அலைஞனின் அலைகள்: கணம்

Saturday, December 25, 2004

அறிதல்

எந்த வைத்தியசாலைக்கு முன்னாற் காத்திருக்கையிலும்
என்னையும் உன்னையும் அறியமுடிகிறது.

தலைக்குமேல் ஒவ்வோரிடுக்கு மூலையிலும்
தலைவிமுகங் கண்டு தாளா வகமுரை
சங்கத்தோழி சரச்சொற்கோட்டில்
'சைக்கிக்' மங்கைமொழித் தொலைக்காட்சி;
வைத்தியத்துக்கும் மேலேயிருப்பவன்
வைத்தியநாதனன்றோ?
இங்கே வைத்தியத்தின் அடிநாதம்,
"In god we trust!"
..Doctors too trust this "note".

விபத்தைத் தெறிக்கும் சிவப்பு அவதியில்
குறுக்கே போகிறது குறுங் கோளக்கார்.
அதைத்த வெள்ளைச்சுற்றுக்குள் மெதுவாய்
முறிந்தகையன் மோவாயைத் தடவுவான்.

கிழட்டு மனிதன்- குழவிப்பேச்சு
கரட்டுத்தோல்- கண்களில் நீர்
மிரட்டும் மீசை- கரைந்த உள் முரசு
அதட்டும் குரல்- தடக்கும் நடை.....
முரணின் மோதல் இன்னொரு முரணில்
குறுக்கும் நெடுக்கும் கோடுகளிழுக்கும்.

தாய் பறித்த பைக்காய்ப் படுத்துருளும் குழந்தை
வலித்துதறும் குழந்தையிடம் பறித்தெடுத்த கைப்பை
பைகொடுத்த தாயிடம் பாய்ந்தேறும் குழந்தை.....
ஒரு சுழற்சியில் இயங்கும் சுற்றி என் உலகம்.

இதுவாய், -இலகுவில்,
-இந்தச் சின்ன நகர் வைத்தியசாலைக்கு முன்னாலும்
என்னையும் உன்னையும் எல்லாமாய்
எல்லோரிடமும் இனம் காணமுடிகிறது,
- புற்றுத்தடை விளம்பரத்தட்டி மறைப்பில்,
தெருக்காற்றுத் தடுத்துச் சுங்கான் பற்றும்
மருத்துவப்பேராசான் மனநிலை மட்டும் தவிர்த்து.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home