அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

சதிப்படும் சதிகளுக்கும் பலிப்படும் பீபிகளுக்கும்

"காப்பு"

இது
கல்தோன்றி
மண் தோன்றாக்காலத்தே
பெண்,
விலாத்தோன்றியதாய்
இன்னும்
பிலாக்கணமாய்ப் புலம்புவோருக்கானதல்ல.

அகல்க அவ்வாறானார்;
புகுதல் வேண்டா;
புகின், பின்னால்,
புழுங்கிப் பொரிதல்
வேண்டா.

^^^^^^^^^^^^^^^

மரத்துக்குக் கூட
மரத்துபோகாது இருக்கும்
-உணர்ச்சி;

கத்திபடப்
பால் சொட்டும்
கள்ளி;
தொட்டு விடத்
இலை
தூங்கிப்போம்
தொட்டாச்சுருங்கி.


தெருநாய்களுக்குக் கூட
உண்டு
-மூளை வளர்ச்சி

குட்டியாய்ப்
பட்ட அடி தவிர்க்க,
துரத்திக் குலைக்கக் கற்கும்;
கடித்துக் குதறித் தப்பும்.


ஆனால்,
உடல் உணர்ச்சி மரத்த,
மூளை வளர்ச்சி அற்ற,
வெறிநாய்கள்
முன்னே
காணாதோருக்காக
இந்தக்
கிறுக்கல்கள்.

அவை அறிந்தோர்
வெளி நகர்க.

அறியாதார்,
அவை அவையறிந்து
அகப்படும் நேரத்தே
அடித்தகல்க.

உணர்ச்சி, வளர்ச்சி
ஏதுமற்ற
வெறிநாய்களுக்கு
வாலிருப்பதில்லை;
ஆனால்,
தலையில்,
காதாவடியில்,
நெற்றியிற்
கழுத்தில்,
நெஞ்சில்,
அரையில்,
ஆண்குறியில்
ஆங்காங்கே தேவையின்றித்
தொங்கிக் கொண்டிருக்கும்
காலம் சென்ற
நிகழ்களம் பொருந்தாக் கருத்துகளும்
அவை கொடுத்த
மதக் கசடுகளும்.

சொந்தப்புத்தி மழுங்கடிக்கக்
கஷ்டப்பட்டுக் கற்றுக் கொள்ளும்
விலங்கினம்,
மதநாய்.
மூளையின் மதம்,
பேச்சிற் தெரியும்;
பித்தர்
தம் பேச்சுக்குத்
தாங்கிப் பிடிக்கும்
தேங்கிப்போன
நூல்களிற்
தெரியும்.
களப்பிரர் காலத்து
காட்டுமிராண்டித்தனம்,
கருத்துக்களைக் கோர்க்கும்
கயிறாம்;
மதநாய்களே
இதை மறுத்ததில்லை.
மார்பில் வேறு,
வீரப்பட்டயமாய்க்
கட்டி,
காட்டிக்
கொள்வதிற் பெருமை

கடிக்க மனிதர் கிடைக்காவிடத்து,
அடிக்கடி,
அடிக்க, கடிக்க
அதற்குத் தேவை,
திரும்பக் கடிக்கா
இன்னொரு விலங்கு.

அதனால் தன்
வீட்டுப்பெட்டைகளுக்கு,
வெறிநாய்களே
சங்கிலி போட்டுக்கட்டுவது
விந்தை என்று எண்ண வேண்டா...
கட்டா விட்டாலே வெகுவிந்தை
என்றறிக.

முட்டாள்களுடனும்
மூர்க்கருடனும்
பேசப்பயனில்லை;
இரண்டும் முழுதாய்க் கலந்த
சில நாய்க்குலத்தை என்ன செய்ய?

குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்;
கூர்ப்படைந்து மனிதன் கூடக்
குரங்காகலாம்
அல்லது
வேறு விலங்காகலாம்
என்றதொரு சித்தாந்தத்திற்குப்
பக்குவப்படுத்துகின்றேன்
என்னை
மருந்துச்
சொட்டுச்சொட்டாக..

கடவுளின் ஆலைகள்
அரைக்கத்தவறுமோ..
அறியேன்;
ஆனால்,
என் மூளைத் தொழிற்சாலை
தவறிப்போகாது,
காலத்தே கத்திக்குறி,
அற்பவிலங்கு கழுத்துகட்காய்க்
கவனம் வைத்திருக்க.

99/03/10 புதன் 04:44 மநிநே

0பின்னூடுகை:

Post a Comment

<< Home