அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

பாடு பொருட்கள்

பாடு பொருட்கள்
-பரிதாபமறியாப்
பெருங்குரூபிகள்.

தடவித் தேடவும்
வருத்தி
உட்பொந்துள்
ஒளித்திருப்பன.

அவைதம் அகப்படுகை,
வெளிச்சத்திற்குத் தவறி வந்த
இருள் வௌவால்கள்
முகமறைந்து
எம் குருதியும்
தம் வாயட்டிக்
கைசேரச்
சோர்ந்து
வீழ்தலைப்போல்.

தலையெட்ட,
கண் காண,
வலைக்கையோடு மனம் துரத்த,
தம் வளை நுழைந்து
கைநழுவு வால்
நுனி காட்டி ஆட்டும்
சுண்டெலிகள் போலவும்
வாழ்வனவாம்
பல கவிக்கருக்கள்.

வனம், வானம்,
காதல், காமம்,
சூரியன், சந்திரன்,
அருவி, மழை,
மழலை, மலை
-இவை,
பெரும் காலம் உரித்து
உறுஞ்சிக் கெட்ட
நாட்பட்ட தோல்
நளினம் பண் விபச்சாரர்;
தேன் அகன்ற திரள்வதைகள்.
அகம் விரும்பப்
பொருள் மெய்
சீண்டுவார்
எவருமில்லை;
விழைந்தேதும் எழுத்துறுஞ்ச
இல்லாப்போதுக்கு
கைப்பட்டளையக் காத்திருக்கும்
கவின் செத்த
வேண்டா விருந்தாளிகள்
-கருப்பண்டங்கள்.

தெரியாதெதனையோ குருடனாய்த் தேடலும்
தேடாதெதனையோ தேட்டமெனத் தின்னலும்
ஆகி வரும் காரியங்கள்,
அமராக்கவி ஈட்டலிலே.

அவற்றிடையே
இந்த எழுத்தைப்போல்
அவசரப்பொழுதினில்,
ஆவியீர்ப்பானவற்றில்
இழுத்தள்ளிக் கொட்டிக்கொண்டு,
ஒடுங்கி
நடுங்கும்
ஓரிரு
கவிக்குஞ்சுகள்.


'99 05 01

0பின்னூடுகை:

Post a Comment

<< Home