அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

அம்மாவுக்கு, எனக்கு அல்லது என்னைத் தொலைத்த எவருக்காவது

அம்மா,
என் இருண்ட நிழல்களில் உன் முப்பது வயதுக்குழந்தை
முகத்தை நீ தேடிக்கொண்டிருப்பது எனக்குப் புரிகிறது;
தனக்குத் தானே தெளிவின்றி தொலைந்த
முகத்தை நீ எப்படிக் கண்டுகொள்ளப்போகிறாய்
காலத்தின் வீச்சத்தினையும் விகாரத்தினையும் வடிகட்டி?

பெற்ற குழந்தை முகங்கள் அழகானவைதான்,
தோல் நிறங்கள் எதுவென்றாலும்,
அவைதம் ஒற்றை விம்ப மனங்கள் போல.
ஆனால், காலத்தே
நிறங்களுக்கு நிறமூட்டப்பட்ட புலிவேஷக்காரன்
வெளி வரி மனங்களின் அடித்தொலைந்த
மகனை எப்படி நீ முகங்களில் இருந்து
இனம் கண்டு தூக்கி, பால் கொடுத்து,
தாலாட்டித் தூங்கப் பண்ணப் போகிறாய்?

உன் எண்ணப்படிவங்களில் தூசாய்க் கிடக்கும்
வண்ணங்களை இன்னமும் நான் அணிந்திருக்க
நீ எதிர்பார்க்கிறாய் என்று எனக்கு அறிவிப்பதே
உன் முழுநேரத்தொழிலாக ஆக்கிக் கொண்டு
அவஸ்தைகளை உனக்கும் எனக்கும்
ஆண்டுகளுக்கும் பொதுவாக்கிக் கொண்டு போகிறவளே,
என்னை விட என்னை நன்றாகப் புரிந்தவள் நீ
ஆதனாற்றானா, என்னைப் பற்றிய புரியாமையையும்
உன் புரிதல் என்று எண்ணிக்கொள்கிறாய்?

நான் என்று எதை நான்
இத்தனை நாள் எண்ணிக்கொண்டிருந்தேனோ,
அந்த என்னை நானும்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்.
நீயும் உன் பங்குக்கு உன் பிள்ளை ஆகிப் போன
என்னைத் தேடிக்கொண்டிருக்கிறாய் போட்டிக்கு.
யார் காண்கிறோம் என்பதல்ல என் முக்கியம்;
யாராவது காணவேண்டும் என்பதானது மட்டுமே;
என் மனத்தில் இல்லாத் தேடலின் நம்பிக்கை
உன் முகத்தில் கீற்றாகத் தளும்புகிறது கண்களில்.
மீள இந்தப் புது ஆண்டும் எம் தேடல்
பழைய ஆண்டுகளைப் போல் பாரம் ஏற்றமட்டும்
என்றாகிப் போகாமல் போகட்டும் என்று சொல்லி,
உன் கிழக்குழந்தையின் கண்களில், கருத்துக்களில்
துருவித்துருவித் தொடர்கிறது உன் துழாவல்.

என்றாவது இருவருள் ஒருவர் இல்லையென்றாகமுன்
எங்காவது என்னைக் கண்டால் எனக்கும் அறிவி.
அதுவரை அடுத்த ஆண்டுகளுக்கு உன் தேடலுக்காய்
இன்னும் மேலாய்த் தொலைந்து போகாமல் இருக்க
ஏதாவது வழி தேடிக்கொண்டிருக்கிறேன்
இங்கிருந்து நான்.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home