அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, January 20, 2005

மக்களாட்சி மாண்பு

மக்களை மக்களாய் நடத்தச் சொல்லி
மக்களுக்காய் மக்கள் மக்கற்றெரு மறித்து
மக்கள் கூட்டம் மதிலோரம் போட்டனர்.
முக்கிய மக்கள் பேச, நடுத்தெருவில்
எக்கியெக்கிக் கேட்டார் மிச்ச மக்கள்.

சொடுக்கி மக்கள் அடிக்கக் கட்டிய மணியை
அரசமக்கள் அறுத்துப் பதுக்கல்பற்றிப் பேச்சு.

மக்களால் மக்களுக்காய்த் தேருண்ட
மக்கள் அரசு மக்கள் தெருவில்
பொதுமக்கள் போகவென்றாம்
மக்கள்காவலரைப் பக்குவமாய்
நகர் சுற்றி வர அனுப்பியதென்பது,
"மக்களே! இது உங்கள் வானொலி".

மக்கள் பிக்கலுற்றார்; பிணங்கிப் பினைந்தார்.
"வந்த மக்களை நின்ற மக்கள் நெருக்க,
நின்ற மக்களை வந்த மக்கள் நொருக்க,
பல மக்கள் பெருமண்டை உடைந்து,
சில மக்கள் சிறுமண்டை பிளந்து,
மலையெனக் குவிந்து, ஆறெனப்பெருகி"
என வினையெச்சித்து மக்கள் தாளிகை.

இத்தால்,
"மக்கள் வென்றார்" என்றார் அரசி மக்கள்
"மக்கள் மாண்டார்" என்றார் மறித்த மக்கள்.

மக்கள் ஆட்சியிலே,
வென்ற மகன் நானா, தோற்ற மகன் தானா
என்றறியா மீதி மக்குமக்களுள் புக்கி யானும்.

~09, ஜூலை '03 02:30 மநிநே. (அடிப்படி)
~15, ஜூலை '03 16:09 மநிநே. (திருத்திய படி)

0பின்னூடுகை:

Post a Comment

<< Home