அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

தமிழ் இலக்கியவாதிகளும் என் ஓர் ஆனி சனி மாலையும்

" முற்பகல் 11:00 கார் வருகிறது - திரும்புகையில்
பிற்பகல் 01:30 நீ வருகிறாய் - பின்
மாலை 5:30 இலக்கியக்கூட்டம்" - என்று
"தாத்தா தவறிவிட்டார்;
இரயிலேறி இங்கு நில்லு" என்பதுவாய்
கட்டெறுப்பு சுள்ளென்று
கடித்ததுபோல்,
போனதொரு சனி காலை
ஒரு கணினிக்கடிதம்,.

நல்லை நல்ல பையன்தான்;
இல்லையெனேன்; ஆனால்,
உள்ள(த்)து இலக்கியப்பித்து.
ஊரிலே ஒவ்வொரு முழுநிலவுக்கும்
உள்ள ஓட்டைக்கூரைச் சிறுவர் பள்ளியன்றின்
காக எச்ச மேசைக்கருத்தரங்கு
'சங்கப்பலகை' என்ற
சங்கீத, சங்கத்தமிழ்நாமத்திலே
"சமுதாயச்சீர்திருத்தத்திற்கு
பங்கிடு பொதுவுடமையா,
இல்லை முதலாளி முழுவுடமையா/"
என்பதுபோல் மக்கள் மோகிக்கா
முழு மோசமான மூடத்தலைப்பிலெல்லெல்லாம்
ஏழெட்டுப்பேர் குந்தி இல்லாத இழவெல்லாம்
ஊசிப்போன வடையோடும் வாடையோடும்
பேசிக்கிடைக்கையிலே, ஊர்சுற்றும்
பொலிஸ் அவருடலைத் தம்முடையாக்கி
உள்ளே வாட்டி வரி போட்டபோதும்,
வெளிற்றுத்தூளிட்டுச் சலவை செய்தும்
வெள்ளை எட்டுமுழ வேட்டிமேலே
போகாத பாணிப்பினாட்டுக் கறைகணக்காய்
கனக்கவே மனதில்
இளித்துக்கிடந்தது இலக்கிய ஆர்வம்.
சின்னதாய் இப்போது,
கல்லறைதூங்கு அவன் அப்பா, "ஒடியல், பனங்கிழங்கு
சில்லறை வியாபாரம்" சீவரத்தினத்தார்போல, என் மன
உள்ளறையுள்ளும் ஒரு குறை:
"ஊர்ப்பள்ளி சங்கப்பலகை மேசையெல்லாம்
வெள்ளரசுக்கிளை கொண்டு செய்திருந்தால், ஏதோ ஒரு
வைகாசிப்பௌர்ணமிக்காவது பொல்லென்று அவன்
இளைய முழுமொட்டைத் தலைமீது
பொழிந்திருக்கும் ஞான ஒளிமழை; இல்லையென்றாலும் கூட,
ஓரிரு சில்லறைத் துளித் தெளிப்பாவது சிந்தியிருக்கலாம்.
என்ன செய்ய? பள்ளிக்கூட மேசையெல்லாம், அரசுச்
சொந்தத் தச்சுவேலைக்கூடத்திலே, ஒட்டுப்பலகையாற்
சட்டுப்புட்டென்று வெகுவிரைவில் ஒட்டு
விட்டுவிடவென்றே திட்டமிட்டுச் செய்ததாலே
சாதிச்சுத்தம் விட்டுப்போச்சு மரமேசையெல்லாம்.'
சரி விட்டு வைப்போம் அக்கதையை
வேறொரு வேளை கிட்டும் வேலைக்கு.

//நாட்டில் நடமாடும் மக்களுடல், இஷ்டப்பட்டவரெல்லாம்,
வேட்டை பண்ணி, கரியடுப்பு அடுப்பு ரொட்டிபோல சுட்டுவைக்க,
சங்கப்பலகையை ஊர்ச்சந்திச் சந்தையிலே ஊன் வெட்டத் தொங்கவிட்டு,
இனி வேண்டாம், இந்தப்பங்கமென்று தன் முதற்
சங்கம் மூடிக்கட்டி, திரை கடலோடித் திரவியம் தேடவர
இங்கொரு சிறு இடைச்
சங்கம் தோன்றியது என் நண்பன் நல்லைக்கு.//

கார் வந்தது 12:00 மதியம்.
திரும்பியது 3:30 மாலை.
சங்கத்தின் ஒவ்வொரு முக்கிய அங்கமும் தன் அங்கமெல்லாம்
பொங்கு சதையுடனும் தங்கப்பொலிவுடனும்
வந்து முடிய மணி 8:00 இரவு.
இலக்கியக்கூட்டம் இலங்கை இந்திய நேரப்படிக்கோ இல்லை,
இங்கே உள்ள இடைமேற்கு நேரப்படிக்கோ என்று கேட்காமல் விட்டதற்கு
என்னை இடைவிடாது எத்தனையோ திட்டிக்கொண்டேன்.

"ஏனப்பா, இதற்கு சிறு இடைச்சங்கமென்று பேரிட்டாய்?
இந்த இடைச் சங்க, முதற் சங்கப்பிளாஸ்ரிக் பலகைக்கு வந்த
எந்த ஓர் அம்மணிக்கும் சிறு இடைக்கும் எட்டாத பூமி
விட்டப்பொருத்தம்
என்றெனக்குப் பட்டிருக்குது" என்றேன் பட்டென்று மனதிற் சுட்டதை
வெளிவிட்டு.
நல்லை கொல்லத்துணிபவன் போல் கோர வேட்டைப்பல்லைக்
கடித்தான்,ஞானப்பல்
இல்லாத தனி நாய்ப்பல்மனிதன் போல;
மேல்வீட்டு வெள்ளை அல்ஷேசனும் பாற்கடல் ஆதிஷேசனும்,
விவித்பாரதி விளம்பரசேவை இடை
வந்த நேயர் விருப்பமாய் ஒரு நிமிடம் தலைதூக்கித்
துள்ளிப்போயின.
வாலி வாலை உட் சுருட்டி. "இல்லை இல்லை, நல்லை;
என் உள்ளக்கமலம் உத்தமனார் வேண்டு
குயில் நீலம் தரும் கொள்ளை வெள்ளை.
சிறு இடைச்சங்கம் என்ற பெயரும் நன்றாகவே இருக்கும்; நீயிட்டால்,
மசாலா வடைச்சங்கம் என்ற பெயர் கூட வாகாய்த்தான் பொருந்தும்"
என்று
மெல்லிய குரல் உரைத்து மேலே நட்ட கல்லாய், இனி
என் சித்தமெல்லாம் மூலைச் சுவரென்று நான் இருந்தேன்.

இடது பாதம்தூக்கு தில்லைப்பெருமான்கூட திகைத்து
சிதம்பரக்கோவிற் கொல்லையிலே ஒளியும் வண்ணம்
இரு பாதமும் நிலம் பாவாது துள்ளிப் பறந்து
நடமிட்டுச் செயல் நடத்தியிருந்தான் நம் நண்பன்;
விழிப்புருவம் வழித்து, பின் அ·து இருந்தவிடம் இருட்டு
வர்ணக்கற்றைச்செயல் வளைத்து வந்த வனிதாமணியிடம்
முன்னம் அவர் நாமம் கேட்டான், பின்
மூர்த்தி தான் நடத்தும் செயல் வண்ணம் சொன்னான்.
பின்னொரு முறை கன்னியுடன் பேசுவதாய்த் (பிதற்றுவதாய்த்?) திண்ணமாய்
உரைத்து,
முன் நகர்ந்து, இன்னொரு
தன்னந் தனிக் கனவானிடம் "இன்னமும் வேணுமோ
பொன்னிறத் தண்ணீர் அவர் கலை வண்ணம் வானவில்லாய்
சிந்தனை விசும்பெங்கும் சிறகடித்து ஓங்கி விரிதலுக்கு?"
என்றொரு சின்னக்(!) கேள்வி அம்பு.
பானப் பரவசமிருந்தவர் பதில் பிரவசமாகுமுன்,
இடையிற் பஞ்சுக்கதிரை ஒன்றுக்குள்
தலை ஒளிந்திருக்க பெரும்
நிகொட்டின் புகை விட்டுப் பிறந்தது, அசரீரி ஒன்று,
"வேலையால் வெந்தபோதும் நான்
தமிழ் வேட்கையால் இங்கு வந்தேன்.
ஆகையால் நீரெனக்கு
என்ன தலைப்பில் எவர் என்ன பேசுவார்
என்றுரைத்துத்தானாக வேண்டுமென்று."

" 'தமிழ்த்தலித் இலக்கியவாதிகளின்
புலம்பெயர்தற் சிந்தனைகளும் போக்குகளும்'
என்று ஒரு சீர்த்தூக்கி அலசு இலக்கியக்கட்டுரை
தர நண்பர், ரொரண்டோ எஸ். லெனின்; "
என்றொரு நல்(¨)ல பதில் பிறக்க,
என்னருகே
இத்தனை இரு மணிநேரத்துக்கு
கம்யூவும் கப்ரியல் கார்ஸியாவும்
என்று அந்நியமாய்ப் பேசிக்கிடந்த
பக்கத்துக் கதிரைத்தமிழர்
பச்சைத்தமிழ் இரத்தம்
செக்கசிவந்து சூடேறி,
முதல்முறையாய்த் தமிழுதிர்த்து,
"நாசமாய்ப்போச்சு" என்றார்.
நாயினேன் எனக்கு என்ன பிரச்சனை என்று
உறைக்கவில்லை; அறிவுவிழி திறக்கவில்லை.
கதிரைக்கனவான் கத்தாதகுறை;
கத்தி எடுத்து என்னை வெட்டாத நிலையில் கேட்டார்,
"தலித் இலக்கியத்தில் லெனின் கருத்துரைக்கலாமோ?"
எனக்கென்றால் கக்கத்திற் கூட மிகு வெட்கமாய்ப் போச்சு;
தமிழ்ச்சினிமாக் கன்னியின் தொடை
திரை கண்ட குடும்பப் பெண்ணெனக் குனிந்து கொண்டேன்;
வேறு கதிரை இடம்பெயரவும் முடியாமல்,
கழுத்தை இறுக்கமாய்ப் பிடித்துக் கொண்டார்,
புலம்பெயர்ந்த கனவான் கண்ணீர் கதறிப்
பெருகு பெரும் புலம்பல் புரையேற;
"நல்லது; நீயே சொல்க நண்ப,
தலித்துக்கு வக்காலத்து வாங்க
லெனினுக்கு தகுதி என்ன?
தோட்டி என்று இவன் அப்பன் காட்டம் பண்ணியகாலம்
இன்னமும் மழை மூட்டமாய் கவிழ்ந்திருக்கு என் மனதில்.-அந்த
ஆட்டம் முடிந்ததனால், இவன் புதிதாய்ப் போட்டுப்
பேசவந்தான், தலித்துக்கு பக்கத்தவில் தானென்று சொல்வதுபோல்."
குரல் தவித்துபோனேன்; உடல் தகித்துப்போனேன்;
ஒட்டக்கூத்தருக்கும் ஔவைக்கும் இடையே
இப்படி தமிழ் உணர்ச்சிச் சுத்தத்தில் சித்தம் கலைந்து,
எத்தனை ஒல்லிப் பொடிப் புலவர்கள் உதைபட்டு செத்தாரோ
என்று உள்ளத்தே ஓலமிட்டு சிறு ஒப்பாரி வைத்தேன்;
ஒன்றும் புரியவில்லை.
புத்தர் பூவைக் காட்ட, இங்கே
ஆனந்தன் அவர் முகத்தைப் பார்த்தான்.

இதற்கிடையில் நான் தப்பவென்றே
யாரோ எக்கச்சக்கமாய்க் கைதட்டினார்கள்;
நான் கனவான் கையைப் கள்ளக்கண்ணாற் பார்த்தேன்;
இரு சுட்டுவிரல்நகம்கூட கிட்டவும் ஒட்டவிடேன் என்றொரு திட்டம்
போலும்;
நான் மறந்தும் மரத்துப்போனாலும் கையிரண்டும்
காரேறும் வரைக்கும் பொய்யாய் காதலிக்கவும் விடேனென்று சொல்லி
காற்சட்டைப்பையுள் கமுக்கமாய் வைத்துக்கொள்ள,
தலித்துகளின் தனிப்பெரும் காவலர் தூக்கிப்போட்டார்
கண்ணிரண்டில் துளிர்த்துப்போன
இரண்டு நன்றி எலும்புத்துண்டு.

பின்னாடி சிந்தனை வானவில்லுக்கு,
கண்ணாடிப்பான வர்ணம் சேர்த்த தனிமைத் தவிலார்
தன் தமிழிற் பேசினார்;
"தமிழ்ச்சமூகத்திற் தலித்துக்கள்.."
யாரோ இடைமறித்து ஏதோ வெட்டிச் சொன்னார்; பிறகு
அதைத் தடுத்து ஒத்துச் சொன்னார் இன்னொரு யாரோ;
பின்னாடி,
முன்னாடி பேசியவரின் மூதாதை
"தலித்தின் மூக்கில் கயிறோ
வாயில் கடிவாளமோ போட்டு
தார் ரோட்டிலும் இழுத்ததாக"
கதிரைக்கனவான் கடிந்து வெடித்தார்.
அவரைச்
சொந்த இனத்தைச் சுரண்டும் வெட்டிப்பேசு
வெண்டைக்காய்ப்பயல்" என்றார்,
கதிரைக்குள் ஒளித்திருந்த சிறு சுண்டக்காய்த்தலையர்.

இமை சிரைத்து மை சமைத்த மங்கை எட்டிக்கேட்டாள்,
"இவர்களில் எவர் லெனின்?" என்று.
சுற்றிப்பார்த்தேன்; கத்தும் ஒரு முட்டாற்பயல் மூஞ்சியிற்கூட
கரப்பான் பூச்சிக்கால் கருமீசை பொட்டுக்கறையுமில்லை.
"லெனின் இனித்தான் வருவார் போலும்" என்ற பின்னே,
"என் தங்கையின் சிரிப்பும் அவளது போலவே அச்சு" என்பதையும்
வெகுமதி இனாமாய்க் கொடுத்தேன்.
"அதுவும் அந்த இட மேலுதட்டில் முட்டுப்படு அழகுச்சிறு தெற்றுபல்லுக்கூட
ஒட்டிப்பிறகும் இரட்டையர்க்கு ஒன்றாய்க் கிடப்பதுபோல" என்பதும்
என் சொல்லில் ஏனோ விட்டுவிடாமல் ஒட்டிக்கொண்டது.
மிச்ச நேரம் எமக்குள் சர்ச்சையின்றி சங்கீதம் கேட்டது. பிறகு
மணி
பன்னிரண்டு சொச்சத்துக்கு நல்லை வந்து
" 'தமிழ் இலக்கியவாதிகளின்
புலம்பெயர்தற் சிந்தனைகளும் போக்குகளும்'
எப்படி?" என்று கேட்டான்.
மங்கையின் முகவரி மறக்காமற் கேட்கவேண்டும் என்பது
சிந்தையின் போக்கிருக்க,
"தெளிந்த சிந்தனை, சிறப்பான போக்கு" என்றேன்.
நல்லை சொன்னான்,
"இன்றைக்கு இவர் வாசித்த ஆழக்கட்டுரையும்
தொடர்ந்து வந்த துல்லிய கருத்துப்பரிமாறலெல்லாம்
-சொல்கிறேன், இருந்து பார்-
பின்னொரு காலத்தே பேசப்படும் தமிழெழுத்தின்
தொலை காட்டும் மைல் கல்லென்றே.
தமிழ் இலக்கியம் தலை நிமிர, இனி மையம்
இடம்பெயர்ந்த தமிழ்க்குழுமத்தே"
"நல்லது"
என்று சொன்ன நான் எண்ணிக்கொண்டேன்,
மறக்காமல் எழுதவேண்டும் வீட்டுக்கு,
"ஒரு தங்கை பெற்றெடுக்கவோ
இல்லை குறைந்தது தத்தெடுக்கவோ
என்னைப் பெற்றவர் ஏதாச்சும்
அவசரமாய் இந்த வருசத்துட்
பண்ணி ஆகத்தான் வேண்டுமென்று
ஆகிப்போச்சுது இன்றிரவு
அமெரிக்கத்தமிழ்விழா
ஒன்றிலென்ன்று."

-98 ஆனி 26 வெள்ளி 09:31 CST

0பின்னூடுகை:

Post a Comment

<< Home