அலைஞனின் அலைகள்: கணம்

Saturday, December 25, 2004

இடைக்கால அமைதி

"வெடிக்குமா? வெடிக்காதா?"
என்ற வேடிக்கை-விசர் மேவி
சொக்கப்பானைப்பூமியில்
திரி கொளுத்திப்போட்ட
சீனவெடிக்குமுன்னால்
கோணிக் குந்தியிருக்கிறது
என் சனம்.


எப்போதும்போலத்தான்,
எதையும் திடமாய்
எண்ண, சொல்ல, எழுத
ஆகாத
இப்போதும்.


கறுத்த இரவு தட்ட, நெடுநாள்முன்
துவக்குவெடிக்குட் தொலைந்த
கடல்நிலவைத் தேடிப்போனால்
உப்பு மணல் கரைந்து
குப்பென்று நுகர்நாசி
கிட்டும் குளிர்காற்றை
தேவாசுரர் கடைந்து மீந்த
கடைசி அமுதச்சொட்டென்றென்று
உனக்கேனும் உரத்துச் சொல்லி
உறுஞ்சி உட்பை தக்கவைத்து
இளக்கி மெல்லவிடு மேலே;
மூச்சுவெப்பு கிள்ளிக் கரையட்டும்
வெண்கடற்புகார்; உன் உள்ளத்தணல்.

இங்கே சொல்வது மறக்காமல்,
சவட்டைக்கால் கிறுக்குப்பிடித்து
குறுக்காலே பாதை நறுக்கிப்போகும்
சிறுத்த கோணல் நண்டுகளை
செல்நாட்கள் நினைவிருத்தி
நான் அழுத்திக்கேட்டதாயும்
எடுத்துச் சொல் நன்றாய்.
தேசத்துப்பேட்டுக்குருவிகள் பாட்டை
உள்ளுக்குள் இன்னும் நான்
அசைமீட்டிக் கேட்டுக்கொண்டிருப்பதாயும்
ஊட்டிச்சொல் என் உணர்வை.

செல்; விரை; ஓடு...
பிய்யமுன் முழு
நிலவை மோந்து
முகில் நிழலில்
மணல் தூங்கு;
கிடைத்த வெளியில்
அகட்டிக் கைபரப்பு; கால்பரப்பு.
பாதம் புதை; பத்துவிரல் கழுவு;
அலை தழுவ, அடி பதி;
ஓலக்காற்றில், ஓலைக்கீற்றசைவில்
உனக்கோ எனக்கோ
பித்தாய் ஒட்டிப் பிடித்த
ஓர் எட்டு வரி கவிதையை
குரல் பெருக்கிச் சொல்,
கோணமலைப்பித்தனுக்கு;
கேட்டவர் சிரித்தால்,
நாக்குக் கடியாதே;
இன்னும் கேளென்று
முழக்கிச் சொல்
மேலொன்று,
கடல்மேல்,
மணல்மேல்,
காற்றின்மேல்.
இதுவரை எவர் சிரித்தார்?
இனி வரவும் எமக்கெதுவோ?
கலகலத்துச் சிரிக்கச் சொல்,
கத்துங்கடலுக்கும் ஒரு பிடிகவி.
விதைவிதையாய்ப் புதைமணலுள்
சோகி சிப்பி சப்திக்க விசிறி எறி,
இத்தனை நாள் புத்தகப்பொறிக்குள்
அச்சப்பட்டுப் பொத்தி வைத்த
எம் துக்கக்கவித்தொடர்,
கலித்தொகையெல்லாமே.

மேல் காற்றுத் தடவ,
கசியக் கடல் படிக்க,
நற்சுருதிப்பாட்டொன்றை
ஆழப் பொத்திப் புதை
நம் நாட்டு மணலுள்;
நாளைக்கோ,
இன்னொரு வேளைக்கோ,
வரும் எம் வீட்டுச்சிறு
துள்ளல் ஆட்டுக்குட்டிகள்
தாவிப் பறித்துத்தின்ன
தழை இலை முளைக்கும்
பாடல் மரமாகட்டும்
வருங்காலத் தல விருட்சம்.


இப்போது போலத்தான்,
எதையும் திடமாய்
எழுத, சொல்ல, எண்ண
ஆகாத
எப்போதும்
எமக்கென்றேயானது.

யார் கண்டார்?
முன்னைப்போலவே,
பின்னைப்பிள்ளைக்கறியுங்கூட
ஒல்லப் பசியாறட்டுமென்றான
குமிழ்மைம்மற்பொழுதுமாகலாம்
இது.


அதுவரைக்கும் கிடைபொழுதில்,
அகல் தேசத் திக்கேதென்றாலும்,
நகர்நிழலின் வாசம் தக்கித்துயிலும்
அக்கடலின் நீரை இறைத்தெடு
என்னை உன் கைகளில் அள்ளி.
எடுத்துச்செல் கையோடு எம் வீடு....
....செல் வழியில்,
எங்கே காட்டு எனக்கென் இழந்த ஊரை

05, Mar. '02 Tue. 04:38 CST

0பின்னூடுகை:

Post a Comment

<< Home