அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

தொலைந்து போனவை

ஒற்றைத் துயர்
மட்டும்
உள்ளே,
செத்துப் போயினவே
கவிக்கருத்துயர்களென்று

தனிமைத்துயர் தோய்ந்த,
இறந்த
இனிமைக் காலத்துக்காய்
ஏக்கம் கொக்கியிட்டுத்
தூக்குண்டு
நான்.

தொலைந்து போயின
துயர்களுடன்,
என் உணர்வுகளும்
அவை உருக்கி எழுதிய
ஓவியங்களும்
கவிதைகளும்.

நேற்றைக் கவிதைகளின்
நேர்த்திகொள் உலைக்களங்கள்,
சிறுகல்லும்
எறிபட்டுக் கலங்கா
நித்திரைக் குளங்கள்,
இன்று.

சலனம் செத்த
மனதின் கண்கட்கு,
முன்னெறி பட்டுப் பரவியெறி
மோனத்தே வெறித்திருக்க
மட்டுமே
முழுமோகம்.

ஓர் இற்றைப் புத்தனின்
சத்தமற்ற சகப்பிறப்பில்
எழுத்தாணி தூக்க
ஏனோ
இயக்கமற்று,
சுத்தமாய்
சுருங்கிச் சுருண்டு
செத்தான்,
அற்றைச் சிறு கவிஞன்
ஒருவன்.


'99 ஏப்ரல் 18, ஞாயிறு 13:47 மநிநே

0பின்னூடுகை:

Post a Comment

<< Home