அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, May 26, 2005

மழைக்காலப்பெருவீதி


படம்: '05 மே 26, வியா. 11:36 கிநிநே.

மழைக்காலப்பெருவீதிகள் என்ன செய்யும்?
எழுதிக் களைத்தெரிந்த எழுத்தாளனைப்போல்,
எண்ணம் மிதக்கத் தூங்கும் இரைமீட்டி.

நிறுத்தின கார்கள் பற்றி நினைக்கும்;
நிமிர்ந்த நெடுவரிக்கட்டடங்கள்
நிலைக்கக் கண் வெறிக்கும்;
நிற்கும் மரம் விதைத்தது, முளைத்தது,
பூத்தது, காய்த்தது, பழுத்தது, பட்டது,
விட்ட விழுது, கொட்டின இலை,
இளமையில் புழு கொத்திச் செத்த முளை
அத்தனையும் அலையும் அதற்குள்;
தார் கொதிக்கத் தகிக்காது
தலை தொலைத்த சூரியனைக்கூட
கார் மேகத்தூடு கண்தேடிக் கலங்கும்.
தனிமை தரை பிளக்கும் வழி.

எப்போதேனும் வருமொரு கார், புகை,
ஆளிரண்டு, அவசர இலைச்சலசலப்பு.
கணமிரண்டு கழியும்; ஒன்று, இரண்டு,
இன்று நிற்க உள்ளக்கனிவிருந்தால்,
மேலோர் அரைக்கணமும் மேவலாம்.
அதன்பின், ஆள் போகும்; கூடக் கார்;
மெல்ல, மீளத் தொடங்கும் இரைமீட்பு.

காலம் காரென்றால்,
வீதிகளுக்கில்லை பேதம்,
பெரிதும் சிறிதும்.

'05 மே, 26 வியா. 13:58 கிநிநே.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home