அலைஞனின் அலைகள்: கணம்

Monday, January 12, 2015

"கும்பகர்ணன் விட்ட கடைசிக்குசுவெனக் கொள் என்னை"



அன்றலர்ந்த ஆச்சா மரம் போல வீழ்ந்தானோ அவன்!
போச்சா, உள்ளிழு மூச்சு விடுவெளிமுன்னே
வீச்சாய்ச் செல்களம் மாறி
ஒளிந்திருந்தம்பெய்வான் பாதம்
இன்றே போய் நன்றே புக்கிப்
புலம் தொழுது வாழ் புல்லர்.

மல்லாக்காய் வீழ்ந்து மாண்டான் மாநிலவேந்தன்
இராவணன் இல்லாத்தலையையும் முள்கோலிக் கொய்து
தம்படி செப்படிவித்தை செல்லுபடியாக்கும்
பொல்லாவிபீஷணர் சுருக்குவால்களிலே
வல்லான் என்னான் கல்லாலனைக் கொல்
தர்மம் எல்லாம் நியாயமென்றோதிப் பறக்கிறது
இரவினும் பகலிலும் எல்லாப்பொழுதிலும்
கிழியக் கட்டிய இரவற்பீதாம்பரம்.

பெருகு தாரை உருகிச் சபித்த இராமன்கள்ளேறு
ஆண்குறிதன் அடிமுடி சவரம் செய்யப் பெருகுவது,
மாரீசத்தூதுவேடத்தே வெஞ்சினமாய்
தம்போக்குவாழாளையும் அழுகுழவியையும்
எல்லாம் சமமென்று தீயேற்றிக் கழி
இலங்கா(த்)தகனத்து களிகொள் மாருதி வாலல்ல;
எதிர்வீடிரவு விபீஷணர்தம் சொற்சிற்பத்துச்சிப்பம்.
இழவெடுவில்லத்தே இருப்புக்காய்
ஏற்றுக்கொண்ட இராமகீதங்களை,
கால் சுற்றிவளைக்கடி க்ருதிகளை
கருணை கொள் கசட்டுநிதிதரு
வல்லோர் எல்லாம் நல்லோரென்று
எனக்குப் புகட்டமுன்னே,
இதைச்
சொல்வேன் கேளும்:

"வாய்க்கால் சிவந்த முள்ளுக்களமேனும்
கால்வாய் கடந்திழியும் பனிநிலப்புலமேனும்
பிறழாச்சொல்நீதி பொருந்தாச் செய்கடமை
கொல்லப்புல்தின்ற கும்பகர்ணன் விட்ட
கடைசிக்குசுவெனக் கொள்ல்க என்னை.

அவப்பொழுதே
மணத்திருப்பேன்
நும்மூக்கில்"

மே/12/2010-புதன்.

பேச்சறு

இரைச்சலுடன் மோதிக்கொல்லும் சொற்களிடையே

என் கைப்பத்திரத்தை நசுங்காமல் நகர்த்திடக்கூடும்

எந்நாளும் சுகந்தம்.



ஊனற்சவங்களில் எழும் கவிதைகளிலே பூப்பிடுங்காது

நகரும் என் காலம் வசந்தம்.



உக்கும் உடல்கள் உயிர்வாயுவை மட்டுமே கேட்கிறன

கவிதை என்ற பெயராட்டும் உன் எழுத்துச்சரையை

நுனி முறித்துச் சிதையெரி.



பேசாதிருக்கும் பொழுதெல்லாம் நிறையப் பேசினேன்;

கேட்காதார் சபைகூடிச் சத்தமின்றிக் கேட்டார்கள்.



தொடர்பற்ற நெளிசிந்தனைகள்

குடைந்து தொடர்கின்றனவா?

குரைத்துத் துரத்துகின்றனவா?



ஓடிக்கொண்டிருக்கின்றவனுக்கு

உள்ளதெல்லாம்

உயிர்வாழ்வுக்கல்லா

உப்பிலிக்கேள்வி

 Thursday, December 30, 2010

Thursday, January 08, 2015

அவஸ்தை

நீட்ஷேயும் செத்தார்; பூக்கோவும் பொறிந்தார்;
நானும் போனேன்.
நுள்ளான் கடவுள் மட்டும்
மல்லாக்காய்
கவட்டைத் திறந்து காட்டிக் கிடந்தார்
எலும்பு மனுசருக்குத் தீனி
ஏதொரு புதுப்பொல்லாப்புமின்றி.
உமக்கென்ன, புண்ணியன் நீர்;
கிடப்பீர்; கிழிப்பீர்.
அனந்தசயனத்தும் ஆத்தாவை
அரவணைத்துப் படுப்பீர்
கீழே ஒடுங்கி
முடுக்கியவருக்கெல்லோ தெரியும்
வஸ்துள் மூத்திர அவஸ்தை.

- போமோதாசன் மாமூசமூகத்துக்காய்ப் புனைந்தளித்தது

7/14/2008 02:44:00 PM

முடிவுக்குக் கொண்டு வருதல்


மூன்று நிலைகளிலே
முடிந்து விடுகிறது
என் கவிதை -

அடுக்கிய சொல்;
பொறுக்கிய படம்;
அங்கீகாரம்.


 7/19/2008 05:27:00 AM

இருபத்தைந்து ஆண்டுகள்

கடந்த பாதையைத் திரும்பிப் பார்த்தேன்;
கிடந்த பாயிற் புரள்கிறேன்.
புரண்ட பாயைக் கிண்டிப் போக,
வரண்ட சாலையில் எழுகின்றேன்.

சுற்றும் வட்டத்து,
சுழிப்பரிதிகளைச்
சுட்டிச்சுட்டி
நாண் பயணம்,
நாட்கணக்கு.

 7/21/2008 02:28:00 PM

Wednesday, January 07, 2015

புனைவு


அறியப்படுதலுக்கு
இரு வழிகள்;

வழியும் ஒளியாதல்
                |
நிழல்களின் கதையாதல்

'11 01 20 11:17 EST

வாசிப்பு


வாசிக்காமலிருந்தேன்
வாசிக்கிறார்கள்
வாசிக்கிறேன்

January 22, 2011

அரசன் குறை

அரசன் குறை
------------------


"கொலையுண்டார் மனுசர்"
என்றேன்.

"பொறுத்திருந்து பார்ப்போம்"
சொன்னார், முத்தெனத்
தத்துவம் புத்தகமிருந்து
தின்றார் பொறுக்கி.

வருமோர் இருள்நாள்,
"இன்னும் கொலையுண்டார்"
என்பேன்.

"இனி ஒரு
முறை பொறுப்போம்"
சொல்வார், இன்னொரு
தத்துவம் இனிதே
மெல்வார் சப்பி.

பின்னொரு பொழுது
'இன்றும் கொலையுண்டார்"
என்ற காலை,

"இனிப் பொறுப்பதில்லை
கண்டேன் யான்"
என்றெகிறித்
துள்ளி நின்றார்,
"விழுந்த தலை கீறி ஆய்ந்து
படுகொலையின் உட்தூங்கு
தத்துவதர்மம் விண்டேன்.
இனியும் பொறுப்பதில்லை
எம் முன்பதிப்பே
ஆகுங்காண்
தமிழ்கொள் முதல்
அருஞ்செம்பதிப்பே,"
சொன்னவர்
தாடி கோதி
அறிவு சீவிச்
சென்றார் பாதை
பதிய புதிய
வேளை அண்ணாந்து
பார்த்து நடப்பார்
அடுத்துத் தடக்கும்
அறிவுசீவிச்சிறு
புள்ளார் புல்லார்.

தலை
கொள்ளும்
தத்துவம்
முக்கியம் - பின்
இலக்கியம்! ஆத்ம
தரிசனம்!

தத்துக்கா!*
பித்துக்கா!*
தொத்துக்கா!*
நிறையச்
சா!*



சீராக்கா முதற்படி: January 30, 2011
திருத்தம்: ஜூன் 10, 2023
*தூண்டலுக்கு நன்றி: தவளைக்கவிதை -பிரமிள்

நியாயப்படுத்தல்

என்
ஆடுவால்களினதும்
போடுவரிகளினதும்
நியாயம் த(தொ)க்க
பெருங்கருணையுள்ளவர்கள்
எல்லாத்தளத்திலும்
அடை(ப்பக்காரர்தரு)மொழிகளுடன்
இயங்குகின்றார்கள்:
கேர்ணல்
கலைஞர்
கவிஞர்.


February 7, 2011

வில்லை குவிநிலவு



எல்லாக்கணங்களின் பின்னும்
எரிகின்ற வில்லை
குவி
நிலவு.

சாம்பல் கரை வானம்
பூத்துச் சரி
துகள் வெள்ளி
துளிர்த்து நடக்கும்
காலம்
நிகழ்.

கவனி,
கடந்தது முளை
களம்
கணம்.

January 15, 2012

வன்கவிதை

பேப்புடுக்கே!
சாக்காட்டில்
பூக்கோ பூக்கோவென்றால்
பூக்குமோ புதுப்போக்கு?

2/17/2009 08:02:00 PM

நவநாவலந்தீவு மணிமேகலர்


அடங்காப்பிள்ளையெல்லாம்
அன்றலரக் காத்திருந்து
எல்லோர்க்கும்
அச்சாப்பிள்ளை வந்தார்
பிட்சாபாத்திரமாய்;

கச்சாப்பொருள்:
கார்ல் மார்க்ஸ்.

3/12/2010 09:22:00 AM

ஒன்று



ஒன்றைச் சொன்னேன்
ஒன்றுமில்லை என்றார்
ஒன்றும் சொல்லாதிருந்தேன்
ஒன்று வேறாய்ச் சொல்வார்




ஒன்று ஒன்றுமில்லை;
ஒன்றும் ஒன்றில்லை.

-/.

20:36 கிகநே

பிடுங்கிப்பார் முடிந்தால்!

மயிரைப் பிளந்துகொண்டு
கிளை முளைக்கும் தாவரம்,
நான்;
பிடுங்கிப்பார் முடிந்தால்!

மாதேவன் தொலைவான்
பேரேகன் அலைவான்
கறங்கூழ் உலகில்
சிண்டுநூலாகு கணு
மயிரைப் பிளந்தரிந்து
கூர்த்துளிர் முளைக்கும்
வேர்நிலத்தாவரம் நான்;
பிடுங்கிப்பார் முடிந்தால்,
பிணந்தின்னி,
முன்னெழு என் நடுவிரல்
நீ மடக்கி.

~~~~~

பேசமறுக்கும் வெளியில் கிளை தூங்கும் பறவையாகின்றேன்.
சொற்கள் சிதறிக் காலம் கொத்தித் தின்கிறது.
எத்திக் கிளறி மழை மணக்கின்ற பழமை,
சுருங்கும் நிலை செல்வயது.
சொல்; நீ நானா? நான் நீயா?

~~~~~~

 நிரப்பிக்கொண்டிருக்கிறேன்
வீடு-
வாகனம்-
வேலை
-வாகனம்
-வீடு

கடைசிப்பொற்காசுமட்டும்
நிரம்பா மண்குடம்
நான்.

 ~~~~~~

இயங்கக்கூடாத் தவனத்தில் இயக்கமாகின்றேன்
ஒதுங்கக்கூடாக் கூரைக்குள் ஒண்டிக்கலைகின்றேன்
கறங்கமுடியாச் சில்லுக்குள் சகடைக்கனப்பாகின்றேன்
உட்கரு நனைந்து
அனுங்கி நிறை துளி
சொட்டிக் சிதறும்
கணம்
அலையும்;
கரையும்;
மறையும்;
அகலிகைக்
கல்+காலம்
என் தவம்.

~~~~~

எனக்கொரு கதை உண்டு
என்னிடமொரு கவிதை உண்டு
என்னோடொரு காட்சி உண்டு
நான்
இல்லை

~~~~~


எல்லாக்கணங்களின் பின்னும்
எரிகின்ற வில்லை
குவி
நிலவு.

சாம்பல் கரை வானம்
பூத்துச் சரி
துகள் வெள்ளி
துளிர்த்து நடக்கும்
காலம்
நிகழ்.

கவனி,
கடந்தது முளை
களம்
கணம்.

~~~~~

 உனது பழந்துயர்களை
ஒரு முட்டாக்குமயிலிறகின் நுனி துளிர்
கிளைநதியென வளைத்து உழைத்து
நீயெழுது.
முடிவில் எனது முடியைச் சிரம் சொருகிவைப்பேன்!
பொழுதெல்லாம் பிறர் தனைப் பொருதித் திரிந்தவன்
பொழுது பிறழ பிறர் தலை பொருந்தித் திரிவானாம்.
குடிமக்கள் உழவறுப்பில்
வாழ்ந்தது கோன்!
வளர்ந்தது கொற்றம்!
உனக்கென்ன?
எழுது...
முடிய வருவேன்
உன் தலையில்
என் முடி பொருத்த


~~~~~

அழிப்பவன் விடாய்த்தொன்னையிலே விழுந்துலைகிறது சொல்
இழுத்துக்கொண்டோடுகிறது பள்ளம்
சொல்லுக்கு மூச்சில்லை
சொல்கின்றவனுக்கு
உள்ளத்தின் உள்ளே
உள்ள பள்ளத்தே
நடுகல்.

~~~~~


குறுக்கிலும் நெடுக்கிலும் கவிதை சுரக்க
எழுதிக்கொண்டிருப்பவனின்
கவட்டு இடுக்கினில் முளைக்குது வீரம்.
அடுக்கு
துடுக்கு
கொடுக்கு
தடுக்கு
சொடுக்கு
முடுக்கு
புடு.....

பொரட்சிக்கவிதை
பொளந்துது போ!
பொழைப்பு...
....தூ!


~~~~~


5/06/2012 07:10:00 PM

இழவு முடிந்தபின் உலர்ந்துதிரும் கவிதை

கல்முறித்துக் காலெழுப்பிப் புல்முளைத்த பூமி
வாங்கிக்கொடுக்கும் பொலிவிருது
ஒரு புள்ளுக்கு - பொய்யேனும் சிறுபொருந்து-
சிறகு நெய்யக்கூடுமா?
காற்றின்னும் காதருகே வீசி உரசிப்பேசும்
நிணக்கூற்று
ஓயா ஊற்று...
கள்ளூறிக் கடைவிரிக்கும் சப்பாத்தி
விருதைக் கக்கத்தில் வையாமல்
கைவீசிச் சுழட்டி எறிவாயா,
துப்பற்ற வேளை தூங்கினவனும்
தூக்கினவனும் சேர்த்துத் தந்தென
......................- உள்ளகத்திலே
உண்மைத்துப்பிருந்தால்?

நீயென் செய்வாய்?
பூக்கொத்தாலானது

உன் போம்பொழுதின் பொய்!

~~~~~

வடக்கும் தெற்குமாய் உழலும் உலகுக்குள்
கிழக்கும் மேற்குமாய் என்ன மயிரைப் போய்!
சடங்கு!
சங்கு!
கூ!!!!!!


~~~~~


வாசிப்பு
மறுவாசிப்பு
மறுகா
சிப்பு சீப்பா
சிரிப்பு!
பூ!
வாசிப்பு & மறுவாசிப்பு


~~~~~


நடக்கின்றபோது மண் தலை ஒளிக்கின்றது
ஒளி பிடிக்கின்றபோது மண் தலை கொடுக்கின்றது.
விருதும் விருந்தும்!
உனக்குத் தும்மல்
என் எச்சம்!
அம்மணி,
அவம்!
சவம்!

~~~~~

இழவு முடிந்தபின்
உலவும் உழவாய்
உலர்ந்த மொழியில்
நடை பிறழ்ந்து வரும்
கவிதையை
நான் எழுதினால் என்ன?
நாய் எகிறினால் என்ன?
வாழ்வலர்ந்தது
வெறும்
வள்!

5/06/2012 07:30:00 PM

அழிதலின் பெருவெளி

அழிதல் பேசாதிருக்க நீள்கின்ற பெருவெளி
சுழியச்சங்காகு பாதை கை அளைந்து
துளைத்து முன்னோடும் அந்தித்துருவத்தின்
காதல் வளைபுருவக்கோடு;
ஓடும்;
தரியாது
தவனம் துருவனாகி
அழைத்தோடும்.

இரக்கமற்றவள்பற்றிய துன்பக்கவிதையைப் போல்
வடக்கிருப்பவன் பாதையில்
தென்புலத்தான்கயிறு குறுக்கோட்டி
நகர்கிறது மைம்மற்பொழுது.

காலப்புட்டிக்குள்
சிக்கிக்கொண்ட
பூச்சியின்
வட்டக்கண்கள்
எனது




-/.
08, மே 2012, செவ் 10:06 கிநிநே.

சுயமைதுனன் ஸ்ரீமத் ஜெயமோஹன்பிள்ளை

உனக்கான சுபகாலத்தில்
திட்டமிட்டுக் கவடு தூக்கி
கம்பி பிரிந்திறங்கி
என் வீட்டுப் பற்றைக்குள்
உன் உச்சிவளை எறிய ஒழுக்கிலே
நிதானமாக
ஒண்டுக்கடிக்கிறாய்
உன் மொழியை
உன் விருப்பை
உன் அழுக்கை.

உன் மூத்திரமொழி புனைந்து சொரிகிறது:
என் மூச்சை
என் பேச்சை
என் நிகழ்வை
என் தரவை
என்னை.


~~~~~

பாஸிஸ்டுகள் இருவகை:
எனது;
எனதல்லாததும் உனதல்லாததும்.

நீ pure shit

 5/16/2012 11:20:00 AM 
(இந்திய அமைதிப்படை பற்றிய கருத்தின் பின்னாலே....)

குண்டலகேசி

மண்டியிட்டுக் குந்தி
நிலைக்குத்தாய் நாட்டுகிறாள்
பத்தா தீசா
-சிறுநாவற்கிளை.
ஒவ்வொரு நீள்கேசமும்
தனித்தெடுத்துப் பிடுங்குவாள்...
கேட்பு |
காட்சி |
வாசிப்பு |
எழுத்து...

முடிக்க,
மழிக்கும் கருக்குமட்டைக்காய்க்
காத்திருக்கின்றாள்.

புறப்பூச்சாய்
பேச்சுமட்டும் இன்னும் பிரிந்து
தொங்கிக்கொண்டிருக்கின்றது.
 

சம்புக்கோளறுபதிகம்

முன்னால்,
மகிந்தன் மிகுந்தலை வந்தான்;
புத்தன் ஞானம் பெற்ற போதி
மரக்கிளை தருவதாய்ச் சொன்னான்.

பின்னால்,
மித்தை மிகுந்தலை வந்தாள்;
உன்மத்தர் ஞானம் பெறப் போதி
மரமுளை நாட்டி நின்றாள்.

மிகும் தலை போதி தழைத்தது
- முள்விட்டு.

Monday, August 06, 2012

கதாகாலம்*


சீர்திருத்தக்காரன் சீந்தாமல்

சிதிலமாய்ச் சிதறிச் சரிகிறான்  
கொல்லப்பட்டவன் கதைகளைக்
கொலைகாரன் எழுதுகின்றான்

இடைத்தரகன் கூலிக்குச் சூல் சுமக்கிறான்

மாடுமேய்ப்பவன் எல்லைக்கோடுக்கப்பாலும்
பெருவிரலழித்து வந்து போகிறான்
இத்தனைக்குப்பின்னும்
எஞ்சியவன் விந்தி 
உந்திக்கொண்டிருக்கிறான்

சவத்தின் இலக்கியம்,
பனியாய்ப் பொழிந்து
மழையாய்ப் பெருகி
கதிராய் எரித்து
-கடந்து போகிறது 
காலம்.

மனிதனின் மகத்தான பதக்கத்தை
உன்னதமாய் நீயே வைத்துக்
கொ...............ல்.
Thursday, August 09, 2012
* கதாகாலம்:  இத்தலைப்பு, தேவகாந்தனின் நூலின் தலைப்பிலிருந்து இரவல் எடுக்கப்பட்டது

பேயர்புராணம்


பெயரில் எழுதுகிறேனா? - கேட்டார்.
பெயரிலி எழுதுகிறேன், என்றேன்.
பெயரிலி பெயரா? - கேட்டார்.
பெயரிருந்தால் பெயரிலி எதுக்கு?

Tuesday, April 23, 2013

காணாதாரைக் கண்டாரும் காணாமற்போங்காலம்

இம்முறையும் மறக்காமல்
"காணாமற்போனவர்கள் பற்றி என்ன செய்கிறாய்?"
-கேட்கிறார்கள்.
இதுவரைநாள், தொடராய்த்
துன்பக்கதை எழுதுவதாகச் சொல்லிக்கொண்டிருந்தேன்.

இன்று
கதை எழுதுவதை நிறுத்தி, துண்டுத்
துயர்கவிதை எழுதத் தொடங்கியிருப்பதாகச் சொல்கிறேன்.

காணாதாரைக் கண்டாரும்
காணாமற்போங்காலத்தின்
ஒருகாலை, துயர்
கவிதையும் குமிழாய்
குப்பென்றொரு வெப்ப ஊதலில்
பட்டென்று வட்டமுடைந்து
தொலைந்துபோகலாம்,
யார் கண்டார்?

Monday, January 05, 2015

தொலைமனம்

பேய்க்காற்றில்
பிடிதசை பிய்ந்த பூவென
பசி நுகர்வோ டலையும் இரவில்
துயில்வ தெவ்விதம்,
தொலை மனம்?

மே 24, 2013

உரை

செயற்பாட்டுவினையிலே சொல்லத்தொடங்கும்போது, எளிய, நேரான முரட்டு எழுத்தாளன் பிறர்க்கு வனைந்த சோளக்கொல்லைப்பாதையிலே தானே வழி சிக்கித் தொலைந்து இலக்கியவாதியாகின்றான்; முன்னைய நாளிலே முட்டுக்கொடுக்கும் விமர்சகன் வைத்த செய்வினை நுனி கௌவி அடிபற்றித் திரி கொழுந்தெழுந்தெரிந்து பலிக்கத்தொடங்குகின்றது. தன் எழுத்தின் மென்கழுத்தைக் கையிணையால் மூச்சுத் திணறி முட்டத் திருகிவிட்டுத் தற்கொலை செய்துகொண்டு வீட்டுத்திரத்திலே பாதி விழியும் நாக்கோடு வெளித்தொங்கத் தூங்குகின்றான். "அசுவத்தாமன் மாண்டாலும்" தர்மன்கால் இப்போதும் காண், பாவவில்லை கறைமண்தரை.
எழுத்து குளிர்சாதனப்பெட்டியிலே பின்னொரு நாளுக்கென்று அள்ளிப் போட, செத்து, உப்புப்புளிகாரமிட்டுப் பொரித்துப் பின் சூடலர்ந்த விரிகோழித்தொடையாக, சுவை சூம்பி, மலைத்துறைந்து கிடக்கின்றது.
விமர்சகநபும்சகன் வேறு பதிக்கிற அழுகிய வெங்காயபுரவலவியாபாரி வாயிற்படி தேடிக் கைமுட்டோடு நகர்கிறான்.
இலக்கியம் வெண் காயவியாபாரிகளின் கலம்!
இது வெங்காயவியாபாரிகளின் காலம்!
ஆதலால், அற்பமனுஷ்யர்களே! இரட்சிக்கும் வெண்வியாபாரிகட்கும் விமர்சகநபும்சகர்கட்கும் பெரும்ஸ்தோஸ்திரமாயிருங்கள்!
தேவதேவர்களினதும் அவர்தம் ஆண்டவர்களதும் கிருபை நுமக்குண்டாகும்!
ஆதியிலே சொல்லிருந்தது!
ஆங்கிருந்து அட்சரம் பிளந்து பிறழப்பிறந்தது
அவர்களிற் பிழையில்லாதார் கைதன் முதற்கல்.
எழுத்தின் செய்வினை இலக்கியத்தின் செயற்பாட்டுவினையாம்.

ஜூன் 2, 2013

வெளிப்பறக்கும் வெண்புறா

என் அயலவனை நீ கொன்றுவிடு
உன் அயலாளை நான் புதைக்கிறேன்
காண்!
என் அயலவனை நானும்
உன் அயலாளை நீயும்
ஒன்றுமே செய்யவில்லை.
தம்மம் அரிமாக்கொடிக்கம்பமேறி
வெண்புறாவாய் வெளிப்பறந்தது
பார், போ!
ஜூன் 22, 2014

கலையை|யப் பார்த்தல்

கலையைக் கலையாகப் பாருங்கள்
களையைக் களையாகப் பாருங்கள்
கக்காவைக் கக்காவாய்ப் பாருங்கள்
கக்கூஸைக் கக்கூஸாய்ப் பாருங்கள்
துப்பாக்கி ரவையை.....
உணர்ச்சி வசப்படாது
உப்புமா கிண்டி
மேசைக்குக் கொண்டுவாருங்கள்.
கருவிரவில் மெழுகுருக
உட்கார்ந்து சாப்பிடலாம்.
பின்னால், பீத்தோவன் வாசிப்பார்.
கலையை,
கலையாமல் கலைக்காமல்
கலையாகவே பாருங்கள்.
கொலை தானாய்க்
கரைந்து கலைந்துவிடும்.
ஜூன் 24, 2014

அழித்துப்போதல்

இல்லாத ஒருவனைப் போல் என்னை அழித்துப்போகிறாய்.
காற்றாகிப் போனானென்று விரித்துக் கை விசுக்கிப்போகிறாய்
காவோலைக்கிழமென்றோ கைக்குழவியென்றோ
எண்ணிக்கடக்கின்றாய் முன்னால்?
அடங்குகுடத்துப்பூதம் அவிழக்கண்டு
மூர்ச்சையாகு காலம் உன்முன் எழமுன்
ஆங்கே நில்!
சொல்வேன்!
அறியாய் நீ!
பெயரிலி என்பதுவும்
ஒரு பெயர்தான்;
கடைகிழிய, பெருவாயால் உயிருறுஞ்சி
பிள்ளைதின்று சடைச்சிரசு முள்ளால்
புவிநடந்த பொல்லாப்பழம்பேயொன்றின்
இல்லாதிருத்தலில் இருக்கும் பெயர்தான்.
புரிதலின்போது புரிவாய்
வரும் காலம்
வருங்காலம்.

july 26, 2014

குறிப்புரைக்கா

இறந்தார் என்றார்
திறந்த குறிப்பில்
பிறந்தாராயில்லை.
இறந்தார் குறிப்பில்
பிறந்திருந்தேனா?
எழுந்திடாப் பிறப்பும்
மறைந்தார் இறப்பும்
திறந்தொரு குறிப்புரைக்கா.
-/28 ஜன. 2014.

கருந்துளைகள் பிளந்த காலம்

கருந்துளைகள் பிளந்த காலம்
-------------------------------------------------------
கருந்துளை பிளந்தது;
கட்டுவிரியனாய், கம்பிளிப்பூச்சியாய்
சொட்டியோடின குறுகுறுத்துச்
சுட்டிநண்டுக்கதிரரவம் சில
திக்கொன்றாய்ச் சடை பற்றியெரிந்து.
தீச்சுடர் சொட்டிப் புனைந்தன
கதை; "சுற்றுமையம் யாமே!"
கருந்துளை புட்டுவந்தோமா,
புளுகில் புனைவும் சவ்வாதும்.
அவித்துக் கதை கொட்டும்
குட்டிக்கதிரவர்க்கும் உண்டாம்
போட்டிக்கதிரவச்சுட்டிகள்.
எட்டிப்போன வால்வெள்ளிகட்குத்தான்
எத்துணைக் கொண்டாட்டம்!
எரிந்து செத்த கோள்கள்
நிமிர்ந்தகூனிகளாய் எழும்,
எரிக்கும் கதிர்களின் வெப்பத்தேயெழும்.
எரிக்கும் கதிர்கள் இழிந்து அழியும்.
மேற்குத்தூமகேதுகள்
கிழக்கும் வடக்குமாய்
துன்பச்சேதியோடு
மேலும் நகரும்.
இதனிடையே, கருந்துளையேயில்லையென
ஹோக்கிங் சொன்னாராம். அவர் சொன்னது’
அஃதில்லையெனப் பின்னால், இன்னொருவர்
சொன்னாராம். எண்ணிக்கொண்டால் இப்போது,
எல்லாக் கைரேகைகாண்பாரும் வல்லமைகொள்
வான்சாஸ்திரிகள்; இராகுகளே இரவிகளென்று
இருட்டோடிருட்டாக இருந்து நிறுவுவார்கள்
~~
காடிருந்து வீடு நடந்தனர்
வித்தகச்சீடர் நால்வர்.
வழி கண்டெடுத்தார்,
புழுதி என்பொன்று.
“சதை கொடுப்பேன்,”
வித்தகம் ஒன்று;
திரண்டது சதை.
“உன்னைவிட விண்ணன் நான்;
உடல் கொடுப்பேன்,”
வித்தகம் இரண்டு;
எழுந்தது உடல்.
“விண்ணனுக்கு அண்ணன் யான்;
தோல் கொடுப்பேன்,”
வித்தகம் மூன்று;
முளைத்தது தோல்.
“அண்ணனுக்கே மன்னவன் பார்;
உயிர் கொடுப்பேன்,”
வித்தகம் நான்கு;
உயிர்த்தது சிங்கம்
கைகொண்ட வாளொடு
வாற்குஞ்சம் மஞ்சமாட.
வித்தகம் நாலும்
வீண் என்பாய்
வீழ்ந்தன.
~~~
தூமகேதும் வாட்கேசரியும்
துல்லிய கணக்கிட்டு
மேலும் நடந்தன
சோடியாய்,
கைகூடி.
~~~
வெள்ளிக்காசு உயூதாசுகள்
வேதவியாசரென
வேடம்கட்டும்
வெள்ளையடிப்புக்காலம்
மெல்லச் சூழ்ந்ததவனி.
கருந்துளை கபாலம்
ஆழப் பிளந்த அக்காலம்
அகாலம்.
-/பெப்ருவரி 04, 2014.

பிணம்

சவம் சவத்தைப் புதைத்த
நிலம் குத்தி முளைத்த சவம்
பரப்பி விட்ட கிளையெல்லாம்
அரவ விழுது சவம் –
புதுசு, இளசு, முதுசு, இடை
முட்டுக்காயெல்லாம் சவம்.
விழுதுச்சவமும் வேர்ச்சவம்
சேராது அறுத்துப்போட, பிணம்
கூட்டி வந்ததும் சவம்.
அறுத்தவை பிரிக்கையில்
அரை குறுக்கிக்கிடந்த
ஆறாம் சவம் அமிதாப்ப;
பருத்து, தின்ற துன்பம்
தொந்தி தேங்கிச் சவம்.
கொடுப்புள் இன்னும்
கொத்தி நின்றது குமிண்சிரிப்பு.
குத்துமீசையாய் மயிர் கிழித்து
மீளமுளைத்தாலும் என்று
சவம் இலக்கம் ஆறை
நிலம் ஆழப்புதைக்காமல்
நீறாய் எரித்தது பிணம்.

July 2, 2014

அலருணவு

பரந்து பதார்த்தம் நிறைந்து
மிளிரும் மேசைவிரிப்பு
காலாறப் போன கவிதையைத்தான் காணோம்
இன்றும் அலர்ந்ததாய்
இரவுணவு.
-/.
2015 ஜன. 03

another passing one

தினவெடுத்த ஒரு மொக்குக்காந்தமாய் அலைவான் யான்.
துருச்சட்டி, மொட்டையூசி, அரிகத்தி, தகரப்பேணி
கண்ட திசை ஓடிவந்து கட்டிச்சுளையென்று சூழ – திசையிரண்டு
எதிர்த்
தினவெடுத்த இலாடக்காந்தமொக்கு.
சத்தற்ற இரும்புச்சடமாயிருந்திருக்கலாம்
சவக்கல்
நிசப்தம்.
-/.
2015 ஜன., 03

தலைப்பிலிக்கசிப்பு

அருமையான படைப்பாளிகள் காற்றோடு கலந்துபோயினர்.

எருமையான படைப்பாளிகள் கலகத்தோடு கலைந்துபோயினர்.

சிறுமையான படைப்பாளிகள் சில்லறையிற் கழிந்துபோயினர். 

படைப்பு,

கடந்த ஆட்காட்டிக்கும் அவரவர் தலையாட்டிக்குமான

வெறும் அச்சாறுப்புடைப்பாய்

மிஞ்சியதே....

காண்!