அலைஞனின் அலைகள்: கணம்

Friday, December 17, 2004

16

பூமி சுற்றும் செய்மதியாய்
என்னுள்ளே பூட்டப்பட்ட தசாப்தம்.

எண்ணெய்க்கிண்ணத்தை இருகையேந்தி
சிந்தாது உலகு சுற்றும் யோகச்சுழிச்சிரசு.

நாளும் இரவும் ஓடும் நீரின்
உட்பொதிந்த உலோகம் தேடல்.
ஊத்தை திரளத் திரள, ஒளிந்திரு
உலோகமெலாம் தேடென்ற தள்ளுகை.

திமிறும் கையுட்பட மிஞ்சி
உள்ளங்கைக்கடைவாயால்
வழிந்து கழியும்,
எனக்காய்த் தரப்பட்ட நேரம்.

செக்கும் செய்மதியும் சுற்றிச் சாகமுன்,
எண்ணெய்க்கிண்ணமென் எண்ணமெறிந்து
ஊர்உப்புக்கடல்நீரில் ஓயாமற்கைவலித்து
உட்கொண்ட உலோகம் துப்பித்துப்பி
ஒரு கணக்கில்லா கவிதைநாட்காண சை.

சப்தப்படும் தசாப்தம் சலனமொழித்துச்
சடப்பட்டு நிசப்தப்படுமோ விரைந்து நின்று?

உள்ளங்கை ஒட்டிய நேரத்தையேனும்,
ஒருபோது எனதென்று
நக்கித்தின்ன வேண்டும் நான்.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home