May Flower & Thanksgiving
வைகாசிப் பூ மலரும் வசந்தம் ஒரு காலை வரும்!
வாழ்ந்திருக்கும் பொழுதினிலே வாயாரச் சொல்லிடுவோம்!
நாம் வாழ்தலுக்காய் வீழ்ந்தவரே! வணங்கி உமை…
நன்றி! நன்றி!
நீர்த்தார்க்கும் நெஞ்சு தளதளக்க நிறைந்தார்க்கும்
காத்தார்க்கும் காவற் றெய்வங்களாய்ப் பூத்தார்க்கும்..
நன்றி! நன்றி!
மீட்டார்க்கும் மீள அறிதுயில் தாம் காண,
நாம் பார்த்தார்க்கும் நோக்காத்து நம்..
நன்றி! நன்றி!
மாண்டார்க்கு, மாள்தலின்கண் வரி பூண்டார்க்கு,
நாம் வாழ்தலின் நிலை ஆண்டார்க்கு..
நன்றி! நன்றி!
பெற்றாரை, எமைச் சூழ்ந்திருந்த எம் உற்றாரை,
எமைக் காத்து உயிர் விட்டாரை நினைந்துருகி..
நன்றி! நன்றி!
சான்றோரை, அவர்தம்மை ஈன்றோரை,
எம் மனை விளங்க வாழ்ந்தோரை எண்ணியெண்ணி..
நன்றி! நன்றி!
உயிர் வளி தின்ன, உடல் மண் உண்ண, உற்றதற்காய்
மறைந்தோரே உணர்வுடனே எம்முடனே கலந்தோரே..
நன்றி! நன்றி!
எரி தேசம் நாமகன்று, எறி தேசம் தாம் விழுந்து,
எண்ணில்லா அவத்தையிலும் எம்மினிலே நிறைந்தவரே..
நன்றி! நன்றி!
ஊனது புண் தின்ன, உயிரது போர் உண்ண,
நாளெல்லாம் மண்ணெனவே நாட்டமது கொண்டவரே..
நன்றி! நன்றி!
காற்றின் மிசை கொள்விசையாவீர்! கடலின் அலை மிகு நுரையாவீர்!
ஆற்றின் வழிச் செல்சுழியாவீர்! அங்கெங்கினா தகல நிறைந்தோரே..
நன்றி! நன்றி!
பாட்டின் பொருள் நீரென்போம்! பரத ஜதி நீரென்போம்!
சேற்றின் மொழி நீரென்போம்! செல்லு வழி தானெம்போம்!..
நன்றி! நன்றி!
பாடும் மீன் இசையென்போம்! பாலாவி ஆழ் முத்தென்போம்!
பனை விளை பாலென்போம்! குன்று
முடிச் சுடரென்போம்!
நன்றி! நன்றி!
கண்ணுள் மணியென்போம்! ககனப்பறவைதன் விரைவென்போம்!
புல்வெளியின் துமியென்போம்! பூத்தமலர் புதுமணமென்போம்!..
நன்றி! நன்றி!
எம்மில் நிறைந்தோரே! எங்கும் நிறைந்தோரே!
இச்சகத்தைத் துச்சமதாய் எண்ணிக் கரைந்தோரே! எண்ணியுமை…
நன்றி! நன்றி!
எப்பாலோ! எம்மதமோ! எவ்விடமோ! எம்முனையோ!
இப்பால் எம் கழிமுகத்தே, சேர்ந்திருக்கக் கண்டோமே!..
நன்றி! நன்றி!
குருத்தோலை நாட்டிவைப்போம்! கொள்திரியொன்று ஏற்றி வைப்போம்!
கருத்தேதும் பிசகாது, கண்மணிகாள் கவனம் கொண்டிருப்போம்!..
நன்றி! நன்றி!
கார்படிந்த மேகங்கள் கவிந்தாலும் வான்மீது வேல்
கார்த்திகையான் விளக்கீடு கலங்கரையாய் ஒளிவிளக்கும்!..
நன்றி! நன்றி!
தேசத்தை நினைந்தோர்க்கு நித்தம் நித்தம் மெத்த நேசம்!
நினைவுகளைச் சுமர்ந்தோர்க்கும் நெஞ்சினிலே நினைந்த நேசம்!..
நன்றி! நன்றி!
எரிந்தணைந்த கதிரும் அரிந்துண்ட கதிருக்கும்
வாழ்ந்திருப்போர் உணர்வதனால் வாயுரைப்போம்!..
நன்றி! நன்றி!
காற்றின் திசை மாறினாலும் மீகாமர்
புதுக்கத் தோன்றினாலும்
செல் திசைகாட்டியென்றும் அவ்வாதவனே! கலம்
செல்வோம்..
நன்றி! நன்றி!
காற்றாகிக் கூற்றாகி, கடல் ஒலிக்கும் பாட்டாகி
மாற்றாய் மின்மலருடுப்பூவாகி பூத்திருப்பீர் எம்மனத்தே..
நன்றி! நன்றி!
வைகாசிப் பூ மலரும் வசந்தம் ஒரு காலை
வரும்!
வாழ்ந்திருக்கும் பொழுதினிலே வாயாரச்
சொல்லிடுவோம்!
நாம் வாழ்தலுக்காய் வீழ்ந்தவரே! வணங்கி
உமை…
நன்றி! நன்றி!
0பினà¯à®©à¯à®à¯à®à¯:
Post a Comment
<< Home