அலைஞனின் அலைகள்: கணம்

Saturday, December 25, 2004

எதேச்சைக்குறிப்பு

வெயிற்காலத்தின் வெள்ளை வண்ணாத்துப்பூச்சிபோல
இலைகளின் தாழ்வாரங்களிலே தலைக்கீழாய்
ஒளிந்து கொள்கிறேன், வௌவாலாய்த் தூங்குறேன்.

உண்ணாவிரதம் நினைவுக்குவர,
இரவின் பூச்சிகளை மின்னத் தின்னுகிறேன்.
தின்னல் தோற்றாலும் விரதம் காக்க
விழுங்குகிறேன் சாரைகளை.

தெரிந்தும் தெரியாததுமாய் வீதி தோன்றின பெண்களைத்
தொடர்கிறேன்; தாண்டித் தீண்டுகிறேன்; தூங்க அழைக்கிறேன்.
போட்டி நீளும் வரிசையிலே போதுமென வேண்டியவளைத் தேருகிறேன்.

யுத்தம் மிதக்கும் தேசமொன்றை முக்கிமுக்கித் தேடுகிறேன்;
அகப்பட்ட பிரேத ஆழ்வெட்டுப்புண்களில் கவிக் குறிப்பெடுக்கிறேன்;
பசித்த பூமியன்றைப் பாறாங்கற்பல்லால் முறிக்கக் கொத்தி
முளைத்த பிட்சாபாத்திரத்தை மொட்டிற் பறித்து விற்கிறேன்,
அடுத்த கொழுத்த பூமியின் இருட்டு லாயக்குதிரைக்கொள்ளுச்சலம் தாங்க.

துப்பாக்கிக்குள் மையூற்றி துவந்தயுத்தக்காரர் கைக்குட் திணிக்கிறேன்.
அறியாதாரை வன்பொருத வீதிக்கு அழைக்கிறேன்;
இறந்தவரை இன்றைக்கே இன்னாரெனத் தெரிந்து கொள்கிறேன்.

தெரிந்த தெருக்களுள்ளே தெரியாதார் வீடுகள் முளைக்கிறன
உணர்ந்த வீடுகள் வேறொரு வீதிக்கு விந்திக்கொண்டு நடக்கிறன
அறிந்தவர்கள் வெறும்முகத்தைக் கறுப்பு வெள்ளையால்
கோடு பிரித்துக்கொண்டு பேசாமற் போகிறார்கள்;
ஊரைக்கடக்கும் ஓரிரண்டு புதியவர்கள்,
கூடத் தடம் நடக்க குரல் கொடுக்கின்றார்கள்

கோடைகாலத்து அலைச்சற் தெருநாயன்றாய்
நேரக்கடிகாரம் நோக்க நேரமின்றி
முடிச்சோடு புதிரைப் பொத்தெனப் போட்டு
என் முன்னாலே எட்டிப் போகிற நான்.

விரும்பியதையும் விரும்பாததையும்
அலைந்தலைந்து செய்யச்செய்ய
- கனம் பெருத்து கணமொன்றில்
விடிந் துடைந்து வடிந்து போகிறது
வெள்ளக்கனவு.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home