அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 20, 2004

கூடல்

அழிவு கடித்தறுத்துப் புடுங்கப் புடுங்க
பாலையிலே பல் முளைத்துப்
பரந்து கொண்டே போகிறது
இந்தப்பக்கத்துப்புல்வெளி.

உரு இடுங்கிய இருள் யாமத்தில், மருளுட்பொருதி
உடை கழற்றி உச்சாடனம் செய்துருக் கொள்கிறது
உடற்காமம் தற்பொருளில்.

மூசிகவேட்டையின்போது வியர்த்துக்கொட்டுகிறது
வெளிச்சம்போக பதுங்கிக்கொள்கிறது பகற்பண்பு;
வேர் பிரிந்து வேறொரு தவனத்தில் விரையும் விரல்கள்
எனதா? உனதா? வேறாளினதா? அடையாள வேடிக்கை வேகும்.
தேடலுக்குத் தீவிரக்கால் முனைத்து முளைக்கும்
தேவை தான் தோன்றியாய் தெருவுமின்றி அலையும்
திகம்பரசாமியாய்த் திருவோடு தாங்கி.
வாசிப்பும் யாசிப்பும் தம்பேதம் உருகி
ஒன்றாய்ச் சொட்டும் உள்ளண்ணத்தில்
வெம்மை.

கொம்பும் சங்கிலியும் குலைந்து,
நெருப்பாய் நடுங்கிப் பிதற்றும்
கொள் களிப்பும் களைப்பும் இடம் தொலைந்து.
மூசும் மூர்க்கத்தை உரசிமோதும் உள்முனகல்
கூடும்; குறை சொல்லும்; பாடபேதமே பாவமாக்கும்;
பற்றுக்கொண்டு பற்றிக் கொண்டு பற்றியளிரும் உயிர்.

மேலே மெல்லப்பற்றும் தீ மேல் படர்ந்து அள்ளிக்கொள்ளும் ளை
அடுத்த கணம் கருகிச் சொருகும் விழி, சுருங்கும் வெளி, அவதியாய்
அதைத்தொடரும் அம்புதைத்து காலம் அகாலமாகி அறுந்துதொங்க.

வெள்ளம் மதகுடைய,
துள்ளிய கலம் துவளும், மெல்லக்குளிரும் மேனி
மிதப்பு பையப்பைய பிள்ளைநடையில் இறங்கும் படி
தள்ளாடிச் சரியும் தலை; குருதிபாய்பள்ளம் மூடும் மூளை
எல்லை எழுந்து முள்வேலி சுற்றும்; விரித்தாடை தோல் மூடித் துளிர்க்கும்.
காலைத்தேவைக்காய்த் தனைத் தேடிப் பொறுக்கி,
பொத்திப் பத்திரப்படும் பகற்பண்பின் மாண்பு.

பசுமை பொசுங்கும் புல்; வெளி வெடித்தாகும் பாளப்பாலை.

இனி, எல்லாத்திசையும் கள்ளமோனம் மட்டும்
கடல்நண்டாய்க் கால் கவடிக் குறளும்.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home