அலைஞனின் அலைகள்: கணம்

Saturday, December 25, 2004

அடுத்தவள்மேற் காமம்

பொய்யில்லை மெய்யாய்த்தான்,
கண்டார் கண்டாரோவென்றும்
காணாதார் காண்பாரோவென்றும்
காணாது கண்மூடிப் பூனையாய்,
போனவிடமெல்லாம் சட்டை சரியாய்ப்
பிரிக்கா மெத்தென்ற புத்தாளோடும்
கட்டிப்புரண்டேன்; பின், புரியமுன்னும்
அறியாதான்போற் பிரிந்தேன் வழி.

இவள்முன்னே அவளைப் புணர்ந்தேன்;
அவளறிய இவளைக் கை கவர்ந்தேன்;
எனக்கென்றாவளை இவள் எனாமல்,
இவர்கள் என்று இரட்டைப்பட
எதிர்ப்பட்டோருக்கெல்லாம்
சொல்லித் திரிந்தேன்;
அவளை அந்த வீட்டிலும்
இவளை இந்த வீட்டிலும்
இரு பேசாதென் றமர்த்திவிட்டு
இன்னொருத்தியோடு எல்லாத்திக்கும்
என்போக்குத்தெருவெங்கும்
இதழ் வருடி இமை தழுவி
எந்நேரமும் நான் அலைந்தேன்.

இவளையும் அவளையும்
இங்கில்லாப்பொழுது
எவனாவது தொட்டானா
என்றறியவும் என்னாட்களை
அவளுக்கு அங்கு, இவளுக்கு இங்கு
என்று பின்னிருத்தி,
தொட்டான் தொடாதான்
உற்ற தொடுப்புகளையும்
ஒருதரம் தொட்டுப்பார்ப்போம்
என்றுளைந்து முயன்றேன்.

எட்டிப்பார்த்தபோதெல்லாம்,
எனதில்லாள் எவளானாலும்
எனதில்லாள் மேலானாளாய்த்
தெரியத் தெரியத் தொட்டுத்
தழுவென்றது உளம்; தட்டிப்
பாரென்றது விரல்.

கலைந்தது கருத்து; புலையானது போக்கு;
கண்ணுக்கும் கைக்கும் கட்டுப்படாததாம்
அடுத்தவனுடனுள்ளாள் மேலான முதற்காமம்.
ஆழ முழுகித் தழுவிப் படித்து முடித்தவள்
உடன் உள்ளாளும் அவள் முன்னாளும் னாலும்,
முடிக்க முடியாதாளானாலும் சில பக்கம்
விரிக்கக்கிடைக்காளோ என ஆனாள்,
கண்ட, கடை விரிந்த சிமிட்டக்
கண்ணுள்ள சிங்காரி ஒவ்வொருத்தியும்.

அறக்கற்புக் கெட்டுச் சரிந்தாலும்,
சாதி களைசொட்டிப் பிரிக்காது
கண்கண்ட கடைக்கண்ணிக்
கணணிகளை,
விரல் தொட்டுத்தழுவாமல்
தறிதட்டிச் சொருகாமல்
ஓரெழுத் தேறிக் கட்டிப்புரளாமல்
விட்டுப்போகவிடாதாம்
கழுதை வயசிலும்
விடலை மனசு.
;-))


13, மே '02, திங்கள் 21:09 மநிநே.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home