அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, January 20, 2005

தளையுறாததும் தலைப்புறாததும் V

நகரா நட்சத்திரங்களைக் கற்றுக்கொள்ள
நாள் பார்த்திருக்கிறேன் நான்.

கைவீசி எறிந்த வெளியில் வேறெப்போதோர்
வாளைக் கைதூக்கிய வேளையிலே வேலையிலே
தொலைத்த நட்சத்திரத்தைத் தேடும் தொழிலும்
ஓடி வந்து ஒட்டிக்கொண்டதென் ஓரப்பையுள்ளே.

மிச்சப்பரப்பெல்லாம் மினுங்கித் தொலைந்தபின்னால்,
மொச்சைக்கொட்டையாய் மின்னித் தவிக்கிறது உடுமொட்டு
என்னை எண்ணிக்கொள் எண்ணிக் கொள்ளென்று.

அப்பப்போ பெய்ய அடைமழைக்குட் தலை ஒளிந்தபின்னும்
சத்தம்போட்டென் சாரற்சன்னலைத் தட்டும் சின்ன நட்சத்திரத்தின்
சன்னப்பாட்டின் சாரீரம் பின்னாலே
குடைந்த கிடங்கு குவியக் கவிந்து
சடங்கிருக்கிறது என் அம்மாவின் ஊர்.

எண்ணிக்கொள்ளும் வேளையிலே
எழும்பி வரலாம் என்னைக் கண்டு
"இன்றாவது வந்தாயோ" என்று வழி.

நடுங்க நடுங்க நனைவேன்
நகராமற் பால்.

~13 மே 2004, வியாழன் 03:13 மநிநே.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home