அலைஞனின் அலைகள்: கணம்

Saturday, December 25, 2004

பேசும் பொருளைப் பேசாதிருத்தல்

'பேசும் பொருளைப் பேசாதிருத்தல்'
என்ற பொல்லாப்
பேசாப் பொருளைப் பேசவந்தேன்*.



நோக்காப்பொருளின்
நோய்நாடி நுணுக்கம் நாடி
நுகர்ந்து நுகர்ந்து கழியும்பொழுதில்
நோக்குபொருள்
நுணுக்கிக் குணுகி
நுதலழிந்துபோகுதுகாண்.

இல்லாப்பொருளை இயம்பின்
வாக்கு வல்லோம்;
வார்த்தை நல்லோம்;
எடுத்தபொருள்
இடைச் சிக்கித் தவிக்க,
தடக்கித் தடக்கிக்
தறியுது காலம்.

பூம்பாவை என்பெடுத்துத்
தோல் பூசுதல் ஆனது
பேசுறும் பேசறு பொருள்;
என்பில்லா வெளி அருவக்
கரு முளைக்க ஒருவர்
உடல் கொடுக்க இருவர்
உயிர்கொடுக்கப் பிறர்
என்று பூக்கும் பாவையர்
பூண்முலை, நாகயோனி
பெருப்பத்தின் பின்னால்
பேசவேண்டுபொருள்
பேசாப்பொருளாய்
பூட்டத்தொலைந்தது
நோக்கு.

தடமிட வந்த திசை மழிக்க, அழிந்து
தலை நோக்கு நிலை மாறு திக்குத் தடவி
நடக்கும் பாதம்;
இனிப்புக்குரியதுதான் இசைவாக்கமெனிலும்,
புதிய தடமெனல்,
அடைந்த முக்கில்
கிடந்து தங்கலும்,
கண ஆசுவாசத்துப் பின்னே
வந்த திக்கில்
தொங்கித் திரும்பலுமாகா.



'பேசும் பொருளைப் பேசாதிருத்தல்'
என்ற இலக்கழிந்த
பேசாப் பொருளைப் பொதுவிற் பேசினேன்;
இனியரு முறை,
எதுவாயினும் எம் இயக்கம்
துடித்துத் தடிப்புற
எடுத்துப் பேசேன் என் நா.



* //பேசாப் பொருளைப் பேசவந்தேன்// //நோய்நாடி//
- எல்லோரும் அறிந்ததுபோல எனது வரிகளல்ல

0பின்னூடுகை:

Post a Comment

<< Home