அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, May 22, 2005

கிரகணம்



மாலைப் பூங்காவில் ஆர்ப்பரிக்கும் ஒரு சிறுவன்:
"தெரிந்து கொள்! என் ஞானத்தந்தை தகியொளிச்சூரியன்,"
கை விரல் தூக்கி மேற்கு நிலம் முயங்கும் திசை நோக்கி,
காற்றை எதிர்த்துக் கதை சொல்லி, எரிசூட்டை மிதித்தான்போல்,
சுழல்வான்; சுழிப்பான்; அலைவான் கால் அங்கும் இங்கும்.

காதிலே குண்டலம் கண்டிலேன்; காததுவும் புண்டு தொங்கிலன்.
வாய் சொல்லுஞ் சொல் புரியாத சிறுபிள்ளையல்லோ இவன்!
"ஆர் சொன்னார்?" - அழுத்திக் கேட்டேன் - ஆனாலும்,
அடக்கிக் குரல் முடக்கி அவன் காதுக்கு மட்டும் எட்ட.
"அன்னை" என்பான், ஆள் காட்டினான், அருகொரு வாங்கில்.

குந்தி இருந்தாளைக் குறி வைத்துப் போனேன்; என்னதென்றாள்.
"நின் மகன் ஞானத்தந்தை ஞாயிறென்றான்" - நவின்றேன்.
கூசாமற் சொன்னாள், கூரான விரல், மேற்கைக் குறி வைக்க;
"ஞாயிறே ஞானமானவன்; ஞாயிறே ஞாலமானவன்;
ஞாயிறே நியாயமானவன்; ஞாயிறே நம்பகமானவன்;
ஞாயிறே விசாலமானவன்; ஞாயிறே நல்லொளியானவன்;
ஞாயிறே பீடமானவன்; ஞாயிறே நமக்கு...." சொல் விரித்தாள்,
வெறி மிதப்பாள், விழி சிவக்க, வரி புடைக்க, மயிர் சிலிர்த்து.
காலெடுத்துக் கடந்தேன்; கடி நகர்ந்தேன்; தாய் வேழம் இன்னும்
தடங்காமல் முழங்குமாம் என் நிழலும் தகிக்கத் தகிக்க,
வீசுவெயிலோன் விண்ணாணம் போமென் பிடரி பின்னால்.

கணத்தே, உள்ளிருந்து ஓங்கியடித்தாற்போல்,
உடனெழுந்தது சூழக் குவிந் திரவு குமிழ்ந்தது
போலோர் புறத்தோற்றம்; சூழல் திகைந்து திரிந்தது.
திகைத்துத் திரும்பி வான் பார்த்தேன்; கதிரோன்,
வீசு கதிர் விட்டான், வெறுங்கறை உற்றான்; சூழுங்
கரை மட்டுங் கொண்டான் கதிர், சுட்டுத் தின்றதார், சொல்?
வால் வளைத்துக் காலக்கேதோ? வயோதிபக் காலக்கேடோ?

ஆனாலும், மாறாத காட்சி சில மருட்டும்,
மங்கு இருளிலும் பொங்கு மகிமை பற்றி;
கிளியெனக் கூறும் சிறுவன்,
இன்னும் புகழ் கூவுகிறான், கேள்,
வெறுஞ்சூனியன் ஆனானை, ஞான
வெளிச்சூரியன் என்றே விடாமல்,
கூடிப் பேசுகிறாள், பார், குந்தி,
பட்டொளி வீசும் பகலவன் வீரம்.

வெறும் பெருங்காயப்பெட்டியும்
திறந்தால் மணக்கும்; கறிக்காகுமா?

சூனியகிரகணம் ஒளிக்காகுமா?


'05 மே, 22 ஞாயி. 04:57 கிநிநே.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home