அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

சொல்க நீ வெண்பனி

கொலராடோ டென்வரின்
காலம் பிறழ்ந்த
இன்றைய நாளதன் பனிக்கு
என்னுடைய வந்தனம்.

சொல்க என்னிடம்,
முன்வாரத்தின் வெப்பம்
தணித்தல் பணியென
வான் நின்று பணிந்தனையோ
வெண்பனி?

இளம் துப்பாக்கிகள்,
எரிதழல் எகிறிக் கக்குதல்
காண்பது கேட்பது
ஈழத்தான்
எனக்கொன்றும் புதிதல்ல...
என்றாலும்,
எத்தனை முறைதான்
எண்ணிக் கண்டிருக்க,
கேட்டிருக்க,
ஏன் என்று காரணமறியா
எதேச்சைக் குறிகள்?

சுட்டவனுக்கும் செத்தவனுக்கும்
ஒற்றைக்குண்டு தொட்ட முத்தத்திலேயே
வெளிவளியுடன்
அற்றுப்போயிற்று...
....உயிர்ச்சுமைகள்;
மேலே,
உன் உறைகுளிர்ச் சொட்டலுள்ளூம்
வெப்பம் உள்ளே
சுட்டுச் சுட்டுச்
சொட்டச் சொட்ட
சோகம்
சுமந்து கொட்டிக் கொண்டிருப்பவர்கள்,
----நீ அறிவாய்----
அவர்தமைப் பெற்றாரும்
அப்பெற்றாரைப் போல்
பிறிதெங்கும்
தாமும் பிள்ளை பெற்றாரும்
உடன் உற்றாரும் மட்டுமே.

எய்தவனை நொந்து சிலர்;
ஏறி இயல்செய்த எய்கணையை
வார்த்தைகளால் எரிந்துமிழ்ந்து
வேறு சிலர்...
இனியருபோதேனும்,
இவ்வகை இயந்திரம்
எமனேறி ஏகி எகிறாமல்
என்னென்ன செய்வதென்றெழுதி,
அஞ்சி, ஏங்கி,
பிறராய்ப் பெரும் பலர்....
என்றாலும்,
எத்தனை முறை
நிலைப்பட்டு நகராமல் நிற்காப்
புவிச்சுற்றலில் செயலதுவாய்,
இத்தனை நாட்டியமும்
இடம் மட்டும் விலகி
வேறு களமெங்கோ
கடி தடம் பட்டிருக்கக்
கண்டிருந்தார்,
இம்மனிதர்?

கணை பாய்ந்த மனதுகளின்
செய்திக் கதைபேசி
காசு பண்ணும் நாகரீகர்.......
சுடுபடை தடுக்கும் செயல் மறுத்து
சதிச்சட்டம் இயற்றும் கூட்டணிகள்......
சுட்டவர் செயலுக்கு
எத்துணையும் குறைந்ததில்லை
இவர்தம் இழிவுபடு
பெரும் குற்றமும் கொடுமையும்.

கொடூரர்கள்முன்செய்
சாத்வீகம் போலவே
சாத்வீகர்மேல்நிகழ்
கொடூரமும்கூட
தம்மால்
இயலாக் கோழைகளின்
வேண்டாச் செயற்கருவி.

மானுடம் தேம்பியழும்.......
குண்டுகளின் வீரியத்தில்
கொள்கை பரப்பும்
நம்பிக்கை கொஞ்சமாய்
நசிவுண்டு
நோயுண்டு
செத்துப்போக,
கூடவே
செத்தோர் முகமறியா
நானும்
தூரத்தே
சுற்றமெனக் சுற்றிக்
குந்தியிருந்தழுவேன்,
சுட்ட முட்டாள்களுக்கும்கூட
ஒரு பங்கு இரக்கம்
மனப்பெட்டிக்குட்
சேர்த்துக்கொண்டு.


'99 ஏப்ரல் 22, வியாழன் 17:06 மநிநே

0பின்னூடுகை:

Post a Comment

<< Home