அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

காற்றுக்கோ கதவடைப்பு??

அவர்கள் ஆலோசனை சொன்னார்கள்:
"காற்று வந்து போகலாம்;
அதிலிருந்து உனைக் காத்திருக்க,
கருங்கற்களினால் கட்டிடம் கட்டுக,
வீட்டுக்கூரை ஓடிட்டு மூடி வேய்க."

நன்றி;
ஆனால்,
நான் அது செய்யேன்.

காற்றெந்தன் தோழன்.
கவிதைக் கரு தாங்கிவரு இளநண்பன்.
அவன் கூற்றுக்களே என் எழுத்து.

மனம் விழைந்தால்,
காற்றினாலே கட்டுவேன்
நான் வாழ்தலுக்கு ஒரு வீடு;

காற்றுக்குழல்களினால்,
கூரை எழும்.

அவற்றின் கூற்றுகள்
என் சுவர்களாகும்.

சூரியன் விட்டெறியும்
ஒளி முறித்தெறிந்து
ஒய்யார சின்னக்குமிழ்கள்,
வண்ணச்
சிருங்காரம் செய்திருக்கும்.

காற்று என் தோழன்.
அவனுக்குக் கதவடைக்கேன்.

வீட்டுக்குள் அவன் வருதல் தடைப்பட்டால்,
வீடே அவனால் ஆகும் எனக்கு.

வயற்சேற்று நாற்றுப்பசியம்,
கன்னிநீர்ப்பட்ட கொதிமணற்புழுதிமணம்,
மல்லிகையின் மொக்குமகரந்தத்துகள்,
அத்தனைக்கும்
என் தோழனே தூதுவனாம்.

காற்று என் தோழன்,
ஒலியாய்க் கதை பேசும் ஒரு தோழி.


சில பொழுதிற் குளிற்சிணுக்கம்;
பிற பொழுதில் அனற்கனல்வு;
நிறம் கூட வெப்பமென,
நகரா நிழல்போல என்னுடனே,
நகர்பவனாம்
என்
நன்நண்பன்.

அதன் பெயரோ,
அகல்வெளிக்காற்று.

என்வீட்டு மதில் அவன் ஆகுக;
என் வீட்டு முற்றம் அவள் ஆகுக;
என் வீட்டுக்கூறை அது ஆகுக.

காற்றே,
உன்னை நான் காதல் பண்ணுகின்றேன்.

என்றைக்கும் திறந்திருக்கும்
உனக்கான என் கதவு.

இன்றைக்கு,
என்ன கொண்டுவர
எண்ணியிருக்கின்றாய்?

காதற்
காத்திருப்பில்
நான்.

'99/03/04

0பின்னூடுகை:

Post a Comment

<< Home