அலைஞனின் அலைகள்: கணம்

Friday, December 17, 2004

17

கன்னத்திலே அறைய முடியாத அறைக்குள்ளும் வந்து
செவிப்பறையிலே அறைந்து போகும் இருளின் காலம்.

நீரொடுங்கிய ஜன்னலைத் திறந்தால்
நேற்றைய பின்னிரவென்று சொல்வதா
இன்றைய முன்விடியலென்று சொல்வதா
என்று கேட்காமலே முன்னே மூடிய இருள்.

மின்னும் தெருவிளக்கு மிளிரும் விளக்கிலும்
உயிர்த்ததாய் இருப்பது உணரக்கூடியதே.
சுயம் தெளிவாய் விழித்திருக்கும் என்னிலும்
கலவி நுழைந்து அரைவிழி சொருகி நிலை
முயங்கிக் கிடக்கும் யாரோயிருவர்
கைதளர்த்தி உடலிளகி
உயிர்ப்புடன் இயங்கியிருக்கலாம்.

இரவுகளின் பாவபுண்ணியங்களை
என்னுள்ளே எழுதிக் கணக்கெடுக்க
இங்கொரு சித்ரகுப்தன் நான்.

காற்றில்லா இந்தக் கட்டித்த பொழுது
விரைந்து குறுகிக் கரைய விரும்புகின்றேன்.
எண்ணம் அழுத்தும் எனக்காகவில்லை,
விறைசடமாய் கொட்டவிழித்திருக்கும்
எல்லாத் தெருவிளக்குகட்காகவுமாய்.

'01, April

0பின்னூடுகை:

Post a Comment

<< Home