அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

an abstract/absurd lamentation on 'Ladri di biciclette'

'துவிச்சக்கரவண்டித்திருடன்' இற்கு
காலம் கடந்த ஒரு பார்வையாளன் புலம்பல் அஞ்சல் இது.
குறிப்பாய்ச் சேரும் முகவரிகள் தெரியாது;
இருப்புக்கள் தெரியாது.
ஆனால் அல்லது அதனால்,
அவரவர் வாழ்க்கை கொண்டோட்டும்
'துவிச்சக்கரவண்டிகள்
தொலைத்தவர்களுக்கும்
திருடியவர்களுக்கும்'
சேரட்டும்.

மீண்டும் நான்கு ஆண்டுகள் பின் சந்தித்தோம்,
முன்னைப் போலவே,
இடையெங்கோ
கணங்களுக்கு
ஒருங்கத் தரித்த
இரு எதிர்த்திசைப் புகையிரதப்பயணிகளாய்.

ஒரு தொலைப்பவனிடமிருந்து
ஒரு திருடுபவன் தோன்றக் கண்டேன்.
ஓர் ஏமாளியிடமிருந்து
இன்னோர் எத்தனின் பிறப்பு.

அவரவர் வாழ்க்கை நகர்த்தலுக்காய்
ஒரு 'துவிச்சக்கரவண்டி'
திருடவும் இயலாது தோற்றுப்போனவர்கள்,
கரைந்து போனார்கள்,
-தந்தைகள் அசாதாரணசூரர்கள்
என்றெண்ணும்
தம் மகவுகள் முன்னே,
நிலைகுலைந்து,-
மனிதக் கடலின்
துளிப்படு சராசரிகளாய்.

நீ வேறு,
நான் வேறு என்று பட்டிருக்கவில்லை;
வண்டிகள் வடிவம் வேறு,
காலத்தே ஓடும் வாழ்க்கைத்தடம் வேறு
என்றுபட்டதல்லால்.

முகம் அழிந்த
ஒவ்வொரு வீதிச் சாதாரணருள்ளும்
'துவிச்சக்கரவண்டித்திருடன்' அண்டோனியோ,
'நகர் விளக்குகள்' அலைஞன்
'பாதைகளின் துயர்' அபு,
என்னுட் போலவே
வெவ்வேறு விகிதங்களுள்
விழுந்தொளிந்திருக்கக் கண்டேன்,
என் இன்றைய விடிகாலைக் கூதற் கனவொன்றில்.

கைக்கெட்டித் தொலைந்த
'துவிச்சக்கரவண்டி' விதை
கனவுச்சிதைவுத்துயர் முன்னே,
கைக்கெட்டாத தூரத்துவண்டிகள் விசுறு
ஏக்கங்கள்
இயற்கையின் இயல்பாய்
ஏற்றுக் கொள்ளப்படக்கூடியன
என்று படுகிறது.

திரைச் செயல் நிகழ்த்திக்காட்டலின் பின்,
இரட்டைச் சில் 'சக்கரவண்டி' இனை,
நீ தொலைத்தலுக்காய்
இல்லை என் அழுகை;
அது,
அதற்குமுன்
ஒரு நாட்பொழுதுக்கு
உனக்குக் கிடைத்திருந்ததுக்காக மட்டுமே,
என் விழித்துளிர்ப்பு.

அக்கணத்தில்,
மெய்யென அடித்து
சொல்லப்பட்ட சத்தியம்,
உலகுக்குப்
புறமுதுகு காட்டிக்
குப்புறக்கிடந்தது,
முள்ளந்தண்டொரு
மூர்க்க அம்பு
கிழித்துப் பிளக்க;

பிரசங்கிகள்,
இன்னமும்
பொறுத்திருந்து
பூமி ஆள விண்ணப்பிக்கின்றனர்,
வெள்ளி மதியங்களில்,
ஞாயிறு காலைகளில்.

ஆயினும்,
தேவனும் குமாரனும்
தாமே தம் நீதியை மறுதலித்துச்
சாத்தானின் ஊழியராய்ச்
சாக்கடைக்கிறங்கிச்
சேவிக்கப்போன
ஒரு பின்னிரவு
அவக் குளிர் காலம் அது,
என் நண்ப,
அண்டோனியோ.

'99 ஜனவரி 07

0பின்னூடுகை:

Post a Comment

<< Home