அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, December 12, 2004

அவள் எனப்படும் உனக்கு...

வெகுகாலமாய்
உன் வெட்டிய பிறை நகங்களைச்
சேர்த்துக் சோர்ந்துவிட்டேன்.
இனி வெண்டி விரல்களோடு மட்டும்
பேசிக் கொண்டிருக்க ஆவல்.
இதற்காய்,
விரல்களை வெட்டி அனுப்பமாட்டாய்
என்று தெரியும்.
விருப்பமானால் நீ,
விரைந்து வரலாம் என்று
நேர்மையாய் நம்புகிறேன்
நான்.

மல்லிகை மொக்குகளோடு வந்து
உள்ள முற்றுப் புள்ளிகள் எண்ணிக்கை
மனப்பாடமான உன்
மூன்றாண்டுக் கடிதங்களில்
நேற்றைக்குச் சில
தமிழ் எழுத்துப்பிழைகளை
ஆங்காங்கு
கண்டுபிடித்திருக்கிறேன்
என்று எழுதுவதற்காய்க்
கவலைப்படாதே;
நாம் சேர்ந்திருக்கும் காலத்தின்
பெருமையை உணர்வதற்காய்ப்
பிரிந்திருந்த காலமும்கூட
கொஞ்சம் சலிப்புத்தட்டுமளவுக்குப்
விரிந்து பெரிதாகிப் போய்விட்டதென எண்ணுகிறேன்;
வேறொன்றும் பெரிதான விபரீத விஷயமில்லையாக்கும்.

ஒரு மூன்று நாட்களாக
அறைமூலை மேசையில் இருந்த
உன் புகைப்படத்தை எடுத்துப்
பெட்டிக்குள் மூடி வைத்துவிட்டேன்.
பயப்படுவதற்கு ஒன்றுமில்லை;
என்ன இருந்தாலும்
ஓர் ஏழாண்டு காலம் முன்னெடுத்த
உன் படமல்லவா?
இன்னமும் ஓர் இல்லாத இளமையான
உனக்குப் பழக்கப்பட்டுக்கொண்டிருக்க
எனக்குப் பயமாகவிருக்கிறது;
முகத்தோல் சுருங்காப் நிழற்படத்தைக் காதலிப்பது
நடைமுறை நிஜ வாழ்க்கைக்கு நல்லதல்லவெனப்
படுகிறது மனதுக்கு.
உன்னால் முடிந்தால்
எனது நான்காண்டுக்கு
முந்திய முன்முடி நரைக்காத
முகப்படத்தையும் எங்கேனும்
தூசு படியாமல்
உறையிட்டு
உள்ளே போட்டுவை.
இயலாவிடின்,
முகத்தின் மேலே
சில வெண்கட்டித்தூளேனும்
தூவிவைத்துத் தினம்
உன் முகம் பாரதில்.

இத்தனைக்கும் மேலே
இப்போது என் கனவுகள் எப்படி வருகிறன
என்று நீ கேட்டால்,
நீயோ நானோ
ஒருவர் மற்றவரிடம்
உடனே வருவது நல்லதென
எனக்குப் படுகிறது
என்பதை மட்டுமே
இப்பொழுதுக்கு
என்னால் நிச்சயத்துக்குச்
சொல்லமுடியும்.

- '98 ஆனி 23, செவ்வாய் 07:13 CST

0பின்னூடுகை:

Post a Comment

<< Home