
தொலைந்த பருவப்பெண்களையும்
தொலையா நோய்க்கிருமியையும்கூடப்
பின்னுக்கு வன்மையாய்த் தள்ளிப்
பொல்லாப்போரைத் துப்புதென்
தொலைக்காட்சி.

ஜன்னலின் பின்னால்,
கண்ணிருண்டு காயும் வெறுவானம்;
கீழ் உதரம் கனத் தரக்கி யரக்கி நகரும் கயர்மேகம்.
இரவு பகலின்றி
இடைவிடாது பருகிக்கொண்டிருக்கின்றேன்
என்னுடைய நீரையும் நீருக்கலைவார் துயரையும்.

எப்பொழுதும்போல, இப்பொழுதும்
ஆயுதங்கள் மட்டும் அழுத்தமாய்
நெறிச்சாத்திரங்கள் போதிக்கிறன.

'03 மார்ச், 31 திங்கள் 04:54 மநிநே.

ஒதுக்கம்

நிழல் தேய்ந்த நேரத்திலே
கல்லெறிவார் கூட்டத்திலிருந்து காணாமற்போனேன்.
ஒடித்த ஒரு விலாவென்பை உள்ளொளித்துக்கொண்டு
இல்லாச் சடத்தை இதுவென்றே
உருக்கொடுக்க அலைந்தேன் ஊரூராய்.
மீன்பிடிகுளங்களிலே தேங்கிய வலைகாரர் முகங்களை
மெய் சோர்ந்த பொழுதுகளில் கடந்து நடந்தேன்.
பறித்ததைப் பறிவிட்டுக் கால்கீழ்க்குட்டை சேந்திப் பின் பறிக்கும்
காலச்சேதத்தைக் கண்டும் காணேனாய்ப்
பாதைக்கல் விலக்கிப் போந்தேன் மேலும் கால்.
பார்த்த ஆறெல்லாம் பகுக்க இத்தனையாய் வகைமச்சம்;
அள்ளும் வலையெல்லாம் சொல்லடங்கிப்போன எண்கள்.
அகத்தில் மழைக்காட்சி துளி முளைக்க பயிர் முளைக்க
அடுத்தவர் கவியோரத்து வேலிக்கப்பால் மட்டும்
காலாற நடக்கின்றேன் காற்றுவெளியில் நான்.
காற்சட்டைப் பைகளுள்ளே என்புக் கணக்குப் போடும் கைகள்.
நடத்தலுமாகும் நாளைக்கான தவம்;
தேவத்துவம்.

26, ஜனவரி 2003 - ஞாயிறு 00:39 மநிநே.

திரித்துவமுள்

எழுதி முடித்தபின்மட்டும்
எங்கிருந்தோ செருமுது இந்த முள்.
தேவநிலைப்பட்ட புனிதத்தனிமுள் தான் என்பதாய்க் கனைதொனி.
உன்னோடு காறித்துப்பிய கரிநாக்குக் கழுவிக் கொப்புளித்து
சாப்பிட்டுப் பருகித் தாம்பூலம் தரித்துத் துலக்கியபின்னால்
காவடி வேல் குத்திக் கிழிக்குது அலகு; நாடி கீறப் பாயுது வெள்ளம்.
ஆள் தேடு அவதி நேரத்தில்,
அசுரத்திடுங்கு ஆகாக்காலத்தில்,
சேற்றாமைத்தலை தோற்றாமையில்
என்ன வாழுதோ இதற்கொரு தேவாம்சம்?
அடுத்த தொலைபேசலிலே அம்மாவிடம் கேட்கட்டுமோ,
"பள்ளிக்குப் போகவரச் சொன்ன
'பொறியெல்லாம் உன் போக்கு
புத்தகமும் வாய் பொத்தலுமாய்'
புத்திமதியை, பக்குவமாய்ப்
பொத்தி வைத்தீரோ
என் பயணப்பெட்டியிலே?"?

கேட்பதற்கும் கடிக்கக்கூடும்
இக்காலாணித்திருத்துவமுள்.

25, ஜனவரி 2003 - சனி 23:05 மநிநே.

மதிப்பீட்டைக் கேட்டுப்பெறுதல் பற்றிய மதிப்பீடு

எதையும் தவறாகச் சொன்னதாய் ஞாபகமில்லை;
"மாடுதான் என்றாலும் நான் வண்டில் மாடில்லை"
என்று மட்டும் மேய்வழியிற் சொன்னதாய்,
சின்ன நிழலாட்டம் உள்ளே.

நிரைக்களத்தில் வயல்மாட்டைப் பற்றி
வரி பத்துச் சொல்லக் கேட்டார் போலும்;
"மாடுகள் பற்றிய என் மதிப்பீடுகள்,
திரைப்பட விளம்பரங்கள் அல்ல
காணும் தெருமூலைக்கெங்கும்
சாறி, சாணிச்சுதை சேர்க்க"
என்றிருப்பேனாக்கும்; வேறில்லை.
இதிற்கூட, கேட்டவர் மூலத்தில்
ஆழக் கெளுத்தி செருகியதாய்
எனக்கேதும் தோற்றமில்லை.

உன்னைப்போல், அவனைப்போல்
நானும் உணர்கொம்புள்ள மாடுதான்.
விலகிப்போகாது வேண்டுமென்றிடித்தால்
வேறென்ன செய்ய?

முட்டிய தெருவில், முதுகில், முனை
இலேசாய் இடறக் குத்துதல் தவிர
வேறேதும் புரியவில்லை; வேறேதும் தெரியவில்லை.

இனியாவது தெரிந்துகொள்; உன்னைப்போல்
இவ்வூரில் எந்தத் தெரு மாட்டுக்கும்
உண்டு ஏதேனும் உட்கருத்து.
ஆனாலும், மாட்டுக்கு மாடு
வால் தூக்கி மாறாது மூத்திரமணம்.

01, ஜனவரி 2003, புதன் 23:35

கழிப்பறையிலே கவிதை வாசித்தலைப் பற்றி

அள்ளித் தின்னுதல் சுகம்;
இல்லையெனேன்.
மெல்லக் கவிதையைத் தின்னுதல் இன்னும் சுகம்.
இல்லையென்பீரோ?
சப்பித்தின்ற கவிதை செரிக்கும்;
செரித்ததிற் பிறக்கும் சக்தி.
செரியா மிச்சம் என்ன செய்வீர்?

துளியும் மிச்சமின்றிக் கழிப்பேன் நான்.

கழிப்பறையிற் காகிதப் புரட்டல்
என் சுகம்.
பிடி தின்னுதல் போலத் துருவிக் கழித்தலும்.
கழிக்கும்போது கவிதை படித்தல்
இன்னும் சுகம்.

கவிதை சுகம்;
கழித்தல் சுகம்;
கழிக்கும்போது கவிதை துடித்தல் சுகம்.
கண்டதை உண்ணல்போலத்தான்
கடுக்குவதை நீக்குதலும்.

"என்ன, எதிர்க்கலாசாரமா?" என்பதாய்ச் சிலர்.
சொல்லத் தெரியவில்லை.
தேடவும் தோன்றவில்லை.

ஒற்றைச் சத்தம் உவப்பான தென்ற வரை என் எல்லை.

29, டிசம்பர் 2002 சனி.

சாதனை

"முற்றத்து நிலவிலே பேசி முடித்தோம்"
என்றாக முன்னால்,
நிலவிலே மனிதன் &
முற்றத்தில் யுத்தம்.
"சரி, போய்க் குளிர்ப்
பனியிலே படரப்
பேசுவோம் மீதி;
வாருமேன் சோதரரே"
எனக் கள்ளப்பட
சிறுவள்ளத்துள்ளேனும்
வலை போட்டொளித்து
ஈரப்படாமலே
காவி வந்தோம்
மேற்கே,
கனத்த
சாதித்தலை


19, டிசம்பர் 2002 வியாழன்

விரல், தறி & வாதம்

உளுத்த பலகையுள்
நாட்பட
நகர்கிறது நோய்க்கோழி;

நினைத்தும் நினைக்காமலும்
நடக்க முயல்கிறது,
கனத்துத் தூங்கும் கால்; துவண்டு
தள்ளிப்போம் மெல்லிய தூக்கலும்;
களரணமுனகல் ஊறி நனையும்
கணித்தறி. அறிவேன்; தோழன் அழுகிறான்.

'குளிர்' எழுதும் மொழியும்
முள்ளெரித்து என்பு தின்னும்.
எண்ணம் எழுத்திடை எரிசுவர்த்தடுப்பு;
மூட்டில் மோகித்து சூள்மூட்டும் மின்சாரம்.

சொல் உளறு முளையில் வலி கிளறு மிளிரூசி;
வீட்டுமன் முதுகென் வேகுவிரலாகிப்போகாதோ?

~~~

தூரப் போ புழுவே, தூர்ந்து போ!
வேண்டுமட்டும் வில்வாதப்படு;
இனியும் காட்டேன் ஏதும் முதுகு.
சொல் புரிதல் என் யாகம்;
காண் முன் மார்பு; கணை எய் சரம்;
கை தையத் தைய,
பையவேனும் தமிழ்
தட்டுவேன், தறிப்பேன்.

உள்ள மொழி, உருகி முறிதல் வரை
நொய்ய நொய்யக் கைக்கணிநெசவு.
பின்னு விரல் வேணுமென்றால்
பிணி விறைத்துச் சாகட்டும்;
ஆகா அப்பின்னும், ஆழ்விழி
அதிர்ந்தியங்கும் என் மூளை.

15, டிசம்பர் 2002 ஞாயிறு

அறுத்த அகவிதைக்கும் நட்ட விதைக்கும் நடுவில் முளைத்தவை

நாட்படத் தோண்டிய கால்நக அழுக்கு;
அலறித்தூங்கும் அடுத்தவன் தொலைபேசி;
வேளை மாறிய வானொலி நடத்துனர்;
பசித்துப்படுத்த இரைப்பைப்புகைச்சல்;

ஆளைச் சுற்றிய ஈயக்குமிழில்
ஆழ நூல்போக பேனைக்கோல் ஓட்டை;
கையை எறிதல், கழுத்தை மடக்கல்-
எல்லைவிரித்தல் என்றுள் நினைத்தல்;
காலைப் பரப்பி ஆழத்தூங்கல்;
நனவைக் குழப்பிக் கனவென்று துரத்தல்
(என்று நனைய முதிர்கனவில் இருத்தல்);
கதவு தட்டலைக் காணாதிருத்தல்;
புதிய கவிஞனை வலையிற் தேடல்;
பழைய கடிதங்கள் மடித்தலும் கிழித்தலும்;
துழாவிய நகங்களைத் துளைக்கத் தவிப்பு.

தவிர்த்து நிமிர்ந்திருந்து
சாமான்பட்டியலில் சங்கீதக்கோர்ப்பு;
சாம்பார்ச்சட்டிக்கு அகவிச்சிட்டிகை.
பட்டினி தீர்க்கமுன், பட்டியல் பதிவு.

ஆறமுன் பரிமாறு.
புசிப்பதும் கழிப்பதும் பசித்தவன் பொறுப்பு.

13, டிசம்பர் 2002 வெள்ளி

மார்கழி_02- தலைப்பிலி 3

எல்லாத்தெருவும் எனதென்றும் தெரிகிறது;
இல்லையென்றும் போல.
காண்கின்ற இல் பலதில்
கரைந்துபோயிருக்கும் முகப்பு

போகிறவீடெல்லாம் முன்னைப்புக்கோரில்
ஒருவரேனும் என் நண்பர்.
இருந்தும், தரிக்கமுடியவில்லை.

போக்கிற் கல்லெடுத்து
போம் வழி காணக் கட்டியதும்
எனதென்று ஏனோ இன்னும் தோன்றவில்லை.

"அழையாவீட்டின் பூட்டை
முறிப்பதுமட்டும் அநாகரீகம்.
தாழ்ப்பாள் தூங்காத தாழ்வாரம்,
வீட்டுக்கணக்கா? வீதிப்பரப்பா?"
-அலைஞனோடு தொடர்கின்ற
ஆட்டுக்குட்டிகள்.

தட்டாமற்போன கதவும்
தட்டித் திறக்க, புகாத வாயிலும்
படி பட்டுத் திரும்பிய புலமும்
இத்தனையாய் விரிகின்ற வீடெல்லாம்
போனதென் வாதக்கால்.
தட்டவும் திறந்தாகாத் தேசத்தின் வாசனை
தெரிந்ததென் நாசி.
முள்ளுக்காணிக்குள்ளும் சக்கரம் சுற்றிய பாதம்.

அப்படியாய் அலைகின்ற கூத்தாடிக்கும்
பிடித்த தெருவென்றும் உண்டு;
அடிக்கடி தட்டும் வீடென்றும்
அவ்வப்போது அடையாளம் தெரிவதுண்டு.


வரித்த புலி அலைச்சல் மட்டும்
இரைக்காய்ப் பை குறாண்டும்.

13, டிசம்பர் 2002 வெள்ளி

மார்கழி_02- தலைப்பிலி 2

முன்னமர்ந்து பேச, முழுதாய் வருவதில்லை;
திக்கிக்குழறும் கொத்து மழைக்குட்டைப்பேத்தை
எகிறித்தத்தும்; திரியும் எங்கெங்கும் திக்கு.
அழிந்த முடிச்சுகளை அள்ளிமுடியமுன்
தெறித்த குண்டுக்குக் கண்டதெல்லாம்
தெரு; பட்டதெல்லாம் குறி.
பாடல் முகிழ்குது பையப்பைய.
குறியும் தெருவும் அழிந்த மலைப்பனியில்
ஒழுக்கென்றோடுது உள்மந்தை.

போம் வழிக்குப் புரிகிறது பொன் பிறை.
நடக்கிறேன் நான்.

13, டிசம்பர் 2002 வெள்ளி

மார்கழி_02- தலைப்பிலி 1

நுனிநகம் பரபரத்துக் கிள்ளிப்போட்ட சொல்லோடு
துள்ளிக் குவியுது கூடை.
தேக்கிய தாகம் தீர்ந்தபின்
அள்ளக்கேட்பாரின்றி
புல்லுக்கோடுது அமுதம்
-அவதி.
ஊற்று வழிய வழிய உளறி நடக்கிறது உட்பாதம்.
மழை சமயங்களில் விடேனென்று பெய்கிறது;
வேட்டைத்தினவு வேறெப்போதோதான்
வீட்டுக்கு வருவேனெனத் திமிர்கிறது.

நடுவில்
மழை கரைத்த மொழியை
அழுகாமற் பூப்பது யார்?

13, டிசம்பர் 2002 வெள்ளி

அலைஞனின் வெள்ளாடு

பின்னால் வந்த பூச்சிப்பயணிகளும்
பெருத்துப் பொதிமூட்டைப்பூதமாகிப்
புள்ளி எல்லைக்கப்பால்
பொரிந்து போனபின்னாலும்,
தரித்தவன் முகத்தைப் பார்த்து
வெறிக்கிறது வெள்ளாடு.

முடிந்த பயணக்கணக்குகளைமட்டும்
இருந்திருக்கவேண்டிய ஆள்கூறு,
சென்றிருக்கவேண்டிய திசை
அடித்தடித்து மாற்றிச் செய்து
களைத்துப்போனவனைக் கண்விலக்காது
இன்னும் இலை சப்பிக்
கவனித்திருக்கிறது வெள்ளாடு.

போகும் சூத்திரங்களை
மிதித்த சேற்றிலெங்கோ
சிந்தித் தொலைத்து
கடக்கின்ற பயணிகளைக்
கண்டு எண்ணிக்கொள்பவனை
எதிர்பார்த்துக்காத்திருக்கிறது
இன்னும் இந்த வெள்ளாடு.

கலைந்தவன் மூளைக்கு
ஆட்டின் முகந்தான் ஆறுதலென்றாலும்,
புத்தி கெட்டு
வெள்ளாடுகள் மட்டுமேன்
அறுந்த பட்டங்களுடன்
அலைந்து கொண்டிருக்கிறன?

கணக்குப்போடுவோனைக்
கழற்றிக் கடந்துபோகாதது
இந்த வெள்ளாடு ஒன்றுதான்.


முடியாயாத்திரைக்குறிப்பும்
தேய்த்தழித்த கணக்குப்பாசியும்
வழுக்க மனம்,
ஆட்டின் தெருத்தடுப்புத் தேடும்.

03, ஒக்ரோபர், '02

பிணந்தின்னியின் பிள்ளைபேரர்

பிறப்பிலேயே சொன்னால்
விளப்பம் சுலபம்:
-பிணந்தின்னியின் பிள்ளைபேரர் நாமென்பேன்.

நாமென்றால்,
பிணந்தின்னி பெற்றதிலே
பிணந்தின்று பெற்றுப்போட்டதிலே
பிணந்தின்றோர் மட்டும் கணக்கு;

என்னைப்போன்றோர், கணக்கென்பார் சிலர்;
கணக்கிடார் பிறர்.


பெரும்பிணந்தின்னி,
உடன் தின்ற பிள்ளை,
உதவித் தின்ற பேரன்
பிரவேசிக்கப் பூசாரி
கைவேப்பிலைமோப்பம்.

பூசகரென்போர்,
ஆதியிற் பிறப்பித்தோர்;
அவரிடம் உரித்துப்பெற்றோர்;
பெற்றோரின் பிடிப்பிலுற்றோர்;
மிச்சமாய், பிணந்தின்னி பெற்றதிலே
பிணந்தின்னார்; தின்று பெற்றதிலே
இன்னும் தின்னார்.

தின்ற பிள்ளைக்கு, பேரருக்கு
தில்லை எல்லைக்குள்ளும்
கள்ளமாய்த் திரியக் காரியம் தெரியும்.

பிள்ளையர்க்குத் தில்லை முக்கியம்;
எல்லை பிறழாமல் இயங்கிப்போனார்;
எல்லாப்பூசகர்க்கும் இறங்கிப்போனார்.

பேரருக்குத் தில்லைவெளிச்சம் தேவையில்லை;
எல்லைக்கப்பால் வெளியில் எல்லையில்லா ஒளி;
தில்லைக்குட் போகமுன்னே திறந்து திரிந்த களி.


என்னைப் பிள்ளையென்றார் சிலர்;
பேரனென்றார் பிறர்.

உள்ளுக்கும் வெளிக்கும்
என்னைப்போலவே
எதையும் பேசமறுத்தார்
பிணந்தின்னி.


03, ஒக்ரோபர், 2002

பூச்சித்தேசத்தாருக்குப் பொதுவாக

நெடுநாளாக,
நெருப்புவால் நீண்டு
இவன் நகர் சுற்றத்தாவும் என் பதிலை
சுண்டெலிச்சுருக்கிலேனும் கிறுக்க நினைக்கிறேன்;
சந்தைத்தெருமுடக்கில்
அதிரும் காலடிக்குப் அரைவிழி வெளித்து,
தலை பதுங்கி அயர்ந்து கொள்ளும்
பூனைப்பதில் அது.

உள்ள நாலு கல்லை உயரக்கடாசி
ஒன்றிங்கு அங்கு தொங்கத் துரத்தும்
இவனின் கைகளிற் சுண்டிப் பறித்து
சுற்றும் சிறார் கோணல் முகங் காணவும்
அங்கங்கு முளைத்து மயிர்முறுக்கி
அடங்கும்
ஆவல்.

எல்லாத்தெரு போகும் திக்கும் தன் இல்லென்பான்;
இல்லா இலக்கில் முட்திரி வைப்பான்; முளைத்தது தன்
மூக்குக்குப் பொருந்தாமல் முறித்துப்போடுவான்
விரலுக்கும் நாசிக்கும் ஊசிவலை பின்னலாம்...
...ஆயினும்,
சாடிக்காடியில் சஞ்சலித்துப் புகுந்திருக்கிறது கடிதம்.

நேற்றுநாளையிடை நெருக்கும்
இற்றைக்கொதிப்புத் தாவி
தீவாலைத் திரி சுற்றேலாத்தினங்கள்
வீட்டுத்தாழ்வாரங்கள்.

என்றாலும்,
"எல்லாமே என்னாலே" எனும் இவனுக்கு
என்றாவது இருந்து
எண்ணி எண்ணி அரிசி
எழுத்துப் பொறுக்கி
எழுதக்கூடும் நான்
இன்றியலா இராவணன்மீசைகளை.

02, ஒக்ரோபர் 2002

அடுத்தவள்மேற் காமம்

பொய்யில்லை மெய்யாய்த்தான்,
கண்டார் கண்டாரோவென்றும்
காணாதார் காண்பாரோவென்றும்
காணாது கண்மூடிப் பூனையாய்,
போனவிடமெல்லாம் சட்டை சரியாய்ப்
பிரிக்கா மெத்தென்ற புத்தாளோடும்
கட்டிப்புரண்டேன்; பின், புரியமுன்னும்
அறியாதான்போற் பிரிந்தேன் வழி.

இவள்முன்னே அவளைப் புணர்ந்தேன்;
அவளறிய இவளைக் கை கவர்ந்தேன்;
எனக்கென்றாவளை இவள் எனாமல்,
இவர்கள் என்று இரட்டைப்பட
எதிர்ப்பட்டோருக்கெல்லாம்
சொல்லித் திரிந்தேன்;
அவளை அந்த வீட்டிலும்
இவளை இந்த வீட்டிலும்
இரு பேசாதென் றமர்த்திவிட்டு
இன்னொருத்தியோடு எல்லாத்திக்கும்
என்போக்குத்தெருவெங்கும்
இதழ் வருடி இமை தழுவி
எந்நேரமும் நான் அலைந்தேன்.

இவளையும் அவளையும்
இங்கில்லாப்பொழுது
எவனாவது தொட்டானா
என்றறியவும் என்னாட்களை
அவளுக்கு அங்கு, இவளுக்கு இங்கு
என்று பின்னிருத்தி,
தொட்டான் தொடாதான்
உற்ற தொடுப்புகளையும்
ஒருதரம் தொட்டுப்பார்ப்போம்
என்றுளைந்து முயன்றேன்.

எட்டிப்பார்த்தபோதெல்லாம்,
எனதில்லாள் எவளானாலும்
எனதில்லாள் மேலானாளாய்த்
தெரியத் தெரியத் தொட்டுத்
தழுவென்றது உளம்; தட்டிப்
பாரென்றது விரல்.

கலைந்தது கருத்து; புலையானது போக்கு;
கண்ணுக்கும் கைக்கும் கட்டுப்படாததாம்
அடுத்தவனுடனுள்ளாள் மேலான முதற்காமம்.
ஆழ முழுகித் தழுவிப் படித்து முடித்தவள்
உடன் உள்ளாளும் அவள் முன்னாளும் னாலும்,
முடிக்க முடியாதாளானாலும் சில பக்கம்
விரிக்கக்கிடைக்காளோ என ஆனாள்,
கண்ட, கடை விரிந்த சிமிட்டக்
கண்ணுள்ள சிங்காரி ஒவ்வொருத்தியும்.

அறக்கற்புக் கெட்டுச் சரிந்தாலும்,
சாதி களைசொட்டிப் பிரிக்காது
கண்கண்ட கடைக்கண்ணிக்
கணணிகளை,
விரல் தொட்டுத்தழுவாமல்
தறிதட்டிச் சொருகாமல்
ஓரெழுத் தேறிக் கட்டிப்புரளாமல்
விட்டுப்போகவிடாதாம்
கழுதை வயசிலும்
விடலை மனசு.
;-))


13, மே '02, திங்கள் 21:09 மநிநே.

நகர்

வசித்த எல்லா நகர்களும் குறைந்ததொரு
கொடுங்கோலனைப் பிரசவித்ததானவை.
நடுமத்தியானத்திலே எருமைத்தோல் முதுகைக்
காட்டிக்கொண்டு பிறந்து தொலைக்கும்
குறுங்கிய கொடுங்கோலர்களுக்கும் அவை பூமி;
பின்னிரவின் பூட்டிய கதைவைத் துளைத்துக்
குத்துக்குருதி கசியாமல் ஊசி ஊடுறுத்துக் கழியும்
துளிநாசிநுனிக் கடுங்கோலர்களும் அடங்கும்
எல்லா நகர்களிலும் ஆனதெம் எல்லோரினதும் வாசம்.
தோலும் ஊசியும் பறையும் துளையுமாய்ப்
போன, போகிற பின் முன் பகலிரவுப்போதுகளில்
இந்த நகர் எந்த நகருக்கும் நல்லதில்லை;
சென்ற நகர் இந்த நகருக்குக் கெட்டதில்லை.
முரட்டுத்தோலும் முள்ளூசியும்
ஆவிசோரும் வரை காவித் திரி;
கழி பொழுது; அழி நிலை.

12, மே '02 ஞாயிறு 16:16 மநிநே

மேம்படுத்துகை

இந்த முறை சென்றபோது
எல்லோரும் வந்திருந்தார்கள்.
"காணவில்லை; காணவில்லை"
என்று கண்முன்னே தேடினார்கள்.
"இங்கே; எங்கே?"
நானைச் சொல்லி,
இவரெவர் ஞாபகத்தைப்
பொருத்திப் புறப்பட்ட போது,
அடுத்த முறைக்குப் பிரித்துப்
படிக்காமற் கொட்டிப் பிறிதள்ள,
அடுக்கி வந்தேன் செய்தி.

பொய்

"பிடித்திருக்கிறது" என்கையிலே,
"பிடித்திருக்கிறது" என்பது உனக்குப்
பிடிக்கும் என்று தெரிகிறது.

"கட்டுமா?" என்கிறபோது,
"கட்டும்" என்பதாகின்றாய்;
குரல் தாழின்,
"கட்டாவிட்டாவிட்டால் போகட்டும்" ஆகிறாய்;
உயரின்,
"கட்டித்தான் ஆகவேண்டும்" ஆகிறது.

பரிவேஷம் போர்த்தாமல்
பொய்யென்றே புரியச் சொல்வதைச்
சொல்பவர் செய்யும்வரைக்கும்,
மெல்லிய பொய்யை,
சொல்பவர் கேட்பவர்
எல்லோருக்கும் பிடித்திருக்கின்றது,

'உனக்கு என்னைப் பிடிக்கிறது;
எனக்கு உன்னைப் பிடிக்கிறது'
என்பவை மட்டும் அடக்கமல்ல
இவற்றுள் என்கிறது நினைப்பு.

30, April '02

வழி

என்னதான்
உன் வழிக்கு நான் போவதில்லை
என் வழிக்கு நீ வருவதில்லை
என்றானாலும்கூட, ஏனோ
எல்லோருமே இந்த வழியிலேதான்
போய் வந்து கொண்டிருக்கிறோம்
(என்றானாலும்கூட, ஏனோ
என் வழிக்கு நீ வருவதில்லை
உன் வழிக்கு நான் போவதில்லை).

30, April '02

பேசும் பொருளைப் பேசாதிருத்தல்

'பேசும் பொருளைப் பேசாதிருத்தல்'
என்ற பொல்லாப்
பேசாப் பொருளைப் பேசவந்தேன்*.



நோக்காப்பொருளின்
நோய்நாடி நுணுக்கம் நாடி
நுகர்ந்து நுகர்ந்து கழியும்பொழுதில்
நோக்குபொருள்
நுணுக்கிக் குணுகி
நுதலழிந்துபோகுதுகாண்.

இல்லாப்பொருளை இயம்பின்
வாக்கு வல்லோம்;
வார்த்தை நல்லோம்;
எடுத்தபொருள்
இடைச் சிக்கித் தவிக்க,
தடக்கித் தடக்கிக்
தறியுது காலம்.

பூம்பாவை என்பெடுத்துத்
தோல் பூசுதல் ஆனது
பேசுறும் பேசறு பொருள்;
என்பில்லா வெளி அருவக்
கரு முளைக்க ஒருவர்
உடல் கொடுக்க இருவர்
உயிர்கொடுக்கப் பிறர்
என்று பூக்கும் பாவையர்
பூண்முலை, நாகயோனி
பெருப்பத்தின் பின்னால்
பேசவேண்டுபொருள்
பேசாப்பொருளாய்
பூட்டத்தொலைந்தது
நோக்கு.

தடமிட வந்த திசை மழிக்க, அழிந்து
தலை நோக்கு நிலை மாறு திக்குத் தடவி
நடக்கும் பாதம்;
இனிப்புக்குரியதுதான் இசைவாக்கமெனிலும்,
புதிய தடமெனல்,
அடைந்த முக்கில்
கிடந்து தங்கலும்,
கண ஆசுவாசத்துப் பின்னே
வந்த திக்கில்
தொங்கித் திரும்பலுமாகா.



'பேசும் பொருளைப் பேசாதிருத்தல்'
என்ற இலக்கழிந்த
பேசாப் பொருளைப் பொதுவிற் பேசினேன்;
இனியரு முறை,
எதுவாயினும் எம் இயக்கம்
துடித்துத் தடிப்புற
எடுத்துப் பேசேன் என் நா.



* //பேசாப் பொருளைப் பேசவந்தேன்// //நோய்நாடி//
- எல்லோரும் அறிந்ததுபோல எனது வரிகளல்ல

எதேச்சைக்குறிப்பு

வெயிற்காலத்தின் வெள்ளை வண்ணாத்துப்பூச்சிபோல
இலைகளின் தாழ்வாரங்களிலே தலைக்கீழாய்
ஒளிந்து கொள்கிறேன், வௌவாலாய்த் தூங்குறேன்.

உண்ணாவிரதம் நினைவுக்குவர,
இரவின் பூச்சிகளை மின்னத் தின்னுகிறேன்.
தின்னல் தோற்றாலும் விரதம் காக்க
விழுங்குகிறேன் சாரைகளை.

தெரிந்தும் தெரியாததுமாய் வீதி தோன்றின பெண்களைத்
தொடர்கிறேன்; தாண்டித் தீண்டுகிறேன்; தூங்க அழைக்கிறேன்.
போட்டி நீளும் வரிசையிலே போதுமென வேண்டியவளைத் தேருகிறேன்.

யுத்தம் மிதக்கும் தேசமொன்றை முக்கிமுக்கித் தேடுகிறேன்;
அகப்பட்ட பிரேத ஆழ்வெட்டுப்புண்களில் கவிக் குறிப்பெடுக்கிறேன்;
பசித்த பூமியன்றைப் பாறாங்கற்பல்லால் முறிக்கக் கொத்தி
முளைத்த பிட்சாபாத்திரத்தை மொட்டிற் பறித்து விற்கிறேன்,
அடுத்த கொழுத்த பூமியின் இருட்டு லாயக்குதிரைக்கொள்ளுச்சலம் தாங்க.

துப்பாக்கிக்குள் மையூற்றி துவந்தயுத்தக்காரர் கைக்குட் திணிக்கிறேன்.
அறியாதாரை வன்பொருத வீதிக்கு அழைக்கிறேன்;
இறந்தவரை இன்றைக்கே இன்னாரெனத் தெரிந்து கொள்கிறேன்.

தெரிந்த தெருக்களுள்ளே தெரியாதார் வீடுகள் முளைக்கிறன
உணர்ந்த வீடுகள் வேறொரு வீதிக்கு விந்திக்கொண்டு நடக்கிறன
அறிந்தவர்கள் வெறும்முகத்தைக் கறுப்பு வெள்ளையால்
கோடு பிரித்துக்கொண்டு பேசாமற் போகிறார்கள்;
ஊரைக்கடக்கும் ஓரிரண்டு புதியவர்கள்,
கூடத் தடம் நடக்க குரல் கொடுக்கின்றார்கள்

கோடைகாலத்து அலைச்சற் தெருநாயன்றாய்
நேரக்கடிகாரம் நோக்க நேரமின்றி
முடிச்சோடு புதிரைப் பொத்தெனப் போட்டு
என் முன்னாலே எட்டிப் போகிற நான்.

விரும்பியதையும் விரும்பாததையும்
அலைந்தலைந்து செய்யச்செய்ய
- கனம் பெருத்து கணமொன்றில்
விடிந் துடைந்து வடிந்து போகிறது
வெள்ளக்கனவு.

இடைக்கால அமைதி

"வெடிக்குமா? வெடிக்காதா?"
என்ற வேடிக்கை-விசர் மேவி
சொக்கப்பானைப்பூமியில்
திரி கொளுத்திப்போட்ட
சீனவெடிக்குமுன்னால்
கோணிக் குந்தியிருக்கிறது
என் சனம்.


எப்போதும்போலத்தான்,
எதையும் திடமாய்
எண்ண, சொல்ல, எழுத
ஆகாத
இப்போதும்.


கறுத்த இரவு தட்ட, நெடுநாள்முன்
துவக்குவெடிக்குட் தொலைந்த
கடல்நிலவைத் தேடிப்போனால்
உப்பு மணல் கரைந்து
குப்பென்று நுகர்நாசி
கிட்டும் குளிர்காற்றை
தேவாசுரர் கடைந்து மீந்த
கடைசி அமுதச்சொட்டென்றென்று
உனக்கேனும் உரத்துச் சொல்லி
உறுஞ்சி உட்பை தக்கவைத்து
இளக்கி மெல்லவிடு மேலே;
மூச்சுவெப்பு கிள்ளிக் கரையட்டும்
வெண்கடற்புகார்; உன் உள்ளத்தணல்.

இங்கே சொல்வது மறக்காமல்,
சவட்டைக்கால் கிறுக்குப்பிடித்து
குறுக்காலே பாதை நறுக்கிப்போகும்
சிறுத்த கோணல் நண்டுகளை
செல்நாட்கள் நினைவிருத்தி
நான் அழுத்திக்கேட்டதாயும்
எடுத்துச் சொல் நன்றாய்.
தேசத்துப்பேட்டுக்குருவிகள் பாட்டை
உள்ளுக்குள் இன்னும் நான்
அசைமீட்டிக் கேட்டுக்கொண்டிருப்பதாயும்
ஊட்டிச்சொல் என் உணர்வை.

செல்; விரை; ஓடு...
பிய்யமுன் முழு
நிலவை மோந்து
முகில் நிழலில்
மணல் தூங்கு;
கிடைத்த வெளியில்
அகட்டிக் கைபரப்பு; கால்பரப்பு.
பாதம் புதை; பத்துவிரல் கழுவு;
அலை தழுவ, அடி பதி;
ஓலக்காற்றில், ஓலைக்கீற்றசைவில்
உனக்கோ எனக்கோ
பித்தாய் ஒட்டிப் பிடித்த
ஓர் எட்டு வரி கவிதையை
குரல் பெருக்கிச் சொல்,
கோணமலைப்பித்தனுக்கு;
கேட்டவர் சிரித்தால்,
நாக்குக் கடியாதே;
இன்னும் கேளென்று
முழக்கிச் சொல்
மேலொன்று,
கடல்மேல்,
மணல்மேல்,
காற்றின்மேல்.
இதுவரை எவர் சிரித்தார்?
இனி வரவும் எமக்கெதுவோ?
கலகலத்துச் சிரிக்கச் சொல்,
கத்துங்கடலுக்கும் ஒரு பிடிகவி.
விதைவிதையாய்ப் புதைமணலுள்
சோகி சிப்பி சப்திக்க விசிறி எறி,
இத்தனை நாள் புத்தகப்பொறிக்குள்
அச்சப்பட்டுப் பொத்தி வைத்த
எம் துக்கக்கவித்தொடர்,
கலித்தொகையெல்லாமே.

மேல் காற்றுத் தடவ,
கசியக் கடல் படிக்க,
நற்சுருதிப்பாட்டொன்றை
ஆழப் பொத்திப் புதை
நம் நாட்டு மணலுள்;
நாளைக்கோ,
இன்னொரு வேளைக்கோ,
வரும் எம் வீட்டுச்சிறு
துள்ளல் ஆட்டுக்குட்டிகள்
தாவிப் பறித்துத்தின்ன
தழை இலை முளைக்கும்
பாடல் மரமாகட்டும்
வருங்காலத் தல விருட்சம்.


இப்போது போலத்தான்,
எதையும் திடமாய்
எழுத, சொல்ல, எண்ண
ஆகாத
எப்போதும்
எமக்கென்றேயானது.

யார் கண்டார்?
முன்னைப்போலவே,
பின்னைப்பிள்ளைக்கறியுங்கூட
ஒல்லப் பசியாறட்டுமென்றான
குமிழ்மைம்மற்பொழுதுமாகலாம்
இது.


அதுவரைக்கும் கிடைபொழுதில்,
அகல் தேசத் திக்கேதென்றாலும்,
நகர்நிழலின் வாசம் தக்கித்துயிலும்
அக்கடலின் நீரை இறைத்தெடு
என்னை உன் கைகளில் அள்ளி.
எடுத்துச்செல் கையோடு எம் வீடு....
....செல் வழியில்,
எங்கே காட்டு எனக்கென் இழந்த ஊரை

05, Mar. '02 Tue. 04:38 CST

சேதப்படுதல்

நானுந்தான் பார்த்துக்கொண்டு இருக்கின்றேன்
நாட்கணக்காக.

"எப்படியடா வாழ்க்கை?" என,
"சேதமில்லை" என்று
சன்னமாய்ச் சொல்பவன்,
நாரியும் திருப்பாமலே
நன்றாய்த் தூங்குகிறான்
தினமும்.

யாரெல்லாம் நாளறியாப்போதிற்
புதைத்த நாட்பட்டகேள்விகளைப்
போகவரக் கிண்டிக் கோர்த்து
தெருக் கிலுக்கித்திரிபவன்
இராத்திரிப்போதெல்லாம்
தூக்கமில்லாத் துக்கத்துடன்
பார்த்துக்கொண்டிருக்கிறான்,
தூங்கிக்கொண்டிருப்பவனை.

26, பெப்ருவரி, '02 செவ். 02:44 மநிநே.

கோளறு படிகம்

ஏறாத பரிசல் பற்றிக்கூட எச்சில் பஸ்-சீட்டுக்கவி நாலெழுதி,
சிவப்புச் சி.ரி.பிச் சீற்றுக்கடியிலும் தொலைத்திருப்பேன்
-சில்லறை மிச்சம் தராச் சீமான் சின ஞாபகத்தில்.

காணா வெண் அன்னத்தின் கிடையாக் கூர்க்கன்னம் கூறாய்க்கிழித்தும்
நீர் போம் வழி, பால் போம் வழி -நேரெது / குறுக்கெது- சொன்னதும்
-சின்ன ஞாபகம்.

தோன்றாத் திரிசங்கின் விண்தோட்டத்திற் தோன்று அவச்சந்தடிப்போதெல்லாம்
தலைகீழாய் அந்தரித்துத் தூங்கிச் சஞ்சரித்தேன் எனும் பொய்ச்சாதிப்பும் என் கூற்றே;
வேண்டின், கூற்றுவன் கணக்கன் குப்தன் நாட்குறிப்பு வைக்கட்டும்
- இன்று வரவு ஒன்று.

உப்பிய கறிமிளகாய் ஒத்த கண்ணென்று உள்ளதைச் சொன்னால்,
கவிஞர் ஒப்பனை மரபுக்கு ஒப்பில்லாப் பிசகோவென்றெண்ணித்
தமிழ் கேட்டவர் கற்பனை ஒட்டத் துல்லியமாய்
வாளைமீன் வலித்த வண்ணத்துப்பூச்சிச்

சிமிட்டலென்றோட்டினேன் சிறுகதை -ஒரு முழம்.
மச்சவாடை காணா மரக்கறிக்காளைகூட, காய்வாழை எண்ணி,
"வாழ்க கற்பனை! வளர்க கவிதை" என்றானோ, நானறியேன்.

"அற்றதை உற்றதாய் அவரவ ரிஷ்டத்துக் குரைத்தலன்றி
இற்றை யானறியே னேதும் பொல்லாப்பு; நித்திய மித்திரா,
ஓ! என் இஷ்ட தெய்வமே! தில்லைக் கச்சியேகம்பனே!"


எப்படியோ வாகட்டு மி·தெல்லா மென்றொதுங்கிப் போனாலும் புறம்,
இருப்பின் நிலை ஈன்ற இற்றைக்கவலை, ஏறியகடன், எதிர்க்கருத்து
நரம்பெக்கிக் கத்திச் சொல்கையிலும், கேள் கவனத்தவறாய்,
தம் சொந்தத்தவனத்துச் சஞ்சரிப்பாய், செவிட்டுத்தொனிப்பில்,
"எட மூடா! மூதேவி! எந்த நடைமுறைக்கு மசாத்தியம் இது"
எனு மொற்றைப் பரிகாரத்துச் சுவாத்தியர் பரிவாரம்மட்டும்
சுணங்காமற் சுற்றிப்போகமுடியவில்லை சுள்ளிக்கால்,
- இடமும் வலமும் எதிர்த்தவெத்திசையும்.

விளக்கம்

எடுப்பாய் எத்தனையோ இருக்க, இத்தனைக்குள்ளுக்கும்
ஒரு விக்கலெடுக்கிற தெருவிளக்கேன் பிடிக்குதென்றால்,
சிக்கலுக்குரியதுதான் சின்னக்கேள்வி.

நாள் நசுக்கு மனிதனை நனைமாடாய்க் குறித்து,
கைகட்டி நேரத்தின் கயிற்றுக்கால் நிருத்தங்கீழ்,
"நில்! பார்! போ! கட!" என்று நிறம் சோரா-
-தன்னினைப்பிற் பற்றும் படுக்கும்
குட்டிப்பயலொத்த சட்டாம்பிள்ளைச்
சந்திவிளக்கென்ன சந்தோஷமென்றால்,
சரிப்பட விளக்குதல் வெகுகடினம்.

ஞாபகம்

இறங்கி நேரே வந்தார்

"இன்னாரோ?" எனத்
தந்தார் கை
"எங்கே மீசை?" என்றார்

இருவாரம் தங்கிப் பின்
இருந்த சுவடும்
இழுத்தழித்துப் போனார்.

வருநாட்போதெல்லாம்,
முகம் வழிக்க, முன் உதித்து,
"ஓசிப் படத்தில் தன்பாட்டில் முளைத்த
ஊசி மயிரெங்கே?"
என மட்டும் கேட்டுச் சென்றார்.

தலைப்பு

நிச்சயமாக;
யாரில்லையென்றார்?

தலையில்லாமற் திரிவது தர்மசங்கடத்துக்குரியதுதான்.

அதைவிட அசிங்கமாயலைப்பதோ,
முதற் பிறந்த முண்டத்தையே
தலை முகம் திரித்தழிப்பது.

ஆக,
முன் சிரம் வந்து முண்டம் பின்சேராப்போதெல்லாம்
தலையில்லாம லிழிவதே முண்டத் தற்பாதுகாப்பாகிறது.

05, பெப் '02

மதியச்சலிப்பெழு தலைப்பிலி

அடர்வண்ணாத்துப்பூச்சிப்பாலங்களை அடுத்தவன் தேசப்படமாய் மட்டும்
பொய் மனனம் பிடித்து பொத்தி வைத்துக்கொள்ள, கோப்பைத்தேனீருக்குட்
தத்தம் நிறக்கற்பிதமான கனவுகளைக் கலந்துவிடும் திட்டக்கல்வியுடன்
சொட்டி ஒட்டியூரும் அப்பன் அம்மை விந்துப்பேத்தைகள் விதைசூலகங்கள்
வெடித்த நாட்களைப் பற்றி எழுதக்கூடிவற்றுள் இஇவையும் அடங்கும். . .


நேரம் நைத்துளைத்து பஞ்சுப்பொதித் தேசம்
இழை பாரம் பிய்யப் பிரிய,
பறிந்தெறிந்த ஒல்லித்தும்புச்சினைமஞ்சள் பீறிப் பெய்து
வீழ்நிலங் கீறி முளைத் தங்கு மிங்கும் தங்காதாய் எம்பி
ஓயாக்காற்றில் ஒட்டிக்கொள்ள ஓர் ஒப்பற்ற இஇறை தேடும்
அழிகுப்பைநிறச் செட்டை சிறுத்த
செல்லிடத்துக்காட்டுப்பூச்சிகளானோம், நாம்;
இஇலக்கிலிக்காற்றாடல் எதிர்போதலானது எம் களமெலாம் நிகழ்வினை.

புழுக்கை பூத்துப்போர்த்த நெற்போருக்குள்
பல் நெருமிப் பகல் பட்ட பாரிய போர் இளைக்க,
இஇருள் முளைக்க நெருங்கிப் புழுங்கும் வாழ்க்கை
புழங்கும் வளை வாயில் எமது செல்நேற்றும் சிறுத்தழியின்றும்.

என்றாலும்,
தலை நிமிர்த்தக் கிடைக்கும் ஆவிக்கணங்களிலே,
நிலையிழந்த சுண்டெலிக்கும் முகரப்பிடிக்கும் சின்னப்பூக்கள்
எல்லாத்தேசத்தும்தான் இங்குமங்கும் சத்தப்படாமல்
குவி மொட்டை வெடிக்கிறன

02, ஜனவரி '02

இராமபாணம்*#

ஆதியிலே ஒரு சொல் இருந்தது.
அதிலிருந்து கிளைத்துப் பிறந்தன இரண்டு.
மீதி தொடரத் தாவி மேலேறியது மரக்கிளை.

அறிக;
ஆதிக்கு முன்னாலும்,
முளைவித்தை அவியாமற் காக்கும் சேதியுண்டோர்,
காலனை விண்டோர்.
ஆக்கத்தின் ரகஸ்யம் அறிந்த நசிகேதனும், அரிப்பின்
அவதி தாங்காமற் சொல்லிப்போனானோ,
நம்மாள் கையில் சிருஷ்டியின் பாஷ்யம்?

வாதத்தை வானரத்து வாலாய் வளர்த்தித் தீவைத்தோர் வாழ்ந்தார்;
திண்ணை நெடுக்கத்தீ
அடுப்புமுகடு,கவட்டுமுடுக்கெல்லாம்
தடதடத்துப்போகுது பார் தண்டவாள ரயில்;
பிடித்த முயலுக்கு முறித்தகாலைப் புறமொளித்து,
முழுக்க மூன்றுகால் என்றடித்துத் திணித்த விவாதம்;
அவதாரபுருஷன் புரண்டுறங்கும் யுகங்கூட,
புறத்தே ஒருங்கிக் கண்மூடியடுங்காது
விழுது பெருத்துத்தூங்குது பார் "இராமபாணம்"

பள்ளி கொண்டபுரத்தைப் படைத்த அனந்தபுரத்துப்
பத்மநாபனைக் கணம் எண்ணிக்கொண்டேன்;
சத்தமின்றிப் பெற்றான்;
சலனமின்றிச் சஞ்சரித்தான்;
தக்கித்தான் தமிழில் தன்னிடம்.
-----

*நிலைமறுப்புக்கூற்று: இராமபாணம் என்பது ஓர் மத்தியகால
புண்ணியபாரதத்துக்கற்பனை ஆழாத்திருநகரியல்ல; திராவிடப்பாரி,
இடதுசாரி, வலதுசாரி, பாதசாரி, எறும்புச்சாரி, அனந்தச்சாரி, டம்பாச்சாரி, ஜி
ப்பாவாலா, ஆசாடபூதி எதுவோடும் எத்துணைச்சம்பந்தமும் சீர்வரிசையும் அற்றது. வரைவிலக்கணம்
வேண்டுமென்பது கட்டாயமானால், கிட்டத்தட்ட வாலியை ஒளிந்திருந்து தாக்கிய
இராமபாணம் என்றே கொள்ளலாம்.


# 'விஷ்ணுபுரம்' மீதான ஆண்டுக்கணக்கான ஜெயமோகனின் தாங்கமுடியாத அலட்டலுக்கு வழுவல்-நழுவல்-ஜார்கனின்றி அர்ப்பணி க்கப்பட்டது.

இரவின் தலைப்பிலி~1

ஏனென்று கேளாதீர்கள்.
இரவின் கண்ணுக்குள் எல்லாம் எனக்குள் மாறுகிறது.

அடர்ந்த குகைக்குள் கண் அவிந்த நிழற்சந்நியாசியாக
அலைந்துகொண்டிருக்கும் ஆரம்பங்கள் கிழம்படவும்
களம் பின்வாங்கித் தோன்றித் தொடர்ந்து,
அரங்கின் ஆரம்பத்துக்கே திரை தொடங்க வருகிறேனோ?

சங்கம்புழையையும் மாயகோவ்ஸ்கியையும் அங்கங்கே
செவிவழிச் செய்தியாயும் உதிர்ந்த சிறகுகளாகவும்
அறிந்ததன்மேலாக அறிந்து கொண்டிருக்கவேண்டியது
இவன் கட்டாயம் என்றில்லையென்றாலும்கூட,
ஆத்மாநாமின் ஆவி திறக்கும் ஆழக்கிணற்றின்
அவிசுண்ணக்காளவாயைத் தவிர்க்கமுடியவில்லை.

நில்லா நேர்பாதையாய், கால்கீழே மூண்டு கருங்கோடு நடுங்கக் கீறி
கடல்நீரோடு நெடுவான் வீழ்ந்தூரச் சாயும் தொடுவரைகிடுகும் பிரித்துத் துளைத்து
நீண்டுகொண்டே போகிறது நேற்றைய நாட்பொழுதென் றொரு போதும்,
உரு வரையில்லாக் கணம் ஒன்று வைத்தபடி
தன்னுள் என்னை எ·குத்தாழ் பூட்டி, நீர் வியர்க்கத் தரித்து,
சாறூறத் தாம்பூலம் தின்று துப்பித் தின்று துப்பி, தப்பலில்லா
அசைபோடும் அசைவின்மை யிதுவேயென்று மறு போதும்
-புரிகின்ற இப்பொழுது,
உடல் ஒட்டிய ஒன்றா, ஒன்றுபடாப் பக்கவாட்டு நகர்வா,
எதேச்சையாய்க் குத்தெனக் கூறிவெட்டுவதா
என்பதென் இரவுகள்.

ஒழிந்த தசாப்தங்களுக்குரிய ஓயாத உணர்கோஷங்களின் தொகுப்பை
முகமடித்து வீசும் ஒரு தென்திசைக்காற்றின் கந்தக நாற்றத்தை
காரமூச்சிழுத்து கரகரக்கப்பாடும் வேலை சிதறிய நடைசாலை
ஓட்டைச்சொல்கொட்டியின் காறற் றுப்பலைத் தருவது என் வாய்.

முகத்தை முன்னுக்கு வைத்துக்கொண்டு,
மூளையைப் பின்னோக்கித் தள்ளும்
சாமப்பொழுதின் கிளைத்த கைகளின் நகத்தழும்புகள்
வரித்துக்கொண்ட என் கழுத்துத்தடி;
கால் நில்லாக் காய்ச்சற் றுடிப்புகள்
அலைபாயும் மேலுக்கும் கீழுக்கும்.

எதேச்சை மூர்க்கத்தில் சாலைமேடுகுழி மோதிச் சுயம் போகிற
இரும்புத்துருக்கோளத்துள்ளிருந்து,
கீறல் படாமல் வெளிக்குதிப்பதெப்படி என்ற
வித்தை கற்றதன் சாரம் செப்பத்துணி
மௌனப்புத்தர்கள் சுயமறு சித்தர்கள்
அருட்சொட்டுச்சொல்லின்பின்,
என் கட்டைவிரல் கேட்கலாம்.

குறைந்தபட்சம் இந்தப் புத்திசீவிகள், போதனாசிரியர்களின்
-எனக்குரிய எழுத்து, இசை, நினைப்பு, நடப்பு, காலம், கழிவறை-
எல்லாத்துக்கும் நல்லதெது தீயதெது வகுக்கும் எல்லைக்கோட்டை
வல்லமையில் வயிறறைந்து எச்சில் துப்பிக் காலாலழிக்கும்
சின்ன முட்சப்பாத்துக்குருகூட சாத்தியப்படுத்தலாம்
என் அடைகாலக்குமிழ்வெடிப்பு.

அறிவீர்களா,
ஆத்மாநாமின் அந்தக்கிணறு புசிக்கும் வாய் பெருத்தது.
அதன் முதிர்ந்த பின்புறத்திலே பிதுங்குவதோ,
அண்டம்பேசும் அடர் கருந்துளை?

நன்றிக்கடன்

"வரண்டபொழுதுகளில் நெடுத்து நீண்டேன்;
நான் நடந்த வனப் பாலையின் மேலாற்
பாதங்களுக்கு குடைப்பாதையாய் வளைந்தேன்;
அளந்தடி கிடந்தேன்; வால் நீட்டித் தொடந்தேன்;
இருண்ட என் நிழலாலே பிளந்த தரையைத்
தலைவருடிப் பிடரி தேய்த்துத் தடவிக்கொண்டேன்;
பின்பும் நடந்தேன் பெருந்தூரம்.
இதுநாள் எனைத் தாங்கிய பூமியின்
இதய அக்கினியைக் கணம் என்னுடல்
ஏந்தித் தணித்தேனும் இழந்தேன்
இற்றைக்கடனின் ஒரு பகுதி... முதுகில் நடுப்
பகலின்னும் பல் நெருமி உதைத் துறைத்தது"

Lexus for Driving #

காப்புவேர்
-------
திரிசடைச்சாமியின் திரிசூலத்துக்கும்
கறைச்சாத்தானின் கூர்ச்சூலத்துக்கும்
வேற்றுமை தெரியாத வெற்றாள் நானாதலால்,
பொறுத்துக்கொள்ளவேணும் புலம்பல்.


வேறும் விகுதியும்
------------

இந்நாள் விஞ்ஞானவித்தையிலே ஒரு சொட்டு,
கோப்பை நீர் விட்டுக் குடித்ததும் கன தப்பாய்ப்போச்சு;
தினம் ஒற்றைப்படைக்கயிற்றிலே நடை பயிலலாச்சு வாழ்வு.
சொன்னாப்போல்,
முப்பட்டைக்கண்ணாடியில் முகம் பார்க்கிற ஆள் நான்;
முட்டாளாய்த் தோன்றலாம் என்றாலும்,
செவி கேட்கிற சொற்களைக் கட்டுடைக்க
அரிய முப்பட்டைக்கண்ணாடி பின்னால்
ஆள்முகம் பார்க்கிற ஊதாரி நான்.

புத்தம் சங்கம் தர்மத்தை# உடைத்தபோது,
தொடங்கியது என் அரியக் கட்டுடைப்பு.
பின்னர், பதி பசு பாசத்தைப் பிளக்க,
அடுத்த கட்டத்தில் அதன் உழைப்பு
இப்போது, நீர் சொல்லாமற் சொல்லுகிறீர்
"அவிழ்த்துப்பார், பிதா சுதன் ஆவியின் குடுவை"
சொலமன் குடிமகன் பின்னால், கடல்மிதக்கும்
அநாதைக்குடுவை திறந்த முதல்மகன் நானில்லை;
அதனால், கிஞ்சித்தேனும் அறிவேன்,
குடுவைகள் உள்ளே குடியிருப்பன பற்றி.
பக்கத்துவீட்டு பப்பா டொக்*, பேபி டொக்* கதை நிறங்கள்
குறுக்க உடைத்துப் பார்த்ததும் உண்டென் அரியம்.
பிதாவை அறிந்தவன் புத்திரனை அறியானோ?
மூடி உடைக்காமலே உள்ளே தெரிகிறது மூட்டப்புகை.

அத்தோடு ஐயா நீர் அறிந்திருப்பீர்;
மஹாகனங்களை முற்றாய் மறுக்க இத்தருணத்தில்
சாமான்யனிடமில்லை மனோதிடம்;
என்றாலும் மன்னித்துக்கொள்ள வேண்டும்...
உம்மை அதியுத்தமராய் நம்பத்தான் என் விழைவு;
'Axis of evil' என்று நீர் சொல்லியிருக்கக்கூடும்தான்;
... ஏனோ, என் செவிப்பறையிலேனோ
'Texas for oil' என்றுதான் அறைபட்டது.

புரிகிறது;
தர்க்கவித்தைச்சொட்டொன்றை ஒட்ட நக்கி,
கட்டுடைக்கு மாடியைக் காதுபூட்டியலைவது
சர்வ முட்டாட்டனமானது.

~~
# இலங்கையின் பௌத்தசிங்கள ஆதிக்கவாதம்

* Papa Doc Duvalier, Baby Doc Duvalier: Haiti's Father-Son Dictators

அறிதல்

எந்த வைத்தியசாலைக்கு முன்னாற் காத்திருக்கையிலும்
என்னையும் உன்னையும் அறியமுடிகிறது.

தலைக்குமேல் ஒவ்வோரிடுக்கு மூலையிலும்
தலைவிமுகங் கண்டு தாளா வகமுரை
சங்கத்தோழி சரச்சொற்கோட்டில்
'சைக்கிக்' மங்கைமொழித் தொலைக்காட்சி;
வைத்தியத்துக்கும் மேலேயிருப்பவன்
வைத்தியநாதனன்றோ?
இங்கே வைத்தியத்தின் அடிநாதம்,
"In god we trust!"
..Doctors too trust this "note".

விபத்தைத் தெறிக்கும் சிவப்பு அவதியில்
குறுக்கே போகிறது குறுங் கோளக்கார்.
அதைத்த வெள்ளைச்சுற்றுக்குள் மெதுவாய்
முறிந்தகையன் மோவாயைத் தடவுவான்.

கிழட்டு மனிதன்- குழவிப்பேச்சு
கரட்டுத்தோல்- கண்களில் நீர்
மிரட்டும் மீசை- கரைந்த உள் முரசு
அதட்டும் குரல்- தடக்கும் நடை.....
முரணின் மோதல் இன்னொரு முரணில்
குறுக்கும் நெடுக்கும் கோடுகளிழுக்கும்.

தாய் பறித்த பைக்காய்ப் படுத்துருளும் குழந்தை
வலித்துதறும் குழந்தையிடம் பறித்தெடுத்த கைப்பை
பைகொடுத்த தாயிடம் பாய்ந்தேறும் குழந்தை.....
ஒரு சுழற்சியில் இயங்கும் சுற்றி என் உலகம்.

இதுவாய், -இலகுவில்,
-இந்தச் சின்ன நகர் வைத்தியசாலைக்கு முன்னாலும்
என்னையும் உன்னையும் எல்லாமாய்
எல்லோரிடமும் இனம் காணமுடிகிறது,
- புற்றுத்தடை விளம்பரத்தட்டி மறைப்பில்,
தெருக்காற்றுத் தடுத்துச் சுங்கான் பற்றும்
மருத்துவப்பேராசான் மனநிலை மட்டும் தவிர்த்து.

Monday, December 20, 2004

நார்சீசதேசம்

முக்கலுடன்,
தற்காமச்சந்துகளில் நாமிடுங்கிக்கொண்ட அவலம்.

தன் தேகத்தை, தேசத்தை, நினைவை,
குறியை, குடியை, குலத்தொழிலை மட்டும்
உள்ளபொழுதெல்லாம் ஒருமித் துணத்தி யுலர்த்தி
கசங்கக் கொடி போட்டலைந்து திரியும் விதைகளம்,
மணம் காயா வெயில் மனம்.

பட்டறையில், கைக்கெட்டும் பின்முதுகின் அழுக்குப்படை
செதுக்கக் கிடைத்ததாம்,
சீருறு காக்காப்பொன்;
என் மினுக்கம்! உன் மினுக்கம்! எம் மினுக்கம்!
இறைத்திரைத்து எல்லோர் முற்றத்துக்கும்
இஷ்டப்போக்கில் இடுமெம் கோலங்கள். . .
. . . பொடிகள் மட்டும் அவர்களதாகட்டும்

உள்ளவிரல் தாண்டி
எண்ணப் பெருகும்
தன்னழகில் அழுந்திக்கொண்ட நார்சீசதேசம் எத்தனை?
. . . . . உள் எல்லை குறுகி இறந்த கரப்பான் எத்தனை?

~~~~
*'நார்சீசதேசம்' என்ற பதம் தேவதேவனின் `நார்சீசவனம்' என்பது தந்த எண்ணத்துண்டம்

கூடல்

அழிவு கடித்தறுத்துப் புடுங்கப் புடுங்க
பாலையிலே பல் முளைத்துப்
பரந்து கொண்டே போகிறது
இந்தப்பக்கத்துப்புல்வெளி.

உரு இடுங்கிய இருள் யாமத்தில், மருளுட்பொருதி
உடை கழற்றி உச்சாடனம் செய்துருக் கொள்கிறது
உடற்காமம் தற்பொருளில்.

மூசிகவேட்டையின்போது வியர்த்துக்கொட்டுகிறது
வெளிச்சம்போக பதுங்கிக்கொள்கிறது பகற்பண்பு;
வேர் பிரிந்து வேறொரு தவனத்தில் விரையும் விரல்கள்
எனதா? உனதா? வேறாளினதா? அடையாள வேடிக்கை வேகும்.
தேடலுக்குத் தீவிரக்கால் முனைத்து முளைக்கும்
தேவை தான் தோன்றியாய் தெருவுமின்றி அலையும்
திகம்பரசாமியாய்த் திருவோடு தாங்கி.
வாசிப்பும் யாசிப்பும் தம்பேதம் உருகி
ஒன்றாய்ச் சொட்டும் உள்ளண்ணத்தில்
வெம்மை.

கொம்பும் சங்கிலியும் குலைந்து,
நெருப்பாய் நடுங்கிப் பிதற்றும்
கொள் களிப்பும் களைப்பும் இடம் தொலைந்து.
மூசும் மூர்க்கத்தை உரசிமோதும் உள்முனகல்
கூடும்; குறை சொல்லும்; பாடபேதமே பாவமாக்கும்;
பற்றுக்கொண்டு பற்றிக் கொண்டு பற்றியளிரும் உயிர்.

மேலே மெல்லப்பற்றும் தீ மேல் படர்ந்து அள்ளிக்கொள்ளும் ளை
அடுத்த கணம் கருகிச் சொருகும் விழி, சுருங்கும் வெளி, அவதியாய்
அதைத்தொடரும் அம்புதைத்து காலம் அகாலமாகி அறுந்துதொங்க.

வெள்ளம் மதகுடைய,
துள்ளிய கலம் துவளும், மெல்லக்குளிரும் மேனி
மிதப்பு பையப்பைய பிள்ளைநடையில் இறங்கும் படி
தள்ளாடிச் சரியும் தலை; குருதிபாய்பள்ளம் மூடும் மூளை
எல்லை எழுந்து முள்வேலி சுற்றும்; விரித்தாடை தோல் மூடித் துளிர்க்கும்.
காலைத்தேவைக்காய்த் தனைத் தேடிப் பொறுக்கி,
பொத்திப் பத்திரப்படும் பகற்பண்பின் மாண்பு.

பசுமை பொசுங்கும் புல்; வெளி வெடித்தாகும் பாளப்பாலை.

இனி, எல்லாத்திசையும் கள்ளமோனம் மட்டும்
கடல்நண்டாய்க் கால் கவடிக் குறளும்.

ஓர்டபன் தெருவில் உதயவோட்டம், 02, ஜனவரி 2002

இனியெல்லா மொழியும் எனதாகுக எனதாகுக
பஞ்சிறகின் படபடப்பும் எனதாகுக எனதாகுக
மென்றுகிலின் மெதுவெப்பும் எனதாகுக எனதாகுக
காரிருளின் கனவடர்வும் எனதாகுக எனதாகுக
சிறுகுஞ்சின் புத்துயிர்ப்பும் எனதாகுக எனதாகுக
கருமுகிலின் ஈரலிப்பும் எனதாகுக எனதாகுக

துளிர் தழைக்கும் பருவகாலம்,
உடல் சடைக்கும் உயிர் முளைக்கும்
மேவுக என் மேனி இளஞ்சூட்டு உன்மூச்சு
தாவுதல் காணும் மனம் தாழாது நின் நினைவில்

அடுத்தாகுக நானோர் ஓயாவாறாய்
அல்லதோர் உணர்வூற்றின் தாழாழியாய்
ஊழித்தீயோடையிலே ஊசலாடும் தோணியுயிர்
ஒப்பற்ற வெளியினிலே துறை நாடி அலைதல் நிலை

வித்தான காலையிலே சாலைப்படு சக்கரவாழ்க்கை.

24, ஜனவரி '02 வியாழன் 07:35 மநிநே

அவதானிப்பு

அவர் அவதானிப்பதை அவதானித்ததை
அவதானித்தாரா என அவதானிக்கவில்லை.
அவரவர்க்கு அவரவர் அவதானிப்பின் அவதி.
அங்கே இங்கே தந்தி தட்டும் பறதிக்
கண் ஜாடைக் கணக்கு மட்டும் தப்ப,
அவதானிப்பின் அர்த்தமே
அடுத்தவரை அவதானிப்பதை
அவரடுத்த எவரும்
அவதானிக்கவில்லை
என்றாகிப்போகுமோ?

08, பெப்ருவரி '02 வெள்ளி 16:32 மநிநே.

விரல்

கிடத்திவிட நிலைத்துக் கிடந்த நெடும்பாதைகளுக்கே
விறைத்த முரட்டுப்பிடிவாதம் இருக்கிறதை மறுத்து,
பிரித்த விரல்களை அடுத்தவன் பிடிவாதம் பற்றி
பிடிவாதமாய் நீட்டிக்கொண்டிருக்கும்
களைத்த பாதசாரிகள் விரல்களுள்
அடங்காச் சில விரல்களில்
இந்த வரிக்கப்பால்
எனதும் இல்லை.

21, பெப் '02, வியா 02:46 மநிநே.

பகிர் பூட்டு

நட்ட கிளை நாவல் இடறிச் சரிக்கவும்
வீசிப்பரவு குழல் குருதிபூசி முடிக்கவும்
வில்லங்கப்படுத்தும் பொழுதுக்குப் பதுங்கி
ஒரு நிறைகள்ளனைப் போல் நடக்கும்
வேளையும் எனக்குண்டு.

கழற்ற முடியாத காலாணிபோல
அறுக்க அறுக்கவும் அடரத் தழைக்கும்
எனக்காகாத நானும் என் வேலிக்குள்
எதிரும் புதிருமாய் தின்கோப்பை பகிர்வதுண்டு.

என்றாவது
எரியும் தணலை உள்ளங்கை பொத்தி
எடுத்தலைந்திருந்தால்,
உனக்கும் தெரிந்திருக்கலாம்:
"உள்ளவற்றுட் பொல்லாதது,
உனக்கே நீ பகுங்குவது"

ஆனாலும் சொல்லுவேன்:
"அவ்வப்போது முளைக்கும்
அந்த அரிவாளுக்கப்பாலும்
அகப்படாத்துண்டேனும் உண்டு,
நான்."

21, பெப் '02 வியா 02:18 மநிநே.

நடைப்பொழுது

ஆகாப்பொழுதென்பது
நிறபேதமுள்ளது;
ஒன்றில், உயர்ந்தது;
அன்றில், தாழ்ந்தது.

சதுப்பு வெளி
சளசளக்க
உரத்தநடை.

மழைதூறிச் சிணுங்கும்
சதங்கைக்கால்களைக்
கழற்றிப் பொதி வைத்து
மோனம் காவும் முதுகு.
பின்னிருட்டில், பேசாமல்
உதிர்ந்து தொடர்கிறது
எதிர்க்காத பயணிக்கும்
வரப் பொறுக்க முறுவல்.

நிலவொழிய,
காலடியே மெள்ள முளைக்கும்
கள்ளன் கொள்ளிவாய்ப்பிசாசு;
செருமிக் கரகரக்கும்
கண்டற்காற்று மட்டும்.

சதுப்புவெளியிலே
ஒற்றையனின்
உரத்தநடை.

அசந்தர்ப்பங்களில்,
சதங்கையின் சிறப்பே
நெடுநிசப்தம்தான்.

21, feb 2002 thurs 01:28 CST

சிள்வண்டு

எல்லோரிடமும் பறந்த வண்டு என்னிடமும் வந்தது;
"எங்கே என் கேள்வி?" என்றலைந்து,
கம்பிக்கண் காலிரண்டும் தந்தி கொட்டியது.

வாழ்க்கை ஓர் ஆவணக்கேடு;
நேற்றுத்தின்றது இன்றெங்கு கழிந்தது
என்பதைப் புள்ளி பதியாமல்,
அடுத்த தின்னலுக்கு அலையும் தடக்கயிறு.

'எந்தன் அம்மாவுக்கு இன்றென்ன அர்த்தம் நான்?'
-என்றேன்;
"கொன்ற உனக்குக் கூடாது இக்கேள்வி",
சொன்னது,
"கண்டு கன வருடமாச்சு" என்று பறந்தது,
இன்னொரு கேள்வி தின்னப் பிறிதிடம்.

18, பெப்ருவரி 2002 திங் 06:09 மநிநே.

Wagging the Dog in 1984

மண்டை நிமிண்டி, முன்னுச்சி மயிர்பிளந்து,
வெல்லப் பொழுது மெல்ல மென்று மீளரைத்து
எண்ணக்கரு தின்றும் கவி கதை சிலை சித்திரம்
என்றேதும் முளையாமல் பின்னைக்குப் பார்ப்போ
மென்றுடற் றண்டைக்கிடைப்போட்டுத் தூங்கி,
விடிந்தெழுந்தான் கலைஞன் மோசிகீரனாய்; இனி,
கலைவாழ்வுக்கு அரசுவீசும் கற்பனைச்சாமரை.

~~

இன்று முதல்,
கடிதக்கிண்ணத்தில் வரும் கருத்து;
கதை முடிவு முன்னுக்கு வரும்;
தலைப்பு வால் பின்னுக்கு வரும்; நீளும்.
கணநேரக்கதாபாத்திரம் போட்டிருக்கும்
உட்கச்சைக்கும்கூட விழும் கரும்பன்புள்ளி.

நாசி நச்சுநெடிபட,
அரசுக்கோப்புக்குட் தூங்கும்
படக்கலைக்கருத்துநெறி.

கதைநடையில் உரைபடு நீதியெல்லாம்,
பத்துக்கட்டளைக்குட் பத்திரப்பட்டிருக்கும்
என்றொரு பச்சைப்பொய்மட்டுமே விற்கப்படும்.

சட்ட நுணுக்கங்கள், சம்பிரதாயங்கள்
கத்தரித்துத் தைத்தாடையாய் வரும்
விற்பனைப்படுதலுக்கு; முன்தோற்கும்
விளம்பரம் தம் நிமிடப்பொய்முகம்.

புத்தகத்துக் கட்டைப்படம்
போடும் பொறுப்புமட்டும்
பத்துத்துண்டாய்ப் பங்கிடப்படும்,
பத்திரிகையாளர்,
பத்தி எழுத்தாளர்,
பதிப்பாசிரியர்,
பதிப்பாளர்
என்ற பட்டியல் வரிசையிலே.

பத்துக்கு மூன்றுக்கு ஒன்று என்பதுபோல்
சித்திர வர்ணக்கலவைக்கும் விதிவரை வரும்.
சொட்டும் கூடாது குறையாது கலந்து
நடத்தலெல்லாம் கலைநாட்டியம்தான்.
படைத்தலென்றால், முன்
படைக்கப்பட்டதைப் பண்
பிரித்துக்கோர்த்துப் பின்
பக்குவமாய்ப் பத்திரப்படுத்தென்றாகும்.

மிச்சத்தொழிலெல்லாம்,
மோசிகீரனுக்குச்
சாமரம், கவுரி, சந்தன மயிற்பீலி;
எட்டத்திருந்து வீசும் அரசுத்துறை;
சட்டப்பெட்டகம் சொல்லும் சரிபிழை.

~~

சோக்கிரட்டீஸ¤க்கு
ஒற்றைக்கோப்பைக்குள்ளே
எடுப்பதா கோர்ப்பதாவென்
றொடுங்கிப்போனதுலகம்;
சுற்றித் தப்ப வழியிருந்தும்
நகக்கண்ணும் சப்பி நக்கி
முடித்தான் முழுச்சொட்டும்.

எமக்கானதோ,
கலிலியோவின் நடுவிரலை
இன்னொருநாள் சேவிப்போம்
என்றியங்கும் தினபயக்காலம்.

சொன்னேனா? அன்றே
செத்துப்போனான் சோக்கிரட்டீஸ்.

16, நவம்பர் 2001 வெள்ளி 04:14 மநிநே.

இலக்கியவிசாரியின் எடுகோள்கள்

உள்ளே தூங்கிக்கொண்டிருப்பது கலை உலகம்
வெளியே விழித்துக்கொண்டிருக்கும்
ஒற்றைக்காவல்நாய், நான் மட்டும்
- தெளிந்த தூக்கம் வராதலைபவன் நான் என்றாலும் நீ.

ஒட்டி எழுதியவன் உருப்பட வழியில்லாதான்;
வெட்டியெழுது; விரட்டிப்போ வேறாள் கருத்து;
சுற்றி வை சூழல், உன் சொல் கேட்டு
மற்றோனை அறம் பாடும் மத்தளச்சுற்றம்;
உள்ளபடி உணர்ந்துகொள்
- உண்மை என்பதும் உற்பத்தியாவதே.

அங்கு எந்தப்பக்கத்தும் உருள்வது இருளும் மருளும்;
இந்தப்பக்கம் வா; இதோ என் சூரியசாம்ராஜ்யம்.
என்னைப் பற்றிக்கொள்; இறுக்கியணை உடலம்;
இழு கோட்டை எமக்கப்பால் - இந்தப்புறம், அந்தப்புறம்;
இனிச் சொல்வோம் - இந்த இரட்டையரைக் கோட்டை விட்ட
விமர்சக மட்டியராற் செத்ததாம் இற்றைமொழியின் எழுத்து.

உனக்குத் தெரிந்த தெதுவோ தெரியவில்லை,
எனக்குத் தெரிந்து என்னதெல்லாம் இலக்கியம்
-உன்னவை,
என்னைத் தழுவாவிடத்தெல்லாம்,
நான் உரக்க முன்னவை சொன்னவதாம்.

18, நவம்பர் 2001 சனி 15:17 மநிநே.

In the process of solving A human jigsaw puzzle*

எங்கெங்கும்,
இரைக்குப் பறக்கும் புள்ளிப்புள்ளிற்
கழன்றதொரு கிழட் டிறகாய்ச் சுழன்று
இருட்டு இரவை நோக்கிக் குவிகிற உலகு.

~~

கணைக்கும் எதிர்க்கணைக்கும் முனை
படா திடை விரற்கடைத் தரை கிடக்கும்
கணையறு உயிர்களுக்கானதென் விசனம்.

கைப்பற்றும் என் கணங்களைப் புசிக்கவிடாது
கவனம் அங்கும் இங்கும் அடுத்தவன் துயரில்
- அடைக் கிடந்தேடி யலைந்து கேரும்
பேட்டுக்கோழியின் பொழுதுப்புலர்ச்சி.

நியதி உடைத்துக் குழப்பிப்போட்டதொரு
மனிதப்பொருத்தற்புதிரைத் திரும்பியமைக்க
அலைவேன் வளி துருத்தும் உலைத்தெருவில்.

குருவியை, மரங்களை, இளமாதர்முகங்களை
குறிவைத்துப் பாடிய எனது பருவகாலம்
அரளி பருகி அடி தறிந்திறந்ததொன்று;
ஒரு தனிமனிதனைத் தாளாது விறாண்டும்
கிழட்டு உரோமப்பூனைவிசாரத்துக்கான
ஓயாத உள்விசாரணை, கயிற்றிற் கல்தூக்கிப்
பருத்துத்தொங்குகின்ற புடலை. . .
. . . பாரப்பட்டு நகர்கிறது பரந்த பூமி நோக்கி.
ஒவ்வொரு தனியனும் தன்தன் விசாரமாய்
அமுக்கிப் பதுக்கிப் பொத்திக்கொண்டு
வெட்கத்திலலைகின்றான் பொது விசாரங்களை. . .

. . . அலை நின்று நீர் மொண்டு குளிக்குமோர்
ஆழியைத் தேடியலைந்து கொண்டிருக்கின்ற
ஓரிரு மனிதர்ப்பேடிகளில் நானுமொருவன் . . .

. . . இற்றைச் சின்னத் தேவையெல்லாம்,
எனது புசிக்கும் பொழுதுகளில்
அடங்கா அமிலச்சுரப்பில் அவிந்திருக்கும்
அவன் வயிற்று உள்வளைவிளிம் பெழுந்து,
வெறும் விரல்களை மட்டும் நனைத்து விசிறி
எழச்சொல்லி அடித்து விரட்டாதிருக்க
ஏதோவொரு மார்க்கம்; வேறில்லை. . .
. . . அப்படியானதொரு, நெடு அலை நின்று
கைச்செம்பு நீர் முகர்ந்து குளிக்குமொரு
தூங்கிய ஆழியைத் தேடியலையும்
ஓரிரு மனிதர்ப்பேடிகளில் நானுமொருவன் . . .

~~

அசைவு நிலை அதுவாகி, அறுநிலையும் அதேயாகி
அறுகாற் சிறுபறவை யஞ்சிறகால் வீசும் -ஆடிச்
சிறுகாற்றுக் காற்றாது அமைவு தேய்ந்து -ஆடிக்
கீழுதிர்ந்தாடு மிதழின் நிலைதெறி ஆடியாம்,
குருட்டு இருட்டில் இரவின் நிரப்பல் நோக்கிக்
குலுங்கித் தளும்பி இறங்கிக் குவிகிற உலகு.

நள்ளிரவில்,
நனைந்தும் தூங்கும் நகர்ப்புறத்தே நதி;
தேக அழலில் வரண்டு அலைவேன் நான்.

பொறுக்கிய புதிர்கள் பொருந்திடம்தேடி
முளைகுத்தி, தத்திப் புரளும்.

~~

எழுதியவனை இழுத்துச் சாய்த்ததன்றி எழுத்து எதையும் சாதித்ததெனாது சரித்திரம்
- என்றாலும், எழுதாமல் அடுத்த அடியிறக்கத் தன்னைத் தூக்காதாம் என் வெடித்த பாதம்.

இனி, எதையும் சொல்க; ஏற்றுக்கொள்வேன் - இயலாமையின்
கழிவிரக்கத்தை வழித்துக் காவும் ஏமாற்றுக்கவியென்பதை மட்டுமன்றி.

-/.
18, நவம்பர் 2001 ஞாயிறு 02:05 மநிநே.

* Human Jigsaw- இந்தச் சொற்பயன்பாடு, ஆப்கானிய அகதிகள் சம்பந்தமான பிபிசி தளத்திலே யாரோ ஒருவர் எழுதிய கருத்திலேயிருந்து எடுத்தாளப்பட்டது.

தாய்த்தமிழுக்கு வணக்கம்

முற்காலதிக்காத துல்லியதமிழ்த்தாத்தாக்களைத் தெரியும்.இப்போது,திக்குத்திக்காய் அலகு குத்திமுளைக்கத் தத்திக் கொண்டிருக்கிறதுஒரு தமிழ்மாமாக்கள் பரம்பரைஎன்று சொன்னால்,குறி தப்பாமல் தப்பானதமிழ்த்தாதா வேனோ நான்?
இலக்கணம் இவரின் சொத்து;இலக்கியம் அவரின் சொத்து;இடைப்பட்ட சொத்தை மட்டும்எனக்கான பிதிர்த்தேங்காய்ச்சொட்டு.
சரித்திரத்திற் கிவர் வாரிசு;சாஹித்யத்துக் கவர் வாரிசு - மீதிச்சரிப்படா சங்கதியெல்லாம்சக்கடத்தா னெனக்கென்றாச்சு.
கைக்கோல் பண்டிதன் கக்கம்;கத்தரி காண் விமர்சகன் சட்டம்;கத்தரிக்கும் கோலுக்குமிடைஅந்தரிப்பதெந்தன் கட்டம்.
தத்துவத்துக் கொப்பவர் கூடு;நட்டுவித்துக் காப்பவர் பாடு; -தின்னத்புட்டவித்து விற்று நாளும்போஷாக்கு பார்ப்ப தாரோ?
ஓரிரண்டு ஒப்பில்லாமொழி திக்காத முற்காலத்தமிழ்த்தாத்தாக்களைத் தெரியுமென்றாலும்கூடஇப்போதுதான்,திக்குத்திக்காய் வாயலகு குத்திமுளைக்கத் தத்திக் கொண்டிருக்கிறதுஒரு தமிழ்மாமாக்கள் பரம்பரைஎன்று சொல்லமட்டும்,குறி தப்பாமல் தப்பானதமிழ்த்தாதா வேனோ நான்?

16, நவம்பர் 2001 வெள்ளி 04:22 மநிநே.

Tremors*

இதை வாசிக்க முனையும் ஒவ்வொருவருக்கும் ஒரு சின்ன வேண்டுகோள். இதை வாசி க்கமுன்னர், உங்களுக்கு நம்பிக்கையான எந்த இணையச் செய்தித்தளத்திற்கேனும் சென்று, கண்ணைக் குத்தும் தலைப்புச்செய்திகளையும் கண்டுகொள்ளாத சின்ன எழுத்துச் சில்லறைச்செய்திகளையும் ஓரிரு கணங்கள் தயவு செய்து நுனி மேயவும் அல்லது முகரவாவது செய்யவும். நன்றி.

மலைத்துப்போய் நிற்கிறோம்;
ஆள்சேனை யம்பெல்லாம் ஊர்கூவியழைத்து
இழுத்துப்போகின்ற பெருமண்குதிரை ஊர்வலம்.
முள் வேலிக்கப்பால் முகத்திரையட்டி
நின் றெட்டியெட்டிப் பார்த்தயர்ந்து
மலைத்துப்போயிருக்கும் மனம்.

மல்லுக்கட்டி ஊர் மாமல்லரெல்லாம் மாய்ந்தாலும்,
உதிர்மண்குதிரையுங்கூட உவர்மணற்றெரு
கட்டியிழுக்கத் திமிறுதாம் கழுத்து; முட்டுது;
மூசமூச முகம் வெட்டுது திசை வேறெங்கோ போக.
கட்டுப்படாதாம்; கடலுக்கு வராதாம்; கரை கடப்ப,
மூளித்திட்டுத்திட்டென்று கரையமுடியாதாம் முழுவுரு.

மொத்தத்தில், மொக்குப்பரிமுகத்து முக்கலில் முறுக்கலில்
சுத்தமாய்ச் சத்தமற்று இலயித்திருந்தோம் சித்தம்; சினந்தோம்.
சண்டியர்கள் சாட்டையடிக்கு, வானரமாய் வால் சுழற்றிக் குதித்தோம்;
"சரிதான்; பரி சவப்படப் போடு சட்ட"மெனச் சத்தமிட்டோம் வானதிர.

நிகழ்சுழல் பத்துமுறை சுற்றியதாம்; சூழல் முற்றிலும் தொடங்கியது முதலிருந்து.
சண்டை சலிப்பேறச் சற்றே குனிந்தோம்; அலை சலனித்தோடியது நிலமணல்.

மலைபடுமண்மாவுக்குக்கீழே மண்ணுள்ளே
கண்படாது கலைந்தோடும் திமில் வளையங்கள்
கால் சுற்றிக் கொடியேறி ள் கவரும்; நெளியும்;
நெருக்கி நொருக்கித்தின்னும் இரை;
அரக்கும் அடுத்த நிலை தரைக்குள்.

உள்ளே பாதாளம்; தடதடத்து உலாவும்
மலைப்பாம்பும் மண்ணுண்ணிப்பூதங்களும்.
ஒன்றையன்று பின்னிக்கொள்ளும்; பின்,
பிணங்கும்; பேரிடி முழக்கமிடும். பீறிட்டு
விலங்காகிப் பிளந்தெழும் பெரும்பூமி;
அள்ளி விழுங்கும், அஸ்வ வேடிக்கை பார்க்கும்
ஓரிரு பட்டாளத்து முட்டாளாள் முழுக்க.
முழுத்திருப்தி; முடங்கும் தரையுள்;
மோகத்துள் மூர்க்கமாகி
முயங்கிக் களிக்கும்
முன்னைக்கும் பின்னைக்கும்.
மாடாகி மலம் கக்கவும் கூடும் மயக்கத்தே.

மண்ணுண்ணிப்பூதங்கள் தம்முள்ளே மணம் முடிக்கும்;
மலைப்பாம்புக்கூட்டம் குட்டியிட்டுக் குதூகலிக்கும்.
தமக்கு வேண்டின், பிரி நாக்கைப் பெருக்கிப் பரந்து
நிலமண்ணைப் பிளக்கும்; சுழல்தலை கண்ணுடன் மிதக்கும்;
வெறுவிண்ணை, வேடிக்கைப்பரியை, பட்டாளத்தைப் பார்க்கும்
உத்தியறு உன்னை விழுங்கும்; ஏமாளி என்னை விழுங்கும்.
பின்னையேன் மண்பரியை, பின்னலையும் திண்தோளரை
இன்னும் தம்வழியே இவை உள்ளள்ளவில்லையெனில்.
கொஞ்சம் நில், குனி, கூர்ந்து கவனி, நிதானி. . . . .

. . . . . இந்தப் பரி பாகர் பாம்பினைத்தான்,
பதி பசு பாசமென்பேன் நான்;
பிதா சுதன் வியென்பாய் நீ.

என்னவோ போ!
எம்மையே ஏமாற்ற வாகுமென்றால்,
தரை தடுக்கி எடுத்ததெல்லாம்
தலை சிறந்த தத்துவம்தான்.

'01 நவம்பர், 11 ஞாயிறு 02:02 மநிநே.
-----

*இ·து ஒரு திரைப்படத்தலைப்பு(ம்கூட)
http://us.imdb.com/Title?0100814

பூட்டு வியாபாரிகள்

பூட்டு வியாபாரிகள் வீதி மூட்டுக்கு வந்திருக்கிறார்கள்.
அவர் பின்னால்,
உடுக்கைக்காடும் உறுமற்சாமிகள்போல்
அடுக்கடுக்காய், காது, கவடு கிழிந்து
கீழ்த்தொங்க கிளர்ந்து கிளைத்தலையும்,
அடக்கமில்லாக்காவாலிக்கோலத்திலே
அழுங்குழந்தை அழுங்குப்பூட்டுக்கள்.

கறுப்புக்கலந்தும் சாம்பல் கலைந்தும்
பூனைகளாய்ப் பதுங்கிக்கொண்டு
கொழுக்கி நிழல்கள் ஒட்டிக்கொள்ள
வீட்டுத்துவாரம், தாழ்வாரம், தாழ்ப்பாள் தேடும்,
ஒவ்வொரு முற்றப்படியிலும் ஒட்டுமுகம்.

விரலிடுக்கில் விலாசம் வைத்து,
வீட்டின் படலைகொண்ட மூலையெல்லாம்
இரும்பு முளையடித்து கருவிலங்குபோட்டு
நகரும் பூட்டுவியாபாரிக்கூட்டம்.

விற்போர் விறலிவித்தைமகுடியுடன்,
மடங்கித் தொடரும் பூட்டுமந்தை.
பலகை மரம் படலைச்சிலாகை காண,
இடுப்புப்பை நழுவிச் சுவர் படர்ந்தேறி,
ஒட்டிக்கொள்ளும் ஒவ்வொன்றாய்ப் பூட்டு.
திறப்பு மட்டும் துளைத்திரை விலக்கி நகரும்,
விற்பனையாளன் முதுகுப்பெட்டகத்துள்ளே.

இனி, திருட வருபவன் ஓட்டைப் பிரிப்பான்;
தெருவில் விற்பவன் திறப்பை நுழைப்பான்.

பூட்டிய ஓட்டுவீட்டுக்குள்
நம் படி-கூரை-நாற்சுவர்க்குள்ளேதானேயென்று
பலகதை தினவம்புகள் தும்பிடப் பேசியபடியே
நாளெல்லாம் பொய்த்தெம்புடன் நாமெல்லாம்
துப்பித்துப்பிச் சோற்றுப்பருக்கை தின்றபடி.

நடுநிசி உறக்கத்தின்போது,
சிராய் திமிர்த்த உன் ஓட்டைக்கட்டில் விளிம்பிலும்கூட
திடுமென நீ விழித்து, முன்னெப்போதும் முகராவிதத்தில்.
எதிர்முகம் எண்ணிக்கை முற்றிலும் தெரியா,
பயம் கப்பி அப்பிய முற்றிய இருட்டில்,
பொய்ச்சத்தியக்கடதாசிக்குப் பெருவிரல் மைமுத்திரை
எப்படியெனாமல் நச்சு நச்சென்றழுத்திக் குத்தும்
வெகுவில்லங்கவேளையும் விரைந்து விளையலாம்.
யார் கண்டார்?!

ஊளையிடும் நாய்கூட நாடி செத்து உயிரற்றதுபோல்
ஓசையின்றித் தூங்க வேண்டிய உன்மத்த காலமும் ஒரு நாள்
உன்மடியில் ஆரவாரத்துடன் உட்கார வரும் பார்
ஆட்படை அணி அதனுடன் சேர்த்துக்கொண்டு.

களப்பதிவுப்புத்தகத்தின் வெளியட்டைக்
காகித ஒற்றையினைக் கசக்காமற் திறந்து பார்;
உலக வெப்பம் நத்தைப்பசை நகர்வாய்,
தீப்பற்றிக் கிறுகி, சுற்றி ஏறுதென்று
தள ஆய்வுகள் சும்மாவா செப்பின?
காண்.

கண்டாயா?

10, நவம்பர் 2001 சனி 02:43 மநிநே.

அப்பப்பா ஒரு பரியாரி

My grandfather was a spin-doctor and witch-hunter

அப்பப்பா ஒரு பரியாரி;
பக்கவாத்திய செப்படிவித்தை, செய்வினை சூனியம்
- உபபடி.


உமிப்பெட்டிக்குள் மூடிய முட்டை
அவர் இரட்டைக்கைதட்ட, கனைக்க,
பெட்டைக்குஞ்சாய்ப் பஞ்சு சடைக்கும்;
குறுகுறுத்து குறுநடைக்கும்; நிலம் கிறுக்கும்;
குறுணி அரிசி ஊத்தைமணலுட் தேடும் கூனல்மூக்கு.
குஞ்சு நடை சலிக்க, மதியம் அவிக்க,
மூளைக்கு வெண்முட்டைத்தவனமெடுத்தால்,
கவிழ்கூடைக்குள் கதறிப்போகும் சிட்டு;
நட்டுவனராய்த் தட்டுவார் கூடைத்தலை, முழப்பூவரசந்தடி.
கொக்கரி சத்தம் சட்டெனச் சாக,
திறந்த கூடைக்குள் உருளும் திரண்டு கோழிமுட்டை.
அப்பொழுதில், முட்டைதின் நாக்குத்தவனமோ
முற்றிலும் செத்துப்போச்சாம் அவர்க்கு;
பின், முட்டை தன்பாதி உதரம் உட்தாட்டுத் தூங்கும்
அரைநித்திரைப் பக்குவத்தில், உத்தரவிதானத்து உள்ளறையில்,
வாயிறுக்கிக்கட்டிய வட்டத்தவிட்டுப்பெட்டியுள்.
இப்படியாய், முட்டையும் குஞ்சும் சுற்றிச்சுற்றிப்
பிறக்கும்; பருக்கும், நடக்கும், பறக்கும்,
படுக்கும், சுருக்கும், முடுக்கும், துளிர்க்கும்,
மீளச் செட்டையடிக்கச் சிட்டென்று பிறக்கும்.
சுத்தமாய் முட்டை அவித்துரித்துத் தின்னாமல்,
முழுப்பெட்டைக்கோழியாய் முட்டையிட்டுக் காணி குதறி உலவாமல்,
முட்டைக்கோ குஞ்சுக்கோ முழுதடையெல்லோ வாழ்சுற்றென்ற
இந்த முட்டாளின் கேள்வி மட்டும் பிடிக்காது மூத்த பரியாரிக்கு.

"முட்டைக்கு உயிரில்லை; குஞ்சுக்கு மதியில்லை; அப்படியானதினால்,
இதை இட்டுக்கட்டிக் காக்கும் பக்குவப்பொறுப்பு, என் தென்னந்தலைக்கு."
இப்படியாய் ஒரு பதில்.
"முட்டாளே! ஆசைக்கு அவித்துத்தின்றால், அந்த முட்டை போச்சு;
அளவுமீறி வளர்த்துவிட்டால், கிழமாகி, கோழி, சுருங்கிச் சாகும் சூறு.
நாசமறுவானே! நல்லற்ப உயிரொன்று அய்யோவென்று
செத்துப்போக வேண்டும் என்பதோ உன் சித்தம்?"
-இன்னொருபோது, இப்படியுமாகும் எனக்கான பதில்.

"மூத்த பரியாரி, அற்ப உயிருக்கும் சொற்ப
வில்லங்கமும் கிட்டச் சொட்டவிடா உத்தமனாம்"
என்றது நித்தமும் சுற்றம், சூழல்.
அவருறவு வலுகிட்டடியில் ஒட்டியதால், ஊர்ப்புத்தியிலே
ஒளிர்ந்தொழுகியது முகமெல்லாம் எனக்கும் நல்வித்தகம்.

இத்தனையும்,
அடியுண்மை அவர் செத்துப்போம்நிலையில்
மொத்தமாய்க் கட்டுடைத்துப் புட்டுச்சொல்லும்வரை,
திமிர்த்து நிமிர்த்தின தம்நெஞ்சு,
திடத்த வல்முதிரை உலக்கையாம் தாம்:

"எதிர்க்கழுகைப் பிடிக்கச் சிறுகுஞ்சைக்காட்டு;
காலத்தைக் கடத்த, வை கைமுட்டையைத் தாட்டு.
தறிக்காதே என்றைக்கும் பொன்முட்டைத்தாரா தலை.
உள்ளுக்குள் முட்டையோ குஞ்சோ முக்கியமில்லை;
உன் அடுத்த நிமிட இருப்பு. எல்லாமே,
இற்றைப்பாட்டுக்குக்கான தாக்காட்டுத்தாலாட்டு."


அப்படியாய்ச் செத்துப்போன என் அப்பப்பா ஒரு பரியாரி;
இப்ப பார்த்தால்,
பக்கவாத்திய செப்படிவித்தை, செய்வினை சூனியம்
-இப்படித்தான் வழி வந்தது, வரும்வழி முற்றிலும்
கைநக்கிச் சப்பிச்சாப்பிட அவர்க்கு வரும்படி.

'01, நவம்பர், 07

PTA-POTO-PATRIOT

~~~~~
இப்படியாய்,
எங்கள் தங்க மகராசாவுக்கு,
பற்றைக்குளிருந்து பாம்பு பாய்ந்தபின்னே
காலிலே கடியும் அரையிலே நெறியும்
இழுப்படிக்கும் கடுப்பான
அடுப்புக்காலமொன்றுக்காய்த்தான் காத்திருந்தேன்.

காற்சட்டை (ழி)ஜிப்பை இழுத்தறுத்து,
பொத்தி வாய் மேலே தைத்துக்கொண்டேன்.
என்னைப்போல், உன்னைப்போல்
பரந்த தெருவின் பகற்பொழுதில்
ஆண்குறி தெரிய இன்னும் பலர் அலையக்கண்டேன்.

சத்தமில்லாக்காட்டில் செத்த சங்கேதம் செய்தி பேசாதோ?
எல்லாச் சங்கதிக்கும் கைச்சைகைகளைமட்டும்
சாக்கிட்டு சாயையிட்டு
நடுவிரலை நட்டுயர்த்திக்காட்டிக்கொண்டோம்
உச்சந்தலைச்சூரியனுக்கு;
நமக்கே வெற்றி.

பாலோ பியரோ ஏற்றியவிதத்திலே ஏற்றிக்கொண்டோமுடலில்.
சேர்ந்தது சேர்த்தது செரிமானமாகித்தான் ஆகவேண்டுமாதலால்
ஏற்றியவிதத்திலே எதையுமே ஏற்றுக்கொண்டோமெம்முடலில்.

காற்றுப் போனது, ஆடுகிற காகிதத்து அடிப்பொலியில்,
மூக்கிலா மூலத்தூடா என்பதில்லையாம் முக்கியம்;
களைப்பின்றி ஓசைப்படக் காற்றுப்போனதே களிப்பாகும்;
கண் விரி; நல்லாய்க் காண்.

*****

பெண்கள் என்ன பண்ணினார்கள் என்று
பேசிக்கொள்ள எவர்க்கும் பொறுதியில்லை.
கண்கள் மட்டும் கறுப்புடைக்குட் தெரிந்ததாம்.
திரைக்குப் பின்னால்,
வாயிழுப்பான் இருந்தென்ன? இழுத்தென்ன?

*****

எங்கும்போல், என்றும்போல்,
எங்கள் அரைநெறி ராசாவும்
இன்னும் அரைவெறியில் அங்குமிங்கும்
அலைந்துகொண்டுதான் இருக்கிறார்.

தீர, தீரச்தெருச்சண்டைகள் ஒன்றிரண்டு தேவை.
வாரீர்! வாரீர்!! வாரி வழங்கீரோ நல்வாய்ப்பு?

*****

நான் போய் அற்ற திரிசங்கு சொர்க்க நட்சத்திரம்பற்றி
பற்றற்று உற்றதொரு வற்றற்குழம்பாய்க்கதை வடிப்பேன்.
நம்ப மறுத்தால்,
தொடர்நிழலாய் வந்து பார் பின்னே.....
..... நான் நகர்த்தவில்லை நுனிநாக்கும்.

கிளித்தட்டு

இலகுபண்ணி எல்லோரும்தான் எட்டிப்பாய்கிறார்கள்....
இங்கும் அங்கும் இடதும் வலதும்
வடக்கும் தெற்கும் கிழக்கும் மேற்கும்
மேலும் கீழும் உன்மேலும் என்மேலும்

தாவிப்பாய்கிறது தட்டிப்போகக்கிளி.

கறுப்பு வெள்ளையென்று
கரை கிழித்த கரிக்கோட்டில்
ஒடுக்கப்பட்டுக் கிட
அல்லது நுரைகக்கக்
கிளிகூட ஓடியடி
உள்ளேயிருப்பவரை.......
ஒதுக்குப்புறமாக இருந்துமட்டும்
'திரும்பிப்பார் வந்த திசை;
பொறுத்துச்செய்'யென்று
போதித்தொரு சொல் சொல்லாதே....
மெய் வல்லவன் வகுத்துவிட்டான் வாய்க்கால்.

இரைத்தோடும் எருமைகள்முன்
உள்ளமுங்கத்தான் கனைக்கமுடியும்
இளைத்தவை.

பெட்டி கடந்து வியூகம் பிளப்பதன்
தட்டுகிளி தலைமூழ்கி
கிழிகழுகு ஓடிச் சிரிக்கும் கோடு உட்குழியும்.

பெட்டி எங்கும் பறக்கும் பறவை;
பிறாண்டும் நகம்

அலைதல்

அலையத்தோன்றினாலும்.,
நிழல்களேதுமின்றி அலையமுடியுமா..
..தெரியவில்லை.

கொடிகளின் பின்னாலும் கோஷங்கள் பின்னாலும்
நேற்றைப் புதைத்து நிகழ்வுகளை மூடியபின்னர்,
-ஆடையைக் கழற்றிப்போட்டு அங்குமிங்கும்
ஆனந்தத்துளிக்காற்றாய் அலையத்தோன்றினாலும்,-
தொடரும் நிழல்களேதுமின்றி நேரடியாய்....
......அலையமுடியுமாவென்று
...........அறுதியிட்டுத் தெரியவில்லை.

'01 செப்., 12

வழுப்படு தலைப்பிலி - VII

நீண்ட நகங்கள் நோவுக்கான நிமித்தங்கள்தான்.
ஆனாலும், சீழ் விடாமற் தீண்டிக்கொண்டிருக்கிறது.
நகம் தேடி நகர்கிறது முகத்தெருவில் முள்முனை முகவரி.

நோய் நீங்க நோகக் கிள்ளுது நுனி நகம்.
கக்கும் வலியோடு காகிதக்கோடாகி நகர்கிறது சீழ்.
வழிந்தது எழுதி முடிக்கும்போது,
விரல் இன்று சென்ற திசை இனி வேண்டாம் வேண்டாம் என்று வேண்டிக்கூம்புது நுனி
கூடி.
சீழ் கொன்ற பாவம் உள்ளே நுனி நகத்துக்குக் குறுக்கும்.

ஊறாதே உறையாதே என பருச்சீழுக்கு சொல்ல முஇடியாது.
பரு முலையின் முளை பிடிக்கும் இடம் காலம் அறியாதது தானெனும் முகம்.
தேகத்தை மாற்றமுடியாது என்றால்.....
தப்பிப்பிழைக்க,
... சே!
...இதற்குமேல்
எத்தனை நாள்தான் வாழ் திக்கை மாற்றுவது?

31, ஒக்ரோபர், '01 00:20 மநிநே.

வழுப்படு தலைப்பிலி - VI

காவற்காரர்கள் தெருக்குதிரைகளிலே போவதைக் கண்டேன்;
குளத்திலே படகிலே முதலை தேடிக்கொண்டிருந்தார்கள்;
வானத்திலே பறவைக்கு வலைகளைப் பரப்பிக்கொண்டிருந்தார்கள்.
ஆமாம், நான் கண்டேன்தான்.

திருட்டுப்போனதைத் திரும்பத்திரும்பக் அலுங்காமற் கண்டேன்
திருடர்களைக் காணவில்லை.
திருட்டுப்போனதைத் திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டேன்
திருடர்களைக் கேட்கவில்லை.
திருட்டுப்போனதைத் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டேன்
திருடர்களிடம் பேசவில்லை.

காவற்காரர்கள் கடந்துபோனார்கள்.
திருட்டின் விபரத்தை நான் கேட்கக்கூடுமோ?
திருடர்களுக்குத் திருவோடு பிடிப்போரைத் தேட
திருட்டின் விபரத்தை நான் கேட்கக்கூடுமோ?
காவலின் கூறு கவனமும் காதும்
கூறெனக்கேட்பதும் கூற்றுவனாகுமோ?
அலைகின்ற நாய்களில் வெறியெது அறியாது.

"திருடர்கள் திரியலாம் திகம்பரர் உருவிலே
திருடர்கள் புரியலாம் தெரிந்தவர் வடிவிலே
திருடர்கள் உறையலாம் தீங்கிலார் மனையிலே"
-திரும்பத் திரும்பச் சொன்னார்கள் காவலர்.

திருட்டுப்போனதைத் திரும்பத்திரும்பக் அலுங்காமற் கண்டேன்
திருடர்களைக் காணவில்லை.
திருட்டுப்போனதைத் திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டேன்
திருடர்களைக் கேட்கவில்லை.
திருட்டுப்போனதைத் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டேன்
திருடர்களிடம் பேசவில்லை.

திருடரும் காவலரும் ஒருமித்த ஜாதி.
வருவார் புரிவார் அகல்வார்
ஆனால், அறியார் எனைப்போல் அரைவௌவால் ஜாதி
திருடர்கள் உருவாய் காவலர் கண்ணில்
காவலர் நாயாய் திருடிகள் முன்னில்
எனக்கென இருப்பது ஏதுமில்லை வடிவு
எனக்கென இருக்கலாது கருத்து.....

"நீ திருடர்கள் தெருவா? காவலர் பிரிவா? எது??"
எனக் கேட்டால், மனை எதுவெனச் சொல்வேன்??
இடையினமேதும் இருக்கலாகாதென்றால்,
இரு வல்லினம் நடுவே மிதிபடு மெல்லினப்புல் நான்.

30, ஒக்ரோபர், '01 23:59 மநிநே

வழுப்படு தலைப்பிலி - V

கிடைக்கும் மூங்கிலெல்லாம் ஊதிக்கொண்டு நகர்கிறேன்...
இன்னும் பிடித்த ஓசை பிறக்கவில்லை.
எறிந்த மூங்கிலையெல்லாம் எவரெவரோ இசைக்கிறார்...
பிறந்து நகர்கிறது பிடித்த பேச்சு.

இருந்தும் மரத்துக்குருத்துமூங்கிலைத்தான் உடைத்துக்கொண்டும் ஊதிக்கொண்டும் நரம்பு
விடைத்துப்புடைக்கத் திரியமுடிகிறது.

பிறர் பிடித்தெறிந்த பேச்சுக்களையும் பிடித்துப் போட்டுக்கொள்கிறேன்
வாய்விரித்த சுருக்குப்பைகளெல்லாம்.
கைப்படத்தொட்டவுடன் சுருதிசெத்துச் சரிகிறன.
சொற்களை மட்டும் சுருக்கிக்கொள்கிறேன் பைவயிற்றுள்.

படகுட் பறியோடு, ஆற்றில் தூண்டிலைப் போடாமல்
காட்டுமூங்கிலும் கைப்பையுமாயா நடந்து திரிவான்,
ஒரு கசட்டுமீன்பிடிப்பான்?


30, ஒக்ரோபர், '01 23:32 மநிநே

வழுப்படு தலைப்பிலி - IV

கடக்கும் ஒவ்வொரு நகரத்திலும்
அதே கதையை முகங்கள் பேசிக்கொண்டு நகர்கிறன.

என்ன,
வேகம்தான் நத்தையா நண்டா நரியா என்று திக்குத்திக்காய் தத்தும்..
முகங்களின் கதையேனோ முற்றுமே ஒன்றுதான.

நாடகப்படியன்றை நாலு குழுக்கள் நடித்ததுபோல,
படிமங்கள் தடித்து கலைந்தலையும் தனித்தனியே
தமக்கான முகங்களின் கட்குழி தேடி....
கதையேதோ அதுவேதான்.

உதிர்க்கும் சிரிப்பு சொல்லும் கதையை
ரௌத்திரம் உதிர்க்கச்சொல்லும்போதும்
தனிப்படத் தன்னைக் காட்டிக்கொள்கிறது கதை....
அதுவேதான்.

வரக்கிடக்கும் நகர்களைக் கடக்கும்போது,
கண்களை மூடிக்கொள்வேன்;
நினைவில் நடித்துப்பார்க்கக்கூடாதோ நான்,
கதைக்கு என்னிற்படுமேதும் இரஸத்தை?

30, ஒக்ரோபர், '01 23:13 மநிநே

வழுப்படு தலைப்பிலி -III

எல்லாம் முடிந்தபின்னால்,
கால்களில் நீர் உரசிக்கொண்டோம்;
கைகளைக் கழுவிக்கொண்டோம்.
நகரும் போது நரம்பிலே நன்னியது கொக்கி
- சேற்றிலே நனைத்துக்கொள்ளவா பிறந்தன கைகள்?

காற்றைக் கிழித்துக் கரிக்கோட்டைக் கீறிக்கொண்டாலும்,
கலங்கத்தான் செய்கிறது....
மூளியுருவைக் கீறிக் கெட்டது புல்வெளி;
மழுங்குரு உடல் கெளித்தது விழி, கோணியது வாய்.
படைத்த பாவம் புடைத்துப் பருத்து விடை கேட்டு
நகர்ந்தது அலைபாதம்தொட்டுப் பின்னால் நாயாய்
- ஒயிலை மழுக்கவா பிறந்தன கரிகிறுக்கும் விரல்கள்?

ஒதுக்கப்பட்ட ஓலைக்கப்பாலான அகல்வெளியில்
தவிர்க்கப்பட்ட மனைகளையும் வரியப்பட்ட வேலிகளையும்
நினைத்தும் உடைத்தும் போன தடங்கள் தளராது; தாளப்பட்டுக் கேட்கும்
- விலக்கப்பட்ட நிலங்களை மிதிக்கவா பிறந்தன பாதங்கள்?

எல்லாம் முடிந்தபின்னால்,
இரைத்திறைத்து எல்லாவற்றையும்தான் கழுவிக்கொண்டோம் என்றுதான் பட்டது
- இவ்வளவும் எதற்கென்ற எண்ணத்தைத்தவிரவோ??


'01 ஒக்ரோபர், மநிநே.

வழுப்படு தலைப்பிலி -II

அவரவர் வாசலிலே சுடுமரணம் நிற்கிறது.

விரல்களைப் பற்றி விபரித்துக்கொண்டிருக்கிறேன்.
நகக்கண்ணிலே முளைக்கக்கூடிய பருப்புத்தாவரத்தைப் பற்றிய
நொண்டிப்பாட்டாக இருக்கிறது எனது மொழி.

கவரப்பட்டவை பற்றியும் பேசுகிறோம்;
கவர்ந்தவை பற்றியும் கலந்தாலோசிக்கிறோம்.
கொடுமரணம் மெல்ல நிழலுக்குள் முகம் புதைத்து நிற்கிறது.

எல்லாருடைய பெயருக்கும் எழுமூலம் குறித்துக்கொண்டிருக்கிறேன்;
என்னிடம் ஏனென்று கேட்கக்கூடாது -
ஆனால்,ஏற்கனவே இன்னார் இன்னாரென எல்லாம் எழுதியாகிவிட்டது.
மரணம், மதியத்துப்பள்ளிக்கூடப்பிள்ளைகள்போல,
தெருமதிலுக்குப் முன்னாலும் பின்னாலும் முகத்தையும் முதுகையும்
ஆட்டிக்கொண்டிருக்கிறது.

இன்னும் கரைந்து கொண்டிருக்கிறது நேரம்,
சீனி திகட்டத்திகட்ட தேநீர் புகட்டிக்கொண்டு
பேசிக்கொண்டிருக்கின்றோம்
பெருமிதம் பிடுங்கியடுத்த பெரும் பழங்கதை.
மடக்கமுடியாமல் மரணம் தன் மனத்தோடு மல்லுக்கட்டிக்கொண்டிருக்கிறது.

"எல்லா அத்தியாயங்களும் எப்போதோ எழுதிமுடித்தாகிவிட்டது"
என்று நகர்கின்ற தெருவிலே படரும் யாரோ சொல்லிக்கேட்கிறது.
நாமோ விடுவதாயில்லை விரல்களின் வீரப்பிரதாபங்களின் விபரிப்பை.
செவிக்குள் ஊதுகிறது வெண்சங்கு; சேமக்கலம் சாபம்போட்டதுபோல் சத்தம்.
தருணம் பார்த்து மரணம் தட்டும் முன்வாயில்.....

..... நீ திறக்கிறாயா,
இல்லை,
நான்தான் போகவேண்டுமா?

'01 ஒக்ரோபர், 30 22:32 மநிநே.

வழுப்படு தலைப்பிலி-I

என்ன சொல்லக்கூடும்?ஏற்கனவே தெரிந்ததுதான்...இதற்குத்தானா?இவ்வளவுதானா?
என்ன செய்யக்கூடும்?எதுவுமில்லை.இம்மியளவும் அசையவில்லை,காற்புல்லும் கைவிரலும்.
என்றாலும் வெளியேசொல்லிக்கொள்ளமுடியாததென்னவோ,இழந்த நாளும் இரைந்த எண்ணமும்தான்.
விக்கிரமாதித்தன் தோளிலே ....
..... வேறென்ன?தோல் திரும்பிப்போட்ட ஆரம்ப வேதாளம்.அதே!
'01, ஒக்ரோபர் 30

Friday, December 17, 2004

குரங்குப்பொம்மைக்கொலு

நவராத்திரி முடிய
குரங்குப்பொம்மைகளின்
குழுக்கொலு.

புதிதாகச் சேர்ந்தவை
இரு மந்தி.

தீயதைக் கேளாதே
தீயதைக் காணாதே
தீயதைப் பேசாதே;
சட்டம் சொன்னது
- பெருந்தீட்டு.

தீயதைத் தொடாதே
தீயதை முகராதே;
மருத்துவம் சொன்னது
- பெருந்தீங்கு.

மந்திக்கொன்றாய் தன் புலனடக்கல்.

"குறியின்றிக் குதிக்கப்பிறந்தவையா
குந்திக்கொலுவிருக்கப் பிறந்தவையா
கொப்புக்குரங்குகள்?"
- கேட்கமுன் காண்க,
எங்கும் ஐம்பொறியும் ஒன்றாய் அடக்கிய ஆறறிமாக்கள்


27 Oct., '01

தனக்குமட்டுமான இருட்டுமூலைச்சருக்கம்

unedited, will not be and there is no will

எவரும்
-குறிப்பாக இவனில்லாத அவன்
அணுகமுடியாத
எனது இருட்டுமூலைகளுட்
சமயங்களிற் தேங்கிக்கொள்வேன்.

நெற்றிப்பொட்டுகளிலோ
காதுப்பறைகளுள்ளோ
வாய் உள்ளண்ணங்களுள்ளோ
வெடிகருவிகளை விரைந்து
விரல்சொடுக்கிச்செத்துப்போன
கவிஞர்களும் கலைஞர்களும்
என்னோடு உலாவிக்கொண்டிருக்கின்றார்கள்;
எம்மைப் பற்றிய உரையாடல் முடிந்தபின்னர்,
தம்மோடு எழுந்து கூட நடக்கச்சொல்கின்றார்கள்.

மலைகளும் அகழிகளும் அழைக்கும்போது,
தனி மணற்பருக்கை, துளிநிணச்சொட்டு
தோலும் சதையும் சோரக்கருகிக் கலைந்த நெய் கலந்து வடிய
உருகிப்போய் உன்னதத்தின் உச்சத்து ஒன்றாகி
அவதிநினைவு அளைந்தழிந்து அலைகின்ற அகதிமுகமாறி
அத்தனை பேரான அக்கினிச்சுவாலைக்குள்ளே
தனித்துவம் தொலைந்த வெப்பமாய் வெளிச்சமாய்
வீழ்ந்துபோகலாம் என்றோடிக்கொண்டிருக்கிறது.

சேற்றுவீதிகளிலே சாணம் பொறுக்கித்திரிவதிலும்
கூடிப் பேசிப்போகலாமே போகலாமே
என்று பிடித்துத்தள்ளிக்கொண்டிருக்கிறது
உள்ளேயே பூட்டிக்கொண்ட அங்குசத்துக்கூர்.

இருந்தும் ஏதோ இந்தப்பக்கம்
இழுத்துப்பிடித்துக்கொண்டிருக்கின்றது;
என்னிலும் வலிதாய் என்னை மீறியதாய்.....
"போகாதே, புரிந்துகொள், போகாதே"
என்று இழுத்துக்கொண்டே இருக்கிறது
இந்தப்பக்கம் ஏதோவோர் ஈர்ப்பு.

ஏதென்று தெரியாத இந்தப்புற ஈர்ப்புக்கும்
வா என்றழைக்கும் அவர்களின் அழைப்புக்கும்
இடைப்பட்ட் பிரதேசத்தின் மேலே இடி கீழே மின்னல்.

எனக்குள்ளே ஏதோ எரிந்து கொண்டிருக்கின்றது,
என்னையும் எரித்து என்னைச் சார்ந்ததையும் அரித்துக்கொண்டு.
உட்சுவாசத்துக்கும் இரத்தோட்டத்துக்குமிடையோடி அலைகிறன
முறிகின்ற சிறகுகளை எரிக்கின்ற வேளையிலே ஓலமிட்டபடி
ஓய்வில்லாத ஓராயிரம் மண்ணிற விட்டிற்பூச்சிகள்;
உள்மார்புச்சுவரில் ஒட்டிக்கொண்டும்
குரல்நரம்புகளில் சுற்றிக்கொண்டும்
படபடக்கின்றன பாதி பிய்ந்த இறக்கைகள்...
குரல் கமறிக் கனைக்கும்போதெல்லாம்
சளிக்குவளைகளாய்ச் சொட்டுற குருதி,
எனதா, இல்லை இந்த விட்டிற்பூச்சிகளினதா?
எதுவும் தெரியவில்லை;
என் இருட்டு ஆழத்துள்ளே இறங்கிகொண்டிருக்கின்றேன்,
கறி வெட்டும் கத்திச்சரபங்களூர.

பாலத்தின் மத்தியிலே செவிப்பறை பொத்தி
ஓலமிடும் ஓவியத்து உருவம்
ஒரு கணம் விட்டு கணம் தாவி
உருக்காட்டிப்போகிறது.......
ரூபம அரூபமாகமுன்னர்,
வாய்விட்டுக்கூவ எனக்கு விருப்பமாகிறது;
அழைக்க வேண்டியவர்கள் பட்டியலில்
அதிகமில்லைத்தான்;
அம்மா, அன்ரா, அவள்.....
அப்படியான அகரவரிசைப்பட்ட
சின்னதொரு சரிக்குறிகள்.

நான் துரத்திக்கொண்டிருக்கும் இவர்களல்லாத மற்றவர்களை
எனக்காக எவராவது ஒரு கொஞ்சப்பொழுது
ஒளித்து வைக்கமுடியுமா?
ஓர் ஓலைக்கடகத்துக்குள் ஒருமித்து
எல்லா நண்டுகளையும் அடைத்து
பாழ்கிணறுக்குள் போட்டு......
அரபுக்கடற்சீசாக்குள் ஜின்னிகளை
சிறிதும் பெரிதுமாய் சேர அடைத்து.....
எப்போதுக்குமில்லாவிட்டாலும்கூட,
என் காற்பெருவிரலிலால் ஒரு சுடுபூச்சியை
நான் நசுக்கும் சின்னப்பலம் விளையத்தேவைப்படும்
ஒரு கொஞ்சப்போது.......

நான் தூங்கவேண்டும்;
கைகளை விரித்துப் பரப்பி, கால்களை அகட்டியெறிந்து
ஆழ மூச்செறிந்து மார்பு சீராய் ஏறியிறங்கி
ஆழமாக, தீயதும் நல்லதும் என்றேதும் பொட்டுக்கனவுகூட
என் நித்திரையைப் பின் தொடராமற் தூங்கவேண்டும்....
தயவு செய்து
நான் துரத்தும் இந்த நாக்கிளிப்புழுக்களை,
என்னைத் துரத்தும் புழுக்களின் ஊரெண்ணங்களை
எங்கேயாவது அள்ளி முடிந்து ஒளித்து வையுங்கள்.

நான் தூங்கவேண்டும்.
எனது மற்றவனைப் பிரிந்து
இந்த இருட்டுமூலைக்குள்ளே அடைகின்ற காலங்களை,
இறப்பின் ஜோதியைக் காட்டுகிறோம் வா என்றழைக்கும்
கரைந்த கவிஞர்களை, அழிந்த கலைஞர்களை விலகிக்கொண்டு
இரு என்று பிடித்திழுத்துக்கொள்ளும் அடர்த்திமிகு அண்டத்தீர்ப்பினுள்ளே
அமுங்கிப்போக வேண்டும் நான்,
துரத்தும் புழுக்களையும் புழுக்களின் புழுக்கங்களையும்
விட்டொரு புது உலகத்தே அறைவாய் திறந்து.

எனக்கு
நான் தூங்கவேண்டும்.
எழும்போது,
அந்த மற்றவன் ஒருவனாக மட்டுமே
எழுவேனென்று நிச்சயமான
ஓர் அகழியரணுக்குள்
நான் தூங்கியாக வேண்டும்.

புழுக்கள்
வேண்டுமானால்,
வேறெங்காவது சேற்றைத்துழாவி
புழுத்துப்புழுத்து பாசிக்குளத்தில்
த்மக்கென்றான போக்கில்
அலைந்து கொண்டிருக்கட்டும்.

விழைய,
முற்றுமா
உள்ளே
முழுமோனம்?

முற்று
.

'01, sep. 28 Fri. 02:10 CST

இறுக்கம்

எல்லாமே இறுக்கமாக இருக்கிறன.

இரவு;
நிலவு;
நினைவு;
அசைவு;
வழமை;
நிலைமை....
எல்லாமே பொல்லாப்பாய்
தமக்குட் புழுங்கிப்போய்
நடப்பு உலகம் அலைகிறது
இடுப்பில் இடுக்கிக்கொண்டு
எரியடுப்பின் காளவாய்.

எதிர்த்த நிமிடத்திலே
எகிறி எதேச்சைப்பட்ட
ஏதேனுமொரு காரணமாய்
எவரேனும் எண்ணெய்த்துளி
எரிகொள்ளிக்குள் அரிக்கச்
சொடுக்கக்கூடுமென்றாகி
பிளவு எல்லாமே இறுக்கமாக
அடைத்துபோய்க் கிடக்கிறது
காலம்.

படர்ந்த நிறத்தோடு கூடி இப்போது
அடுத்தவன் முகத்திலே மதத்தையும் பதத்தையும்
பார்த்துக்கொண்டும் அலைகிறது
வெடிகடுப்புடன் தடித்துப்போய்,
தரிதேசம்....
....உனதும் எனதும் உலகெல்லாத்தினதும்தான்

சிகை சீவி முடிக்கமாட்டேன் என்பதாய் விடைத்தலைவாள் ஒருத்தி
தொடை அடித்துக் குடிப்பேன் குருதி என புடைத்துப்போனவன் இன்னொருத்தன்
இதற்குள் இழுத்ததிற் கழன்றது எனக்கொரு நகை உனக்கொரு வகை
எனக் கலம் பிரித்துக்கொண்டோடும் களம் பிறிதெல்லாம் என்றாலும்கூட....

.... எனக்கேனோ,
மணச்சடங்கு முடிக்கா அணங்கொருத்தி
உணர்வு படிக்க முடியா திகைப்படு முகம்போல
உள்ளும் வெளியும் உறைந்துலாவும் பொழுதும்
உலகெல்லாம் உள்நிழலுள்ளாகியடுங்கி
பொய்யடக்கமாய் எல்லாம் சரியோ
என்றசங்கச் சிந்தை நடப்பெல்லாமே
வழக்கப்படுத்திதென் றிறுக்கமாய்
இருக்கும் இருப்பு இன்று.

09/24-'01

வகிட்டுக்கோல்

இதுவரை நாள் என்ன செய்தேனென்று
இனியாவது என்னைக் கேள்;
எங்கே என்பதையும் கூட,
இனி வரும் ஒரு கணம்
அறுத்துறுத்து
என்னிடம் வருத்திக் கேள்.

சுடுநீர் கொட்டுமொரு வேளை,
குளியற்றொட்டி நீர்த்துளை மூடும்
கற்றை உச்சந்தலைமயிர்
உதிர்வை ஒரு வசவிட்டுச் சபிக்கமுன்
என்ன செய்தேன் என்பதை
எதிர்த்துக் கேள்
என்முகம் முன்னே.

பெருங்கடலைக் கரமடங்கு பையுக்குட் பொத்தி வைத்தலைவிட்டு,
தேங்கிய ஆறுகளில் வெகுதீவிரமாய், நீளக்கை உராய்ந்து காந்திட
வீண் புண்கோடுகளை இழுத்துக்கொண்டலைந்தேன்
இருபுறமும் சங்கிலியாய்.

சரிவுருளும் வளையத்துள் எதிர்ப்புறமாய்
உடலினிலே ஒளிக்கவும் ஒன்றுமின்றி
உலுப்பியுலுக்கி ஓடித்திரிந்திருந்தேன்;
காற்றைச் சாடுதலைக் கை வீசோலைக்கீற்றொலியில்,
தனித்துக் களித்திருந்தேன் அகத்துள்ளே நான்.

இயலுமன்றால், இனி இங்கே என்னிடம் ஊர்ந்து வா.
இறந்த காலம் பற்றி எதையும் சொல்லக் காத்திருப்பேன்
திறந்த மனதுடன் நான் - தேவையென உனக்குப் பட்டால்.

ஆனால், நெரிந்த புருவத்தை நீட்டி நேராக்கி,
சென்றகாலத்தைக் கந்து பிரிக்கச்சொன்ன
வகிட்டுக்கோல் கை வசப்பட்டு வருதற்காய்
என்ன எண்ணினேன் என்று மட்டும் கேளாதே.

தடித்த இடி தொடுத்துப்படரமுன் வால் வெட்டித்துடித்து
வீச்சுமின்னல் பாய்ச்சல் ஒளிக்கமுன்னர்
அதன் தடிப்பம் வளப்பம் பிடித்துக் குறிக்கச்சொன்னால்,
என்ன செய்வாய் என்று மட்டும் கேட்டுக்கொள் உன்னை
- எனக்கொரு சொடுக்கு வகிட்டுக்கோல்
சொக்க வாலாயப்பட்டதை நினைக்கும்போதெல்லாம்.

மீதிப்பட,
துறந்த காலம் பற்றி எதையும் திறந்து சொல்லக் காத்திருப்பேன்
பரந்த உளக்களத்துடன் நான் - தேவையென உனக்குப் பட்டால்.

'01 ஓகஸ்ட், 11

பாம்பு

சட்டையுரித்த சர்ப்பம் சடுதியில் நகர்கிறது.
வலிந்து சுரண்டிக் கழன்ற வலி மறந்துபோனது
பூரிப்பிற் பொத்திச்செல்கிறது பொலியற் புதுமேனியை
நிலைக்கும் பொன்தோலென்று நிகழ்நினைப்பு
உயிர்செத்தசீலைமட்டும் சிதம்பிப் பறக்கிறது
உருவிப்போட்டது ஒட்டிக்கொள்ளுமென்றோ
பரவிப்பரவி விரைகிறது பாம்பு?
சுற்றித்திரும்ப,
உடைந்த தன் சுவரும்
ஒருபோதுக்குணவாகலாம்.
செரிமானம் அடையும் செலுலோசு.

June 11, 2001

கிளிப்போர்வீரன்

காலைத்தூக்கத்தின் கடைசியிலே
தனிக்கிளிப்போர்வீரன் கழிசுற்றி
வழிபோகக் கண்டேன் நான்;
அகல விழி கொண்டேன் பின் விரைந்து.

மெல்லாமலே மிரட்டுஞ்சொற்களை,
கூவித்தின்றும் கூட்டித்துப்பியும்
குறுக்கும் நெடுக்கும்
கொண்டுபோனான்;
கொட்டிக் கொட்டிக்
குதறிக்கொண்டும்கூட.

தனக்கு வெந்ததையே மீளமீள வெக்கைப்படுத்திப்போனான்;
சொல் மாளச் சொல் மாள, பையெடுத்துச்
சொன்னதையே வன்கதியிற் சுற்றிப்போனான்.

இல்லாத கேள்விகளுக்கும் இந்தா பதிலென்று
எடுத்தெறிந்தான் இங்குமங்கும்.
எதற்கு இதுவென்றால், அதற்குமோர்
அந்தரத்தே தான் தங்கும் அசிங்கப்பதில் தந்தான்.

வந்ததுவும் போனதும் தன்னடைக்கே தெளிவு என்றான்;
என்னதுவும் உன்னதுவும் எல்லாமே பொய்யென்றான்.
கண்ணைத் திறந்தால் கூர்க்காற்கைகொண்டு பொத்தினான்;
நான் நிலவைக் காணத்தானே தான்
கண்ணைக் கொண்டு பறத்தலென்றான்.

தத்தித்திரிந்தான் முன்னுக்கும் பின்னுக்கும்;
முடுக்கத்தில் முக்கிக் கழித்தான் சொட்டெச்சம்;
முரமுரவென்று மூக்குள் மூச்சோடு முனகினான்.

எந்த வினைக்கும் எதிர்ப்பட்டாரைக் குறை சொன்னான்;
தன் வினைக்கு முன்வினையைத் தானே முன்வைத்தான்.
கழுத்தைச் சுழித்தான்; சரித்தான்; வட்டக்கண்ணைப் படபடத்தான்;
அடர்ந்த அலகைமட்டும் அவதியிலே கொறிக்க வைத்தான்.

இறக்கை தறித்த கிளிப்போர்வீரன் தத்தலுக்கு,
ஏட்டுச்சுவடியினை இழுத்துக் கதை சொல்வதற்கு,
என்னத்தைப் பதிலாக இங்கே எழுதிவைக்க?

"அவதி அலகை மூடிக்கொள்; அறுந்த சிறகை முளைக்கச்சொல்;
விரைந்து பறக்கக்கல்; வெளியை மிதிக்கச்செல்.
கொறித்துக் கொறித்துக் குறை கொட்டித் திரிதலுக்கு,
கொவ்வை ஒன்றை ஒழுங்காய் எடுத்துருட்டி,
உண்டலகு மென்று தின்று மூடிக்கொள் நா"
என்றால் கேட்குமா இறகறுந்த அலகுக்கிளி?

தனிக்கிளிப்போர்வீரனின் போர்வையெல்லாம்
கேட்டலும் கிழித்தலும் பிதற்றலும் பீய்ச்சலுந்தான்.

"கழிசுழற்றும் கிளியெல்லாம்
கிண்ணிக்களி கண்டால்,
தண்ணீர்சுனை கண்டால்
என்ன செய்யும்?
என்னைப்போல்,
தின்னுமா, குளிக்குமா,
தினவெடுத்துத் திரியுமா?
என்ன சொல்வாய்?"
என்று கேட்டேன்.

பதிலொன்றும் சொல்லாமல்
காலைத்தூக்கத்தின் தனிக்கிளிப்போர்வீரன்
கழிசுற்றி கடந்துவழிபோகக் கண்டேன் நான்;
அசரும் விழி மூடிக்கொண்டேன்.
மோனத்தில் என்னைமட்டும்
மோகித்து மொத்தமாயரு
வட்ட முடிச்சிட்டிருந்தேன்
மிச்சவிடிநேரத்துக்கு.


'01, ஜூன் 22, வெள்ளி 20:05 மநிநே.

அடையாளம்

ஆர்டிக் குழாய்களையும்
அத்திலாந்திக்குருவிகளையும்
பிணைத்துப்போட்ட
பேருயிர் வளையம்.

மங்கோலியக்காஷ்மீரையும்
மன்ஹட்டன்முகட்டினையும்
உரசிப்பார்க்கும் உலாவும்மேகம்.

பொதுவாய்,
நீவிட்ட காற்றை நானும்
நான் விட்ட நீரை நீயும்
ஊதியும் உறுஞ்சியும்
ஆகவேண்டியெம்மூழ்.

தனித்துவாழமுடியாமல்
தலையைத் தனக்குட்
பிடித்துத்தள்ளும்
உலகச்சக்கரம்.

இதற்குள்,
நான்போடாக் கையப்பமும்
நீயப்பாப் புவியப்பந்தமும்
நம்வழி-நும்வழி என்று
காலச்சந்தியில் செல்
பந்திபிரியுமென்றால்,
- நண்ப,
அதுவெப்படி?

அம்பறாத்தூணியுடன் அலைதல்

வாழ்க்கைக்கு
வேட்டுவப்பிழைப்பில்லையென்றாலும்,
அங்குமிங்கும் அம்பறாத்தூணியுடன்
அலைந்துகொண்டிருத்தல்
ஆகவேண்டியதாயிற்று.


கீச்சிட்ட குருவிகள் எக்கிக்
கக்கிப் பீச்சிட்ட துளியெச்சம்.

உள்ளங்காற்சருகுக்குள்
அருகுதடவி நகரும் அவதிச்சாரை.

சுண்டுவிரற்றுண்டு வெண்தேங்காய்ச்சொட்டுக்குக்
கிளை தொங்கித் தலைதாக்கும் இளமந்தி.

கடக்குமொரு பாட்டையின் உதைத்து நகரும் ஓயாப்புரவி.

குறியிட்ட பார்வைச் சுனைத்தலை மட்டும்
விரித்த பின்முதுகே ஒளிர்த்து முனைப்படுத்தி
ஒளிந்துலவும் மரத்தறை இருள் நிழல்.


இவற்றிடையே கால்மிதி வசப்படும்
சச்சரவுக்குறி சொல்
நாத்தடித்த பல்லியிரண்டைப்
பல்குத்திச்சிராயுச்சிப் புட்டு நடந்தாலும்
வெற்றுவெருட்டலுக்கேனும்,
வீண்வேடிக்கையாய்
அம்பறாத்தூணியுடன்
அலைந்தாகவேண்டியதாயிற்று.

June 07, 2001 Thurs 4:54 CST

தலைப்பற்ற தொனிப்பு 1

படைப்புக்கும் புடைப்புக்கும் இடை
அகப்பட்ட ஆப்புத்தேசத்தைப்
பூசிக்கொண்ட தென் தேகம்.

எழுவானிலும் படுவானிலும்
எல்லை கடத்தப்பட்டவர்கள்
ஒடுக்கஞ்சேர அடங்கி
இடுங்கிக்கொண்ட காலபூமியிது,
எம் கால் பதித்த களம்;
கண்டீரா?

சுரி சொக்கிச் சொருகியிழுத்துக் கொள்ளவென்றே
பதித்த விரு வட்டச்சுழிச் சிரசுச்சியும்
மேவிச் சேறொளிய, அடைபெருக
பற்றைக்குட் பதுங்கும் முட்டைக்கோழியானேன்
முனைப்பில்.

'01, May 31

தாவுகை

கல்பற்றியவனுக்கு நீர் பிரிதலாய்
நுனிநோ நூற்று இறுக்கத்துடன் கழிகிறது
நேரம்.

கொப்புகளிடைப் பற்றத் தாவும்போது,
கீழே தெரிகிறது நகராப் புல்நிலம்.

சுண்டுவிரல் எதேச்சையிலே துளி சொட்டிப்
பரவுகிறது கறையின் கரை.

அரிசிகளைச் சேகரித்துச் சொல்லமுன்
அவதிப்படும் கொப்பும் சலரோகமும்.

'01, ஏப்ரல் 30

17

கன்னத்திலே அறைய முடியாத அறைக்குள்ளும் வந்து
செவிப்பறையிலே அறைந்து போகும் இருளின் காலம்.

நீரொடுங்கிய ஜன்னலைத் திறந்தால்
நேற்றைய பின்னிரவென்று சொல்வதா
இன்றைய முன்விடியலென்று சொல்வதா
என்று கேட்காமலே முன்னே மூடிய இருள்.

மின்னும் தெருவிளக்கு மிளிரும் விளக்கிலும்
உயிர்த்ததாய் இருப்பது உணரக்கூடியதே.
சுயம் தெளிவாய் விழித்திருக்கும் என்னிலும்
கலவி நுழைந்து அரைவிழி சொருகி நிலை
முயங்கிக் கிடக்கும் யாரோயிருவர்
கைதளர்த்தி உடலிளகி
உயிர்ப்புடன் இயங்கியிருக்கலாம்.

இரவுகளின் பாவபுண்ணியங்களை
என்னுள்ளே எழுதிக் கணக்கெடுக்க
இங்கொரு சித்ரகுப்தன் நான்.

காற்றில்லா இந்தக் கட்டித்த பொழுது
விரைந்து குறுகிக் கரைய விரும்புகின்றேன்.
எண்ணம் அழுத்தும் எனக்காகவில்லை,
விறைசடமாய் கொட்டவிழித்திருக்கும்
எல்லாத் தெருவிளக்குகட்காகவுமாய்.

'01, April

16

பூமி சுற்றும் செய்மதியாய்
என்னுள்ளே பூட்டப்பட்ட தசாப்தம்.

எண்ணெய்க்கிண்ணத்தை இருகையேந்தி
சிந்தாது உலகு சுற்றும் யோகச்சுழிச்சிரசு.

நாளும் இரவும் ஓடும் நீரின்
உட்பொதிந்த உலோகம் தேடல்.
ஊத்தை திரளத் திரள, ஒளிந்திரு
உலோகமெலாம் தேடென்ற தள்ளுகை.

திமிறும் கையுட்பட மிஞ்சி
உள்ளங்கைக்கடைவாயால்
வழிந்து கழியும்,
எனக்காய்த் தரப்பட்ட நேரம்.

செக்கும் செய்மதியும் சுற்றிச் சாகமுன்,
எண்ணெய்க்கிண்ணமென் எண்ணமெறிந்து
ஊர்உப்புக்கடல்நீரில் ஓயாமற்கைவலித்து
உட்கொண்ட உலோகம் துப்பித்துப்பி
ஒரு கணக்கில்லா கவிதைநாட்காண சை.

சப்தப்படும் தசாப்தம் சலனமொழித்துச்
சடப்பட்டு நிசப்தப்படுமோ விரைந்து நின்று?

உள்ளங்கை ஒட்டிய நேரத்தையேனும்,
ஒருபோது எனதென்று
நக்கித்தின்ன வேண்டும் நான்.

15

எண்ணிக்கைகளைப் பக்குவமாய்ப்
புதைப்பதைக் கற்றுக்கொண்டால்,
என் உயரம் எத்தி எத்தி வளரக்கூடும்
உட்பாதமும் உச்சிச்சிரட்டையும்.

மனம் துருக்கும் எண்ணிக்கை.
விரல்துடிக்கும் எண்ணிக்கை,
முஷ்டிமுன்னெழும், மூக்கு வியர்க்கும்
எண்ணிக்கைகளுக்கான எண்ணங்களை
அழுத்திப்புதைக்கவும் அழுகப்பண்ணவும்
கற்றுக்கொள்ளவிரும்புகிறேன்.

எண்களுக்காக அறியப்பட்டவர்களிலும்
பழுதுற்ற எண்களைப் பாகம்
பிய்த்துப் புதைத்தவர்களை உயரம்
கண்டு கொள்வதிலே கலந்திருக்கின்றது
என் எதிர்கால உயரத்தின் ஞானம்.

அவசரமாய் எனக்குத் தேவை,
எண்ணிக்கை புதைத்து
தன் உயரம் துளிர்த்தவொரு
மௌனத்து ஞானகுரு.

14

எனக்கென்று ஒதுக்கித்தரப்பட்டது
எண்ணுக்கும் எழுத்துக்கும் இடைப்பட்ட
உள்ளங்கையகல ஒற்றைப்பாதை.

சறுக்கினாலன்றி,
சமன் பிரித்துச் செலுத்தமுடியாத
சித்தம்பிழறிய சாரத்தியம் எனது.

எழுத்தைப் பறித்து எண்ணுக்குள்ளும்
எண்ணும்போது எழுத்துட் கிடந்தும்
நாட்டிய எல்லாவற்றையும் நட்டப்பட்ட
கோட்டைக்கணக்கு.

வலில் அள்ளித்தின்னக்
கையெல்லாம்
இலக்கம்புழுத்த எண்ணவல்;
நக்கித் தின்னமுன் நான் எறிந்து
எழுத்துத்திண்ணைக்கு
எள்ளுக்குத் தாவினால்,
எழுத்தெங்கே எண்ணெங்கே
என்பதிருக்கட்டும்;
எதிர்க்காற்றுப்பட்டால்
கைப்பிடிக்க
என் உத்தரநிலையெங்கே?

என்றாலும்,
இலக்கத்துக்கும் இலக்கியத்துக்கும்
இடைப்பட்டு ஒற்றைத்தரைப்பாதைமேலாய்
தலை எட்டியெட்டிப்பாய்கிறது
என் இழவுபிடித்த எண்ண இலக்கு.

13

அறிந்தவர் நினைவாக
அத்த நட்சத்திரத்திற்கும்
அறியப்படாதவர் நினைவாக
அநாமதேயத்திலும்
அர்ச்சனை பண்ணிக்கொள்ளும்
அம்மாக்களுக்கு மத்தியிலே
அறிந்துகொள்ளப்படாதவன் நினைவாக
அவிட்டத்திலே அர்ச்சனை
பண்ணிக்கொண்டிருக்கின்றவளுக்காக
எட்டத்திலேயிருந்து ஏமாற்றுத்தனத்துக்காக
இரண்டுதுளி வெட்கப்பட்டுச் சொட்டி
சுட்டுவிரலால் அடிவிழிதட்டிக்
கழிக்கமட்டும்தான் முடிகின்றது,
தவிட்டுப்பானை எனக்கு.

12

ஆழம் தெரிகிறதோ இல்லையோ,
அடுத்தவன் குட்டைக்குள்
அகலக்கால்விட்டுக்
குழப்பக்கூடாதென்று தெரிகின்றது
- தெளியத் தெரியும்
அடுத்த குளத்திலே பழஞ்சேறு
உரசிக்கழுவத்தோன்றும் வரை.

11

நீந்தாமலே நின்று முறைக்கும்
நீலமீன்களைக்கூட நெடுக்கக் காணக்கூடுகிறது;
துருச்சேர்ந்த தூண்டிலைக் கொண்டலைந்தாலும்
சிறுபுழு கொத்தவின்றி செத்ததறையாகிப்போனது
சேறும்சுரியும் மட்டும்.

10

பருத்திப்பூக்களையும்
'பம்பர்' அடிகளையும்
உண்டது செரிக்காமல்
ஒளிப்படத்திற் பார்ப்பதோடு சரி.

மீதியில்,
உணவுக்குப் பின்னால்
உலாவிக்கொள்கின்றதிலே
ஒளிந்துகொள்கின்றது
என் தேசம்.

9

இருந்தவிடத்திலேயே விரலை அறைந்துகொண்டு
எழுது எழுது என்றால் என்னத்தை எழுதுவது?

கண்ணாலே சன்னற்கண்ணாடியுடையாமல்
சின்னப்பூப்பாத்திகளுக்கு நகர்ந்து
நடக்கப்பழக்கிக்கொண்டேன்,
தெரு திசைப்படமுன்.

8

இரத்தப்பூவிளிம்பில்
பச்சையும் பழுப்புமாய்
இரட்டைப் பட்டாம்பூச்சிகள்
கலக்கக்கண்டோம்.

கவிதைகளை அவர்களும்
கலவிகளை இவர்களும்
தொடர்நிகழ்வாய் உலாத்த
தெருக்கல்யாணமுருங்கையை
முறித்துக்கொண்டேன்
நான்.

7

எறிகல் பறிந்து கிடத்தலும் நகர்தலும்
இடைப்படக்கிடந்த ஓணான்முகம்,
என் உச்சந்தலை.

திரிபு தெளிந்தபின்
அறிந்த உணர்வை
உரைக்கச்சொன்னார்கள்;
கரிநேர்கோட்டுக்கட்டங்களை
வடக்கும் கிழக்கும் வரிச்சாக்கி
வழித்துக் கிழிக்கமுடிந்தது
வெறுமனே.

6

பேசாத இன்றைய நேரங்களில்
நேற்றைய கலக்காரர்களின்
தோய்ந்த சாயம் தேய்ந்த உருவைச்
சுவரொட்டிக்கொண்டிருக்கின்றேன்.

பசை ஒட்டாத பொழுதுகளில்,
மூக்கை ஓட்ட மணமூலைகளை
மோப்பம் பிடித்து அலைகின்றேன்.

இடைக்கிடையே எழும்பசிக்கு
கைக்கிடைக்கும் எதையாவது
கல்பொறுக்கிச் சாப்பிடுகிறேன்.
பொருமுகிறேன்; புரையேற,
நடை அடுத்த தொட்டிக்குள்
அறைகுறையாய் அவிந்து
வந்ததை அவிழ்த்துக் கவிழ்க்கிறேன்.

எதிர்ப்படு சந்திப்புக்கேற்ப
சவாடலும் எதிர்ச்சவாடலும்
எடுத்தும் எறிந்தும்
குறுக்கும் மறுக்கும்
திசை தப்பி நடக்கிறேன்

தடுப்புக்குமேலாய் தறிகெட்டு ஓடுகிறேன்.
உடைத்த பலகையை ஒட்டலாமா
என்று உத்தேசப்படுத்துகிறேன்.

மீதியாய் இருக்கின்றநேரத்திலே
மீதமின்றி இறந்துபோயிருக்கிறேன்.

5

எல்லோருக்கும் ஏதேதோ வேலைகள் இருக்கத்தான் செய்கின்றன.

சீரியர்க்கு எழுத்து, சிலருக்குக் கருத்து என்று
கனிந்த காலத்தையும் கால்பதித்த களத்தையும் பொறுத்து
எல்லோருக்கும் ஏதேதோ வேலைகள் இங்கே
இருக்கத்தான் செய்கின்றன என்றால்,
என் பங்குக்குக் கிடைத்தது,
எரிகிற கொள்ளியைத் தொட்டுக்கிளறாமல்
எண்ணெய்ப்போத்தலுக்குக் கிட்டப்போகாமல்
இருக்கிற அடுப்பிலேயே நெருப்பை அவியவிட்டு
எட்டத்திலேயிருந்து என்னுள்ளே வறுந்து கொள்வது.

எவரோ எல்லைபோட்டு வகுத்துவைத்த விதத்திலே,
அவரவர்க்கு அவர்க்கான வேலைகள்மட்டுமென்றுதான் இருக்கச் சொல்கின்றன.

4

குழித்தீயோடு சீதையையும்
கோதைசீதையோடு ராமனையும்
உத்தரராமனோடு அனுமனையும்
வலிஅனுமனோடு அங்கதனையும்
அம்பிகாபதியோடு கம்பனையும்
கவிகம்பனோடு வால்மீகியையும்
கல்லூரியோடு கழற்றித் தொலைத்து
கரைத்து மறந்துபோயேயாகிவிட்டது.

னால், போர்க்களமிருந்து
கடன்பட்டார் நெஞ்சத்தோடு
தலைகுனிந்துபோன
அந்த அவனை மட்டும்
என் மனமிருந்து இன்னும்
இறக்கி விட முடியவில்லை.

3

அளவுமீறி யுதத்தைத் தரித்துக்கொண்ட ண்டவனையெல்லாம்
மிகுந்த அருளாளன் அன்பாளன் என்று அறுதியாய்ச் சொல்லியாயிற்று.

னால், ஓர் எதிர்க்கேள்வியைக் கேட்டதற்காய் உள்ளத்துள்ளும்
கெடுவான் என்று மனிதனுக்குக் கோடுபோட கை தானாய் நகர்கிறது.

அறியாதது அர்த்தமாகிறது;
"ண்டவன் எப்போதும் அனைவருக்கும் பொது; முப்பொழுதும்
மனிதன் முளைத்த வேலிக்காக இப்பாலும் அப்பாலும் நிற்பான்."

2

இந்தப்பாதங்களையும் இயக்கமந்த இடது உள்ளங்கை
நரம்புகளையும் செவி பிய்யப்பிய்யச் சுட்டுக்கொள்ளலாம்.

வெயில் வெப்பத்துக்கு ஒவ்வொன்றாய் வெறுத்துரியும்
தோல்களையும் துக்கத்துடன் மெள்ளத் தூக்கித் தள்ளலாம்.

முன்முற்றத்துக்கும் பின்மூத்திரகூடத்துக்குமிடையே
சதைக்கொத்தாய் சரீரம் சரியச் சரியச் சன்னதமாடலாம்

எதிர்த்த வேலிக்கும் அடுத்த சுவருக்கும் அலுப்புக்
கொடுக்காமல் எனது தூணிலேயே உடல்முடமாகலாம்.

எல்லாமே, என்னால் முறிக்கமுடியாமல் தன் இஷ்டத்தே
எதேச்சையாய் இயங்கிக்கொள்ளும் இந்த மற்றக்கையை
எவரேனும் இனியேனும் இழுத்து முறித்து வைத்தால் மட்டும்தான்.

1

எனதென்ப தெனதும்
உனதென்ப துனதும்
அவனென்ப தவனும்
அமைவதா யாகாது.

எனது ளுனதும்
உனது ளவனும்
அவனு ளெனதும்
ழ்ந்து தூங்கும்.

என்னிருந் துன்னையும்
உன்னிருந் தவனையும்
அவனிருந் தென்னையும்
அவிழ்த்துப் பிரித்தென்ன
வதிங்கே?

என்னுள் நீயும்
உன்னுள் அவனும்
அவனுள் நானும்
இன்னும் மூவராய்
இதிலானோம்.

பெருவழக்கத்தே,
இறத்தல் என்பது
இடை யிணைந்தவை
விலகல்;
பிறத்தல் என்பது
முன் பிரிந்தவை
சேர்தல்.

மறைத்தவை உரித்து
மயங்கிப் புணர்தலும்கூட
புதிது பிறத்தலின்
பிறிதோர் புறநடைவிதி.

விட்டகுறை ?

??

விதை போட்ட விந்தோ,
வெந்து வீங்கிய சூலோ
சொல்லாத சேதியைச்
சொல்லென்னும் உன் சூழல்.

கடலும் காற்றும் உடல்
கலந்து விலக்கும் களமாகும்
உன் கதை மொழி.

நகக்கண்ணில் நசிந்துசொட்டும்
நீரின் நிணமும் உனக்கொரு ஒவ்வா
உருத் தரும் ஒவ்வொரு கண்ணிலும்.

சுவாசித்த காற்றின் சுருட்சூத்திரம்,
உட்கொள் உணவின் பகுப்பாய்வு
தினக்கழிப்பிலும் கரையா காபன் வெல்லம்...
...எல்லாவற்றுக்கும் ஏனென்று
கணக்குக் கொடுக்கவும் கூட கட்டாயப்படுத்தப்படலாம்.

பல் விலக்கிச் சொல் விளக்கமுன்னே,
தகி நீற்றுச்சாம்பலுக்குள் அமிழ்ந்துபோவாய்
கறுப்புக்கும் வெளுப்புக்கும்
இடைப்பட்டுக் கால் நடந்ததால் நீ.


~

அறிந்தோர் அறியத்தரவேண்டும்:
-தன்
நட்ட தனி நடுப்பாதையிலேயா
தான் செத்தான்
கொல்லக் குத்தன்* வீடு
தின்ற கௌதம புத்தன் ?

*குத்தன் ~ cunda [not kutta, at least for this post]

உயிரூட்டல்

உருவிக்கொள்ளும் தீ பரவித் திரியும்
எரியும் கொள்ளி தேடி.

இறந்த எலிகளுக்கு உயிர்மீள வரம் தருகின்றோம்
எனக்கூவும் பாசிகளின் மேலாகப் படரும்
பாசிசாயத்தாள் நீலமும் செம்மையும்
மாறி மாறிப் படர.

இருக்கின்ற புறாக்களுக்கு ஒரு கரண்டி நீர் வார்க்கமுடியாதவர்கள் ,
இறந்த உடல்களைக் கிண்டிக்கொண்டிருக்கின்றார்கள்,
உயிர்கொடுத்து நடத்தி நாடகம் ஆட்டப் பாவையாக்க.
மரங்களை அறுத்துக்கட்டிய மண்டபத்திலே
வனங்களை வளர்ப்பது பற்றிப் பாடம் நடத்துக்கின்றோம்.

என்னை மூட்டைப்பூச்சிக்குள் முளைக்கவைத்தவனையிட்டும்
இன்றைக்கு நான் கவலைப்படுக்கின்றேன்.
மூட்டைப்பூச்சிகளைப் பற்றி மெத்தைகளோ மனிதனோ
கலைப்படாதது பற்றி நான் கவலைப்படமுடியாது,
அவற்றைப் படைத்திருக்கக்கூடிய அவனே
கவலைப்படாதபோது.

மரங்களும் மூட்டைப்பூச்சிகளும் ஏதோ காராணத்துக்காக
தோல் எரிந்தோ அறுந்தோ உரிந்தோ போகலாம்.
காரணங்கள் தாமாக இருக்கின்றவையல்ல,
திரிந்தலைந்து தேடிக் கண்டு தரப்படுகின்றவை.

எலிகள் உயிர்க்க, இறந்துபோம் மூட்டைப்பூச்சிகள்.

'00, Dec 12 4:04 CST

மீள்வட்டச்செய்கை

காலைப்பொழுதில் உருமாறு மீள்வட்டச்செய்கை.

எழுதிய களிமண்பலகை இளக்கிப் பிசைந்து
பிதுக்கிச் சமைத்த எழுதுபலகை.

உருக்கிய இரும்பை கரியுடன் பிணைத்து
உருக்கி உருக்கித் தின்ற உடலின் தொழில்.

தினவட்டத்துள் சலித்துப் புழுக்கும் சிந்தனைகள்;
தின்று மடிந்து மடிந்ததைத் தின்று பிறந்து வளர்ந்து
தின்னவேதுமின்றி இறந்ததைத்தின்று பிறந்து
தினவட்டத்துள் புழுத்துச் சலித்து கலித்துகொட்டும்
சிந்தனைகளும் செயலும் ஒன்றையன்று வெறுத்திருக்கும்.

பிசையமுடியாப் பிண்டப்பண்டமானபோது,
உருக்க ஒழுகா தடித்த முண்டமானபோது,
உருக்கும் களியும் உருகிக் கழியும்.

ஒரு மாலைப்பொழுதில்,
ஓய்ந்துபோய் முற்றுப் பெறும்
மீள்வட்டச் செதில்.

'00, Dec. 12

அம்மா

ஒரு கறிவேப்பிலைச்செடியாகப்
நான் உனக்குப் பிறந்துவிட்டதற்காய்
நீ மட்டும்தான் அழுதுகொண்டிருக்கின்றாய்
என்று எண்ணிவிடாதே அம்மா!
நானும் கூடத்தான் தூரத்திலும்கூட
அறையை அவதானமாய்ச் சாத்திவிட்டபின்னர்.

ஊற்ற ஊற்ற துளிர் ஊறாது உற்றுப்போவேன்
என்று பார்த்து, காத்து, பொத்தி முளைக்கு
முலை புகுத்திச் சொட்டுச் சொட்டாய்
உயிர் பருக்கிய மொட்டுக்காலங்களை
நீ எனக்கு சொல்லிக்காட்டப்போவதில்லை
என்றபோதும் தட்டிக்கொண்டேன் இருக்கின்றது
என் நடையற்றிலும் தடுமாற்றத்தடை.

சடைத்து மணத்துக்கொள்ளமுன்,
உடைத்துச் சிதைத்துப் போனவைக்கும்
தப்பிக் கிடந்து முளைத்து கிளைபெருக்கிச்
சுற்றிக்குட்டி தழைத்துப் போன நேரத்திலும்
அடித்துக்கொள்கின்றது இவர்கள் பறிக்கின்ற
ஒவ்வொரு குருத்திஇலைக்கும் அடிக்குறியென்றால்,
மரத்தை, முடிவாய்த் தொலைத்ததுபோல, காலத்
தொலைக்கு தத்துக்கொடுத்த அம்மா, நினைவில்
அடித்துமட்டுமோ கொள்ளும் உன் அகம்?

'00. Dec. 12 04:25 CST

பயணி

தொலைவில் நகர்கின்ற புகையிரத்தின் சாளரக்கரையிருக்கும்
பயணிக்குத் தோன்றும் எண்ணங்களைப் பற்றி
என்னிடம் எத்தனை முறை கேட்டிருப்பாய்?

கேட்கின்றபோதிலே, அவன் மனைவியைப் பற்றி,
அவள் குழந்தையைப் பற்றி, அவர் வேலையைப் பற்றி
எதையெதையோ பற்றி என்று சொல்லிக்கொண்டிருக்க
எனக்குத் தெரிந்திருந்து பற்றி என்றைக்கும்
இரதம் கடந்த அடுத்த கணங்களிலே
எண்ணிக்கொண்டதில்லை நான்.

நகரும் புகையிரதத்துக் கரையில் நான் இருக்கையிலே
"என்ன எண்ணுகின்றேன் என்கின்றாய்?" இன்றைக்கும் நீ.
நடைபாதையிலே அவளோடு நகரும் அந்த அவன்
என்ன எண்ணிக்கொண்டிருப்பான் என்றுமட்டும்தான்
எனக்கு எண்ணத்தோன்றுகின்றதென்றதைச் சொன்னால்,
என்ன எண்ணிக்கொள்வாய் நீ?

'00. Dec. 12 Mon 4:33 CST

மரணச்சாலை மணிக்கூண்டு

மரணச்சாலைக்கு முன்னால் நிற்கும்
மணிக்கூட்டினைப் பற்றி
நான் எண்ணிக்கொள்வதுண்டு.

ஓய்ந்துபோனவர்கள் நிமித்தம்
உள்வாய் கைபொத்தி உறைந்து
கிடக்கும் மரணக்கூட்டு இருட்டில்
ஓடிக்கொண்டிருக்கும்
ஒரு மணிக்கூண்டினைப் பற்றி
நான் எண்ணிக்கொள்வதுண்டு

இல்லாமையைத் தேக்கி நிற்கும் நிலத்திலே
இருப்பில் நிலைத்துப்போன நசிகாலநினைவு,
தனித்திழுத்து ஓசை உச்சந்தலையிடிக்க-
பகைவர்கூட்டத்தின் முன்னர்,
ஒற்றையாளாய் வாளை ஓங்கிக்கொண்ட
ஒரு வீரனின் உயிர்த்துடிப்பாய்
- எண்ணிக்கொண்டதுண்டு
அந்த மணிக்கூண்டை.

வாளெடுத்துப் பொருதும்
வீரர்களும் வயதேறிச்
சாவது வியப்பல்ல.

செத்தபின்னும் சில
சீவிப்பதும் அதுபோல.

'00, Dec 12 Mon 04:43 CST

போனபின்...

இறந்தபின்,
எனது கடிகாரத்தை முறித்துவிடு
காலம் கடந்தபின் அ·துனக்குக் காட்டப்போவது,
நிழல்களுக்கு மட்டும் நினைவு படரும் நேரங்களை
என்றாகக்கூடும் என்று புரிந்து கொள்கின்றேன்.

நான் கடந்து போனபின்,
காற்தடயங்களை மணலுட் புதைத்துவிடு.
அந்த அடிகளிற் தொலைந்த மணலையெண்ணி
திசையை மறுக்கக்கூடும் என் தேசத்தை
எண்ணிப்பார்க்கமுடிகின்றது எனக்குள் இப்போது.

முடிந்துபோனபின்,
என் முகத்திரையைக் கிழித்துவிடு.
உள்ளுக்குள்ளொரு முகமில்லை,
உறைந்த குருதியும் நிணமும் சதையுமே
உருகி வழியக்கிடந்தது ஒவ்வொருவர்போலவும்
என்று உலகறியக்கூடட்டும் என்றென் விழைவு.

என் முடிவு மூச்சுக்காற்றை
வெளியிலே கலந்ததற்காகக்கூட
கவலைப்படுகின்ற நாட்டார் வாழக்கூடுமானால்மட்டும்,
என் பெயரால் அவர்க்கு உரத்துச் சொல் ஒரு கூற்று,
"கட்டின்றி களிப்பில் புடைத்து அலையும் பொருள்
புவிமேலே என் அடிக்காற்று."

தேசக்காற்றையும்கூட திசைபற்றித் திருப்பி
இழுத்திறுக்கிக் கட்டவிரும்புகின்றவர்களுக்காக,
நீயும் நானும் கவலைப்படமுடியாது காதலி.

'00, Dec. 12, Mon 04:57 CST

விரல்கள்

விரல்கள் மட்டுமே இருக்கின்றவர்களுக்கு,
சொற்கள் மட்டுமே தேறும்.
கோர்த்த சொற்களைக் குலைத்து,
குலுக்கிப் போட்டு மீட்டுக் கோர்த்தாலும்
சேர்ப்பது விரல்கள் மட்டுமே என்றானால்,
சொற்கள் மட்டுமே குவியற்கற்களாய்த் தேறும்.

விற்காத சொற்களையும் வினையாத விரல்களையும்
வீணுக்கு வைத்துக்கொண்டு விளைமீனுக்காய்க்
காத்திருக்கும் கொக்கொன்றினது எனது கால்.

'00, Dec. 12 Mon. 05:19 CST

தயிர்வியாபாரி

பழைய தெருவுக்கு மீண்டும் தயிருடன்
கூவிக்கொண்டு வருகின்றான் இடையன்.

கடையக் கடைய வழிந்த வெண்ணெயைத்
தொலைத்தபின்னால், முன்னர் மீந்த தயிரை
பின்னும்
இன்னும்
விற்றுப் பிழைக்கும் கலைஞன்.

தெரு தூங்கிக்கிடக்கின்றது கிடையாய்க் கைவிரித்து,
அடித்தோய்ந்து தூங்கிய அரவச்சாட்டையாய்
செட்டைச்செதில் உதிர்த்தும் உரிக்காமலும்.

மேலே விரலொட்ட வொட்ட விற்றுப் போவான்,
புளி சொட்டிக் கண் சுருக்கும் தயிர் - இடையன்.

வீதிக்கு, வீட்டுக்கு விலைப்படுகின்றபோதும்
இவனுக்கு எண்ணமோ, இன்னும்
கடையச் சடைத்துத் தொலைந்த
கட்டி வெண்ணெயில்.

காலமும்கூடக் கடவாய் கசியக்கசியப்
புசிக்கும்
வெண்ணெய்.

'00, Dec. 12, Mon 05:31 CST

இலக்கடைதலின் பின்னே...

பின்னர்,
எண்ணியாங்கு எய்தடைந்த இலக்கில்,
தனியனாய் எழுவாய் நீ.
கண்படர, மானுடக்காலடி படா
ஒளிதெறி மின் பொன்மணற்பரப்பு.
உன்னதே உள்ளளவும்,
வான்விதானம்வரைந்தோடு
தொடுசமவெளி எதிர்ச்சுவரின்றி.
இறும்பூறுற்ற பெருங்கணம் பிரிந்திளகி,
ஆற்றுப்பட வுள்ளம் அவாவுவாய்,
காற்றுப்பட்டொலிக்க உன் கருத்துக்கொரு
களித்த முகமடி பலத்த எதிரொலி.
முதற்காலடி உனதென்ற
உச்சிச்சமநிலக்களத்தே,
பொதித்திறங்கத் தேடியலைவாய்
சிறங்கைக் கரும்பள்ளம்,
-புறங்கையிலும்
பொருதுபுகழ் மீந்தொழுக
அலுத்துப்போன நீ.


'00, டிஸெம்பர் 04 22:04 மநிநே.

ஊசலாட்டம்

நிதம் ஒரு கொடிச்சுற்று.
நெடுக்கும் குறுக்கும்.

பதம் பிரிக்காமல்,
அவித்த பருக்கையை
அள்ளிப்போட்ட பானை,
சொல்லுண்ட பந்தி.

ஆசை தள்ளும் காற்று;
அவதானிப்பு எதிர்க்காற்று.
தடி எத்திச்
சுற்றும் கொடி

உச்சி உச்சி
உள்ளங்கால் உச்சிமுட்ட
உன்மத்த ஊசலாட்டம்.

சறுக்கிக் கால்
எகிறும் வரை
என்னே ஆட்டம்,
என்னாட்டம்?

செய்கை

பறக்கச்சொல்;
சிறகை முளைக்கச்செய்வேன்.

படிக்கச் சொல்;
எழுத்தைப் பொறுக்கச்செல்வேன்.

புலனடக்கி இருக்கச்சொன்னாய்;
செய்வேன்;
ஆனால், ஒரு பொய் சொன்னேன்.

சொர்க்கம்

சிரங்குறாமல்,
சும்மா இருத்தல் சுகம்.
உற்றபின்,
சுரண்டிச்சுரண்டிச்
சொறிதலும் சுகம்.
இரண்டிலெது
மிகு சுகம்?

நிலைக்குத்தாய் ஒரு சைன் வளையி

Michele Laeggott's "Risers" (Sulfer ('44) Spring 1999) இனை அமைப்பொத்தது.


தனிமை
கண்
தெரு
அவள்
கனவு
அறிகை
மணம்
விரல்
உறவு
குழவி
நான்
பேதம்
முறிவு
தனிமை
கண்
தெரு
அவள்
கனவு
அறிகை
மணம்
விரல்
உறவு
குழவி
நான்
பேதம்
முறிவு
தனிமை
கண்
தெரு
அவள்
கனவு
அறிகை
மணம்
விரல்
உறவு
குழவி
நான்
பேதம்
முறிவு
தனிமை
கண்
தெரு
அவள்
கனவு
அறிகை
மணம்
விரல்
உறவு
குழவி
நான்
பேதம்
முறிவு
தனிமை
கண்
தெரு
அவள்
கனவு
அறிகை
மணம்
விரல்
உறவு
குழவி
நான்
பேதம்
முறிவு
தனிமை
கண்
தெரு
அவள்
கனவு
அறிகை
மணம்
விரல்
உறவு
குழவி
நான்
பேதம்
முறிவு
தனிமை
கண்
தெரு
அவள்
கனவு
அறிகை
மணம்
விரல்
உறவு
குழவி
நான்
பேதம்
முறிவு

அவகாசம்

Recluse
(by Willaim Beyer appeared in The Lyric, Winter 1999)

Out of my narrow house.
Its frown
Past fields of gazing grain
Into town.

Who I am, they do not ask,
Or why, today, I came.
I leave the gray town far behind
That never knew my name.
|
|
|
|
|
அவகாசம்
=======
|
யார் என்று கேட்காத/து
மூலைக்குள் வாசம்.

பழுப்பு நூல்களின்
வரித்தலையில் விரற்றடம்.

பெருநகருட் தவறிய
சிறுவயற் தானியம்.

விம்பத்தைச் சுருக்கிய
இன்னோர் அந்நிய மனிதன்.

எல்லாமே,
நகர்(த்)தூண்களைத்
தகர்க்கக் கற்றுக்கொள்ளமட்டும்.