அலைஞனின் அலைகள்: கணம்

Monday, January 05, 2015

கருந்துளைகள் பிளந்த காலம்

கருந்துளைகள் பிளந்த காலம்
-------------------------------------------------------
கருந்துளை பிளந்தது;
கட்டுவிரியனாய், கம்பிளிப்பூச்சியாய்
சொட்டியோடின குறுகுறுத்துச்
சுட்டிநண்டுக்கதிரரவம் சில
திக்கொன்றாய்ச் சடை பற்றியெரிந்து.
தீச்சுடர் சொட்டிப் புனைந்தன
கதை; "சுற்றுமையம் யாமே!"
கருந்துளை புட்டுவந்தோமா,
புளுகில் புனைவும் சவ்வாதும்.
அவித்துக் கதை கொட்டும்
குட்டிக்கதிரவர்க்கும் உண்டாம்
போட்டிக்கதிரவச்சுட்டிகள்.
எட்டிப்போன வால்வெள்ளிகட்குத்தான்
எத்துணைக் கொண்டாட்டம்!
எரிந்து செத்த கோள்கள்
நிமிர்ந்தகூனிகளாய் எழும்,
எரிக்கும் கதிர்களின் வெப்பத்தேயெழும்.
எரிக்கும் கதிர்கள் இழிந்து அழியும்.
மேற்குத்தூமகேதுகள்
கிழக்கும் வடக்குமாய்
துன்பச்சேதியோடு
மேலும் நகரும்.
இதனிடையே, கருந்துளையேயில்லையென
ஹோக்கிங் சொன்னாராம். அவர் சொன்னது’
அஃதில்லையெனப் பின்னால், இன்னொருவர்
சொன்னாராம். எண்ணிக்கொண்டால் இப்போது,
எல்லாக் கைரேகைகாண்பாரும் வல்லமைகொள்
வான்சாஸ்திரிகள்; இராகுகளே இரவிகளென்று
இருட்டோடிருட்டாக இருந்து நிறுவுவார்கள்
~~
காடிருந்து வீடு நடந்தனர்
வித்தகச்சீடர் நால்வர்.
வழி கண்டெடுத்தார்,
புழுதி என்பொன்று.
“சதை கொடுப்பேன்,”
வித்தகம் ஒன்று;
திரண்டது சதை.
“உன்னைவிட விண்ணன் நான்;
உடல் கொடுப்பேன்,”
வித்தகம் இரண்டு;
எழுந்தது உடல்.
“விண்ணனுக்கு அண்ணன் யான்;
தோல் கொடுப்பேன்,”
வித்தகம் மூன்று;
முளைத்தது தோல்.
“அண்ணனுக்கே மன்னவன் பார்;
உயிர் கொடுப்பேன்,”
வித்தகம் நான்கு;
உயிர்த்தது சிங்கம்
கைகொண்ட வாளொடு
வாற்குஞ்சம் மஞ்சமாட.
வித்தகம் நாலும்
வீண் என்பாய்
வீழ்ந்தன.
~~~
தூமகேதும் வாட்கேசரியும்
துல்லிய கணக்கிட்டு
மேலும் நடந்தன
சோடியாய்,
கைகூடி.
~~~
வெள்ளிக்காசு உயூதாசுகள்
வேதவியாசரென
வேடம்கட்டும்
வெள்ளையடிப்புக்காலம்
மெல்லச் சூழ்ந்ததவனி.
கருந்துளை கபாலம்
ஆழப் பிளந்த அக்காலம்
அகாலம்.
-/பெப்ருவரி 04, 2014.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home