அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

சொற்-கட்டு

நெருக்கமானவை
பிரிய எண்ண,
தவிர்க்க நினைக்க,
துன்பம் நிறைந்தவை;
துயர் தருபவை.

பழகிப்போனவை,
செயற்திறத்தைக்
கட்டிப்போடும்.

எனக்குப் பழகிப்போன
நெருக்கமானவற்றுள்
சில தமிழ்ச்சொற்களும்
அடக்கம்.

அவற்றை விட்டு
என் உணர்வுகளை
எழுத்தமைக்க
இயலா;

ஏற்கனவே என்றோ
சொல்லப்பட்ட சொற் கட்டில்
மீண்டும்
அடித்துத் தூக்கிய
சொற்கட்டுக்களாய்
என் உணர்வுகள்.

ஆழப்புதைத்த
மரமுளையிற் கட்டிய
மூர்க்கமாட்டினைப்போல்,
திமிறியோடத் துடித்தும்
பழகிய தடத்தில்,
குறுகிய எல்லையுள்
ஒரு நிலை பற்றிச் சுழரும்
என் எழுத்து.

பழகிய தமிழ்ச்சொற்களைப்
பிரிதல் அரிது;
துயர் கொடிது.
உணர்வுகள் மாறினும்
வெளிப்படு உருவினைக்
கொழுவிச் செல்லும்
ஒரே தொகுதித் தமிழ்ச்சொற்கள்.
பழமைப்பட்ட பழகிய சொற்கள்
அறியா தம்கூர்மை தேய்ந்த செய்தி;
தம்முட் தோய்ந்த உணர்வு,
தாம் கொல்லும் செய்தியும் கூடவே.
ஆயினும்,
கை, நா, மனம்
இலாவகமாய் விசிறப்
பழகிய பால்ய தோழமைத்
தமிழ்ச்சொற்களைப்
பிரிதல் அரிது +
துயர் கொடிது
- வயோதித்த
வளர்ப்புநாயைக்
விஷம் வைத்துக் கொல்லுதல்போல.

பிரிதல் துயர் எதிர்தாங்கமுடியா
நொய் மனத்து மானுடன் நான்;
என் எழுத்து மொட்டைப்படும்.
உட்போட்ட உணர்வு வீரியம்
காலித்துத் தொலைந்திருக்கும்.

எழுத்துத்தடத்தில்,
ஒரு நிலைப்பட்ட முளைப்பட்டு
குறுகச் சுற்றும்
சுற்றும் செக்கு மாடு
நான்.

'99/03/04 11:53 CST

0பின்னூடுகை:

Post a Comment

<< Home