அலைஞனின் அலைகள்: கணம்

Saturday, December 25, 2004

மார்கழி_02- தலைப்பிலி 3

எல்லாத்தெருவும் எனதென்றும் தெரிகிறது;
இல்லையென்றும் போல.
காண்கின்ற இல் பலதில்
கரைந்துபோயிருக்கும் முகப்பு

போகிறவீடெல்லாம் முன்னைப்புக்கோரில்
ஒருவரேனும் என் நண்பர்.
இருந்தும், தரிக்கமுடியவில்லை.

போக்கிற் கல்லெடுத்து
போம் வழி காணக் கட்டியதும்
எனதென்று ஏனோ இன்னும் தோன்றவில்லை.

"அழையாவீட்டின் பூட்டை
முறிப்பதுமட்டும் அநாகரீகம்.
தாழ்ப்பாள் தூங்காத தாழ்வாரம்,
வீட்டுக்கணக்கா? வீதிப்பரப்பா?"
-அலைஞனோடு தொடர்கின்ற
ஆட்டுக்குட்டிகள்.

தட்டாமற்போன கதவும்
தட்டித் திறக்க, புகாத வாயிலும்
படி பட்டுத் திரும்பிய புலமும்
இத்தனையாய் விரிகின்ற வீடெல்லாம்
போனதென் வாதக்கால்.
தட்டவும் திறந்தாகாத் தேசத்தின் வாசனை
தெரிந்ததென் நாசி.
முள்ளுக்காணிக்குள்ளும் சக்கரம் சுற்றிய பாதம்.

அப்படியாய் அலைகின்ற கூத்தாடிக்கும்
பிடித்த தெருவென்றும் உண்டு;
அடிக்கடி தட்டும் வீடென்றும்
அவ்வப்போது அடையாளம் தெரிவதுண்டு.


வரித்த புலி அலைச்சல் மட்டும்
இரைக்காய்ப் பை குறாண்டும்.

13, டிசம்பர் 2002 வெள்ளி

0பின்னூடுகை:

Post a Comment

<< Home