அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

சிலுவையிலறைந்த பகற்பொழுது

பகற்பொழுதுகள்,
வலு மிக்க கண்தோன்றா
அடைப்புச் சுவர் நெடும் பாறைகள்.

வேலைக்கனத்தால்
வெட்டிக் கிழிக்கமுடியா
கத்தரி இடைப்பட்ட காகிதம்,
மாலைக்கீழிறக்கம்வரை
கிறங்கலாய்,
என் மதியப் பொழுதுகள்.

நேராய் நிமிர்ந்து இருக்கவே
மேலெழுந்து நிழலாய்ப் பறக்கும்
நினைவு நிகழும்
எனைச் சுற்றி.

மேசை மேற்பலகை மரமிருந்து
ஆலாய்க் கிளர்ந்தெழும்பி
கண் சுற்றி
வயது வளையங்கள்
விண் பறக்கும்
விந்தை விரியும்
விசுவரூபமாய் எங்கங்கணும்.

அமிலத்துளியாய்,
உருகி உடல் சொட்டி,
மதியக்கணங்கள்,
சிறிதாய், குழியாய்
அரித்தெடுக்கும்
அசைவு செத்து நின்ற
மூளைக்கலங்கள்.

விழிப்படலம் விரிந்திருக்க,
மேலே
ஒரு படுதாத்திரை விழுந்து
முகம் மறைக்கும் முன்னே.

எழுத்துக்கள் இடம் மாறும்;
இலக்கணங்கள் இடறி விழும்;
இடையிடையே இதயம் ஏங்கி
எதிர்பாராச் ஸ்தம்பிப்பு
எழுதுகோலுக்கு ஊறாய் எழும்.

பின்,
முகம் தொய்யும்.

விஞ்ஞானம் மறந்து தோற்கும்;
மெய்ஞானம் மறைந்து தோற்கும்.

கடிகாரம் பொய்க்க,
ஈச்சம்பற்றை முள்ளென்று
இறுகி, முனை துருத்தி,
நின்று, நீண்டு
விகாரம் கொள்ளும்
நேரம்காட்டி முட்கள்.

கால்கள் சுற்றிப் படர்ந்து
முனைவு செத்த மோனத்துள்ளே
மூளை மூழ்கடித்துக் கொல்லும்,
மதியப்பொழுதுகளின்
நின்றுபோன நிமிடங்களும்
நீடித்தே போகும்
நேரக்கொடுமைகளின் நிர்வாணங்களும்.

~~~~~~~~

பின்னொரு நேரம் இந்த பேதமை உலரும்.
மதியப்பொழுது மறைந்து போய்க் கிடக்கும்.
மாலை மடங்கியவனைத் தூக்கியிருத்தும்.
போன நேரத்தின் எடைக்கு எடையென்றே
எஞ்சி நிற்கும் வேலை இன்னமும்
என் சிலுவைச்சுமை ஏற்றும்.

முட்டி மோதவியலாது,
முன் சரிந்து,
வில்வளைவு முதுகில்,
மூளையில்,
கொள்சுமை தாங்கி
ஊர்வேன் நான்.

98/9/17

0பின்னூடுகை:

Post a Comment

<< Home