அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, January 20, 2005

தனிநரைமுடி

காலைக்குளியலறைக் கண்ணாடியில்
நாடிநரை தாட்டுடைத்த கொட்டாவியிற்
பிறப்பார் அப்பா; செத்தார் முளைப்பார்,
வெண்முடியில்; சொட்டுந்துளி பட்டுத்
தெறிப்பார் ஆடி பளபளக்க.

செத்தார் என்னுட் சீவிப்பார் என்ற காலக்
கட்டியம் விலங்காகிக் கால் முட்டி முட்டி
அரக்கத்தான் இத்தனை நாள் வாழ்வு.....
"இந்த வயதில் அந்த நாள் அப்பா"
அம்மாக்குள்ளாலே, அந்தநாளாரை அறிந்தாருக்குள்ளாலே
என்னழுக்கு நகத்தைக் கூடத் தனக்குப் பிடித்தால்,
கிடைத்தபொழுதிலே வெட்டிப்போக உரித்தானவர்;
சனியிரவுமட்டும் சொட்டுச் சாராயம்
உதடு தொட்டுக் கொள்ளும் நண்பர்களும்
என்னளவிற் செத்துப் போகவென்றும்
இந்தவயதிலே வந்துபோக அந்த நாள் அப்பா.

அவசரத்தில் அவரசத்திற் சிரைக்கும் முடியோடு
மீள மரித்துக் கூடையுட் குப்பையாவார் அப்பா;
அதனாலென்ன? அடுத்த வாரத்துக்கும்
இரவு முதிர்த்து முறிக்க முன்னால்
மயில் ராவணனாய் முளைத்திருப்பார்
என் அப்பாமூக்கையடுத்தோ, இல்லை,
அவர் செதுங்கிச் செறி முன்னாடியை
முனைபட முள் ஆழப் பிரித்தோ.

என் மழித்த முகம் காண்பார்
களிப்புக்குரியதில்லையென்றால்,
கிடக்கட்டும். செத்தவர் முளைத்தாரென்ற
செய்தி ஒளிக்கச் சிரைக்கவென்றும் - சத்தமின்றிச்
சில சமயம் மூடுமென் காலைக்குளியலறை.

~10, Nov. 2003 Mon. 19:53 CST

0பின்னூடுகை:

Post a Comment

<< Home