அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

நிலம் பட வாழ்.....

தொலைவின்
நெருப்பு மண்
நினைவு படும்.
இரவுகள் சுடும்,
எண்ணச்சுரப்புகள்
பொத்தற்படுத்தும்
நைந்த பஞ்சு நெஞ்சு.

நித்திரைமுன்
காற்றுவழிச் சேதிகள்
கட்டும்
கதையாய்க் கட்டிடங்கள்;
சுதை பூசி,
ஞாபகங்கள்;
சாளரங்கள்,
தவித்த முயற்குட்டி
ஆசைகள்.

இங்கே
தூசு தட்ட
அங்கது,
காற்றேகி
அழிந்திடலாமென்று
தொடவும் தயங்குவேன்
என் தீநிலத்து
நிழற்பட்ட நேரங்கள்.

அதில்,
அன்னை முடிக்கற்றை
இன்னும்
கறுத்திருக்கும்;

தம்பி,
தரைமூலையிற்
சுவர்தடவி தவழும்
சிறு குழவி.

நாய்கட்கும்
வயதேறாது;
புளியமரங்களோ,
பூவரசுகளோ,
பூப்பூப்பும் வற்றிப்
பட்டுப்போகாது.

நிலைபெயராது,
என் ஊர்ப்
பெயர்ந்த
கோவிற்காரைச்சுவர்வீழ்த்து
குறுக்குக் கறுப்பு நிழல் கூட,
பெருங்காற்றுக்கும்
என்னுள்ளே...

&&&&&&

காலவெளியில்,
கனவுக்குமிழ்படு
தூரச்சுமை
தோள்தாளா
நாளொன்றில்
மீளத்
தேடி நகர்ந்தேன்,
தீக்குழி குளி
என்
நீர்த்துளித் தேசம்.

&&&&&&

வெட்டி வீழ்ந்த
பூவரசுகளில்
புழுக்கள் ஊர,
பூச்சிகள்
நின்றென்னைப்
புதினம் பார்த்தன.
புளிய மரங்கள்
காற்றிலே
காலம்,
கால்சுற்றிக் கடக்க,
வேர்
கரைந்து போயின,
என் நாட்டு விழுமியங்கள் போல.

வேறு
நாய்கள்
புதுவேட்டைப்பற்களால்
முறைத்தன,
கண்கள்
தரையெல்லாம்
வெறி,
அவை தெறித்த
பரலதுவாய்
சிரித்துதிர்த்தி.

மூலைகள் வெறிச்சோட,
சுவர்கள் முகம்மூடியிருந்தன,
வேறு நிழற் படங்களால்.
தூக்கி வளர்த்தவன்,
தோள்மீறி உயர்ந்து
தோழன் ஆகி
நின்ற பருவம்.

கருமைத்தூறல்
விழுந்த கற்றைகளாய்
முகில் வற்றித்
தாய்த்தலைமுடி.

&&&&&&

ஆனாலும்,
கண்ட
எல்லோரும் சொன்னதென்னவோ,
-நான் மட்டும் மாறிப்போனேனாம்,
ஆள் கூட அடையாளம் தெரியாமல்.

&&&&&&

திசை திரும்பி
தொலைதேசம்
திரும்ப ஏகையிலே,
நான் மிதித்த
தாய்நிலத்து
மனத்தேசப்படங்கள்
அழித்து
மீள வரையப்படும்,
இன்னொரு
கைப்பிடிக் காலத்துகள்கட்கு,
வழி பார்த்து
நான் நகர.

என்றோ,
எங்கோ
எரிந்து போன
விண்நட்சத்திரங்களும்
மணல்வன யாத்திரீகனுக்கு
வழி காட்டும்
என்பதறிவு.

'99 ஏப்ரல் 26, திங்கள் 18:34 மநிநே

0பின்னூடுகை:

Post a Comment

<< Home