அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

தூக்கங்கள்

முன்னைக்காலத்தில்,
என் தூக்கங்கள்
இறுக்கமானவை,
சிலரது துக்கங்கள்போலவே.

கனவுகள் அங்கே
உருகிக்கொட்டா.
எனக்கு வெறும் இருட்டும்
பிறர்க்கு வெறுப்பு குறட்டையுமே.

எப்போதாவது
புணர்ந்தபின்,
புழுக்கை பொத்தென்று போட்டபின்,
பசித்த ஒற்றைப் பழுப்பு எலி மட்டும்
வால்நுனி சொடுக்கித் தட்டி
எனை எழுப்பி ஓடும்
என் நாட்டில் தூங்குகையில்,
-வான் குண்டுகள்,
கட்டியம் ஏற்கனவே சொல்லியிருக்காவிடின்.

ஆனாலும்,
குண்டுகள் மத்தியிலும்
தூங்கியிருந்திருக்கின்றேன்;
சொல்லப்போனால்,
குண்டுச்சத்தம் கேட்காமற்
தூக்கம் வராது கெட்ட சில
பிற்காலநாட்களும் உள.


இங்கேயோ,
எனது தூக்கங்கள்,
இளகியவை,
-மழை பட்டுக் கசிந்த ரொட்டித்துண்டுபோல,
மார்பு தொட்டுத்தூங்கும் மனையாளின்
நகவளைவு நெற்றியிலிடும் குளிர்முத்தம்போல....

மீமெய்யுந்தற்கனவுகள்
தூக்கத்தின் இருட்டறைக்
கதவுகள்,
சாளரங்களூடே
உருகிக் கொட்டும்,
வண்ணங்களில்.

நேற்றைய கனவில்,
மதகுருக்கள் உருகிப்போகக்கண்டேன்.
உருகிப்போனவர்களில் இருந்து,
உருட்டி எடுத்த பொருள்,
நிலத்தில்
ஆழப்புதைத்து,
மேலொரு சமாதி கட்டிவைத்தேன்.

இன்றைய கனவில்,
சமாதி உருகி,
இன்னொருமுறை, உருகிப்போனவர்கள்
உருப்பட்டு உருப்பெருத்தார்.
இன்றைக்கும் நான் விழிக்க,
உருகிச் சமாதிக்குட் பொருளாய்த்
திரும்பப்போனார்கள்,
மதகுருக்கள்.

நாளைக்குத் தூங்க
எண்ணம் ஏதுமில்லை
என்னகத்துள்ளே.

"மீமெய்யுந்தற் கனவுகள்,
என் தூக்கத்தைக் கெடுக்க வருகின்றனவா?
இல்லை,
என் துக்கத்தைத் தவிர்க்க வருகின்றனவா?"

யோசித்துக்கிடப்பேன்.

நாளைக்குத் தூங்க
எண்ணம் ஏதுமில்லை
என்னகத்துள்ளே.


'99/03/04 அதிகாலை 03:00

0பின்னூடுகை:

Post a Comment

<< Home