அலைஞனின் அலைகள்: கணம்

Saturday, December 25, 2004

இராமபாணம்*#

ஆதியிலே ஒரு சொல் இருந்தது.
அதிலிருந்து கிளைத்துப் பிறந்தன இரண்டு.
மீதி தொடரத் தாவி மேலேறியது மரக்கிளை.

அறிக;
ஆதிக்கு முன்னாலும்,
முளைவித்தை அவியாமற் காக்கும் சேதியுண்டோர்,
காலனை விண்டோர்.
ஆக்கத்தின் ரகஸ்யம் அறிந்த நசிகேதனும், அரிப்பின்
அவதி தாங்காமற் சொல்லிப்போனானோ,
நம்மாள் கையில் சிருஷ்டியின் பாஷ்யம்?

வாதத்தை வானரத்து வாலாய் வளர்த்தித் தீவைத்தோர் வாழ்ந்தார்;
திண்ணை நெடுக்கத்தீ
அடுப்புமுகடு,கவட்டுமுடுக்கெல்லாம்
தடதடத்துப்போகுது பார் தண்டவாள ரயில்;
பிடித்த முயலுக்கு முறித்தகாலைப் புறமொளித்து,
முழுக்க மூன்றுகால் என்றடித்துத் திணித்த விவாதம்;
அவதாரபுருஷன் புரண்டுறங்கும் யுகங்கூட,
புறத்தே ஒருங்கிக் கண்மூடியடுங்காது
விழுது பெருத்துத்தூங்குது பார் "இராமபாணம்"

பள்ளி கொண்டபுரத்தைப் படைத்த அனந்தபுரத்துப்
பத்மநாபனைக் கணம் எண்ணிக்கொண்டேன்;
சத்தமின்றிப் பெற்றான்;
சலனமின்றிச் சஞ்சரித்தான்;
தக்கித்தான் தமிழில் தன்னிடம்.
-----

*நிலைமறுப்புக்கூற்று: இராமபாணம் என்பது ஓர் மத்தியகால
புண்ணியபாரதத்துக்கற்பனை ஆழாத்திருநகரியல்ல; திராவிடப்பாரி,
இடதுசாரி, வலதுசாரி, பாதசாரி, எறும்புச்சாரி, அனந்தச்சாரி, டம்பாச்சாரி, ஜி
ப்பாவாலா, ஆசாடபூதி எதுவோடும் எத்துணைச்சம்பந்தமும் சீர்வரிசையும் அற்றது. வரைவிலக்கணம்
வேண்டுமென்பது கட்டாயமானால், கிட்டத்தட்ட வாலியை ஒளிந்திருந்து தாக்கிய
இராமபாணம் என்றே கொள்ளலாம்.


# 'விஷ்ணுபுரம்' மீதான ஆண்டுக்கணக்கான ஜெயமோகனின் தாங்கமுடியாத அலட்டலுக்கு வழுவல்-நழுவல்-ஜார்கனின்றி அர்ப்பணி க்கப்பட்டது.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home