அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, January 20, 2005

புத்தாண்டு

ஒரு செத்த பாம்பைப்போற் சில்லிட்டு ஆண்டிறுதி;
அப்பப்போ மட்டும் அங்கங்கே உப்பி
வெப்பக்காத்து கொஞ்சம்-
இந்தப்பக்கம், அந்தப்பக்கம்.

மொத்தத்தில் மேடைக்கும் தரைக்குமாய்
பேச்சும் நான்; கேட்பும் நான் -
ஒத்தைப் புழு தத்தித்தடக்கி
கொத்தத் தேடும் ஊத்தைக்காக்கை.

பக்கத்துக் கத்துங்கடலோசையும்
பெருங்கதவெடுத்து மூடியது காது.
அப்பப்போ மட்டும் அரங்கு சப்பும்
உப்பற்ற வெப்பக்காத்தூர்-
அந்தப்பக்கம், இந்தப்பக்கம்
கத்தவும் அப்புறம் மெல்லத் தத்தவும்
சத்தின்றிச் செத்ததாம் தனிக்காகம்.

சட்டை உரித்தூரும் குட்டிப்பாம்புப்புத்தாண்டு;
அழிந்த மேடை மிளிர்ந்து மிதந்தது மீளச் சனம்;
தூரச் செத்துக்கிடந்ததொரு சின்னக்காகம்.

31, டிசம்பர் '03

0பின்னூடுகை:

Post a Comment

<< Home