அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, May 19, 2005

புண்ணியபூமி

காலங்காலமாய்
ஈரங்காணா
எங்கள் நிலத்திலே எதுவும் முளைக்கும்:
-இரு சிறு விரற்றுண்டு
-கடிகாரம் ஓடுமொரு கைப்பாதி
-பொசுங்குமயிர் நாற்றம்
-உதிரந்தோய்கிழிசற்சீலை
-புண்டபானை ஒழுக்கும் பழஞ்சோறு
-எரியுங்கூரை உத்திரம்
-நல்லதில்லாத நள்ளிரவு, சுடுகிற நடுப்பகல்
-பயந்த முகத்துடன் இடம் பெயர்ந்த மனிதர்
-புதியதொரு மொழி, சனம், குடிசை, குழாய்நீர்
-ஆயுதம் தாங்கி, கமிஸாக்கி, தொப்பி, சப்பாத்து
-இடமெல்லாம் வளைத்துச்சுற்றிய முள்ளுவேலி.
-இரட்டை இலை பிளந்தோர் இளம் வெள்ளரசு.

அத்தனைக்கும் ஆதியில்
வேறு வயல் வித்திட்டுக் கிள்ளி
நட்டதோர் முற்றிய நாற்றென
நடுவீதியில், புலர்பொழுதிற்
சட்டென முளைத்த புத்தன்
-திறந்த கண் தெரு விறைக்க
வெறுங்கல்லாய்த் தரை அறைந்து.
போதி அத்தனைத் தொடரும்,
போகா அத்தனை துயர்களும்.

பசும்புல்லை,
பாடுபுள்ளைத் தவிர,
தறை வெடிக்கும்
எங்கள் நிலத்திலே எதுவும் முளைக்கும்,
மூடிக் கண் திறக்க முன்னோ,
முன் காலை பிறக்க முன்னோ.

'05 மே, 19 வியா. 14:06 கிநிநே.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home