அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

அப்பு, ஷ¤வாஸனேகர், சப்ளின், நான்

ஆள் அரசு வேட்டைக்கு
வில்லெடுக்காவிட்டாலும்
அப்பு துரோணாச்சாரியார்,
நான் அர்ச்சுனன்.
பத்து வயது பேதமுள்ளும்
நட்பு வரும்,
ஒரு குருபக்தி வந்தால்.

நடைமுறைக்குப்
பல வித்தை சொல்லிக்
கொடுத்தவன் அவன்தான்.
தட்சணைக்கு,
எப்போதாவது
சீனி போடாத் தேநீர்,
மாலைக்குளிர் காற்று,
மங்கிய நிலவுக்கீற்று,
எப்போதும்
தப்பாமல் அடியற்று
முட்டாள் குருபக்தி.
அத்தனைதான்.

தெருவில் ஒரு அதிகாலைக்
காலிக் குண்டு பட்டுச் செத்துபோகமுன்னர்
ஓர் ஆண்டுக்கணக்கு பத்துக்கு
தெருக்கூத்துவித்தை முதல் திரைப்படம்வரை
அப்பு கற்றுத் தந்த நயத்தற்கலை கரையில.

அப்புவுக்கு,
அகன்ற நெஞ்சு ஆர்னோல்ட் ஷ¤வாஸனேகர் பிடிக்கும்;
காரணம் கேட்டால்,
"பொய்யில்லா நிஜநெஞ்சு புடைத்திருக்க
முன் நிற்கும் புரட்டனுக்கு
முகத்தில், மூக்கில் மூர்க்கமாய்க் குத்தல் இயல்பு" என்பான்.
ஆதனால்,
எனக்கும் ஷ¤வாஸனேகர் அஞ்சா ஆண்மைத்தனம் பிடிக்கும்.

அப்புவுக்கு,
நோஞ்சான் பரதேசி சார்லி சப்ளின் பிடிக்கும்;
காரணம் கேட்டால்,
"குறைப்பட்ட கோமாளித்தனத்துள்ளே, நாடு
நேர்ப்படுத்தி நிறைப்படுத்தும் நேர்மை
வெறி நளினமாய் நர்த்தனமாடி நிற்குது பார்" என்பான்.
ஆதனால்,
எனக்கும் சப்ளின் கெக்கலிக்கும் கோமாளித்தனம் பிடிக்கும்.

இப்படியாய்,
தெருவில் ஒரு அதிகாலைக்
காலிக் குண்டு பட்டுச் செத்துபோகமுன்னர்
ஒரு ஆண்டுக்கணக்கு பத்துக்கு
தெருவித்தை முதல் திரைப்படம்வரை
அப்பு கற்றுத்தந்தது கரையில.

இப்போது,
அற்றுப்போன அப்புவோடு
இல்லாத நேரம் எல்லாம்,
இரண்டு திரைப்பிம்பத்தே
வாழ்க்கை வழிப்படுத்த
எதைத் தேர்ந்திருக்க என்ற கேள்வி
எனைத் துரத்திப் பிடிக்கும்.

நேற்று வீரன், இன்று விகடன்
என்று குழம்ப,
நாளைக்கு
வீரியம் நீர்த்துப்போன விந்தாய்,
பிறர் மனப்படிவில்
என் செயல் முகம்.

'98 ஆனி 23, செவ்வாய் 08:04 CST

0பின்னூடுகை:

Post a Comment

<< Home