அலைஞனின் அலைகள்: கணம்

Saturday, December 25, 2004

அலைஞனின் வெள்ளாடு

பின்னால் வந்த பூச்சிப்பயணிகளும்
பெருத்துப் பொதிமூட்டைப்பூதமாகிப்
புள்ளி எல்லைக்கப்பால்
பொரிந்து போனபின்னாலும்,
தரித்தவன் முகத்தைப் பார்த்து
வெறிக்கிறது வெள்ளாடு.

முடிந்த பயணக்கணக்குகளைமட்டும்
இருந்திருக்கவேண்டிய ஆள்கூறு,
சென்றிருக்கவேண்டிய திசை
அடித்தடித்து மாற்றிச் செய்து
களைத்துப்போனவனைக் கண்விலக்காது
இன்னும் இலை சப்பிக்
கவனித்திருக்கிறது வெள்ளாடு.

போகும் சூத்திரங்களை
மிதித்த சேற்றிலெங்கோ
சிந்தித் தொலைத்து
கடக்கின்ற பயணிகளைக்
கண்டு எண்ணிக்கொள்பவனை
எதிர்பார்த்துக்காத்திருக்கிறது
இன்னும் இந்த வெள்ளாடு.

கலைந்தவன் மூளைக்கு
ஆட்டின் முகந்தான் ஆறுதலென்றாலும்,
புத்தி கெட்டு
வெள்ளாடுகள் மட்டுமேன்
அறுந்த பட்டங்களுடன்
அலைந்து கொண்டிருக்கிறன?

கணக்குப்போடுவோனைக்
கழற்றிக் கடந்துபோகாதது
இந்த வெள்ளாடு ஒன்றுதான்.


முடியாயாத்திரைக்குறிப்பும்
தேய்த்தழித்த கணக்குப்பாசியும்
வழுக்க மனம்,
ஆட்டின் தெருத்தடுப்புத் தேடும்.

03, ஒக்ரோபர், '02

0பின்னூடுகை:

Post a Comment

<< Home