அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

அப்புவின் சாய்மனைக்கதிரை

அசோகவனச்சீதை, நடுவறை,
என் அம்மாவென அழுது கிடந்தாள்.
"அறை அடைத்துக்கிடக்கிறது;
அத்துடன், அதுவும் உயிர்வற்றி.
உடைத்து,
அடுப்புக்குள் உலைக்குப் போடு"
என்றாராம் அப்பா.
அதை எரித்தல்,
கருணைகொலை தந்தைக்கெனில்,
தான் பெற்ற குழந்தைவதை என் தாய்க்கு.
எல்லாமே கண்டும் தனக்குள்
மௌனித்துக்கிடந்தது
உயிரற்றுப்போன தன் முன் சுமப்பு
என் அம்மம்மாவென, அது.
முடக்குவாத முதியபெண்
முட்டிக்கால் நான்கும்
பின்முன்னாய் வளைந்திருக்க,
பல்போய் சொற் தேடும் கிழ வாயாய்,
இழைத்த புல்நார் இற்று
இடைத் தெரியும் படையாய், புழுதி.
அப்பு போகையில்,
ஆச்சிக்கு% விட்டுச்சென்ற
அவள் கண்ட சக்களத்தி(யாம்).
பேத்தி அம்மாக்கு,
முதிரையோ முதிசமோ,
மு(ட)ங்கி அவள் முன்னோர்
மூச்சிட்ட முழுவாத்மா.
எனக்கது காண்பதுவோ, இன்று,
எனன்னை காண்பதுபோல்.
சிக்கனமாய்ச் சிரிப்பான், என்சிறு தம்பி,
" வீதி கடக்க இருமருங்கும்
சரிபார்க்கும் நடைசாரியென,
நார்புகு ஓட்டைகளில்
நாலாயிரம் மூட்டைப்பூச்சி."
சாய்மனைக்கதிரைக்கும்
சரீரமுண்டு,
தான் வாழ் குடும்பச்
சரிதமுண்டு,
சந்தோஷம், துக்கம்
எல்லாம், எல்லாமே
பங்கு பங்காய், தன் பங்குக்காய்.
வேறென்ன வித்தியாசம்?
அதுவும்,
வாலிபமுறுக்கத்தே எமை வாய்ப்பாய் வாழவைத்து,
காலத்தேயின்று,
ஓய்ந்துபோய் ஓலமிடும் ஒரு முதிய உறவினர்போல்.
மெதுவாக,
தன், சுவர் வைப்பு அதி
நிறைந்து, தீவுகளாய்
நிலங் கிடந்த
புத்தகப் புதையலுட்
புதைந்திருந்த தந்தை,
தட்டி,அறைஇறை நூல் சுட்டி,
தட்டித் திக்கிச் சொன்னேன்,
"அப்பா,
இத்தனை புத்தகமும்
இடுவோமே அதுமேலே?"
சில கணம் சிந்தித்து,
பின், தன் பேசும்
கண் எனைச் சந்திக்க
சிமிட்டிச் சிரித்தார்
தந்தை.

1பின்னூடுகை:

Post a Comment

<< Home