அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

மார்ச் 8 - உலகப் பெண்கள் தினம்

'ஜீவனுள்ள நதி
எதற்கும் ஆசை,
கடலுடன் சங்கமிக்கத்தான்...'*

ஆனால்,
மனிதர்கள் விருப்பம்
மாறுபட்டிருக்கும்.

கவிஞர்கள் காண்பதுபோல,
துள்ளியோடும்
சலசல நதிக்குக்
கடல் மீது காதல்;
கடலின் காதல்,
நதி இடையைத் தழுவி
கருத்தொன்றாகி
கலந்தொன்றாகி
பெரு நீராய்
முயங்கல்.

ஆனால்,
கொடும் மனிதர்கள் மனங்கள்
மாறுபட்டிருக்கும்.

ஆர்ப்பரி பெரு அலை கடலினைக்
கட்டவொண்ணாக்
கோழைகள்,
நதிகளைக் கற்பழிப்பார்;
திசை வெட்டி
மலை தட்டிக் குறுக்கிட்டுத்
மண்மேற்தடுப்பார்
கயவர்;
ஆலை உலை கொட்டும்
அழுக்கெல்லாம்
உட் திணிப்பார்.

தம் இல் சுற்றி
நதி நாறிப் போகினும்,
தயங்கார்,
இருள் மன மனிதர்.
அவர் கவனம்,
நதி ஓடித்
தன் கடல் அடையாக் செயலினிலே
குறியாகும்.

இன்று,
நதிக்குத் தேக்கம்.
கடலுக்குக் காத்திருப்பு.

என்றாலும்,
இன்னொரு நாள்,
சிறு நதித் திசைக்கு
நலம் பிறக்கப்
பெரு மழை கொட்டும்.
தன் இடை பெருத்து,
செயல் தழைத்து,
தடை உடைத்துக்
கரை விடுத்துப்
பாயும்,
இத்தனை நாள்
அழுத்த இருப்புக்காய்ப்
பொங்கிப்
புது வெள்ளம்.

அன்று,
கடல் பிரித்து
நதி வைப்பார்,
முதலிற் பேச்சிழப்பார்.
பின், தமைத் தாங்கப்
பிடிப்பின்றி
மூழ்கிப்போவார்;
மூன்றாம் மேல் எழுச்சியிலே
மூச்சிரைப்பார்;
மூச்சிழப்பார்;
முடிந்து போவார்.

நதி சேரும்,
தன் நாதன் கரை;
கடல்
அலை மூச்சிழுத்து,
நதி சேர்த்தணைத்து,
ஆடும்
மைதுன நாட்டியம்;

இம்முடிவற்ற
மோகம் காண்,
வான் கூச்சமுற்று,
மூடிக்கொள்ளும்
கருமேகத்திரை.

99/03/07

0பின்னூடுகை:

Post a Comment

<< Home