அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

நான் - நூல் - நினைவு

பிறப்புழல்வுகளும்
சாபங்களும்
உண்மையெனப்பட்டால்,
போன பிறப்பொன்றில்
முற்றாய்
ஆசை அற்றுப்போகா
வெட்டுக்கிளி
ஒன்று
நான்.

தத்தித்தத்தியேனும்
கருக்குக்கத்திஇலை
நறுக்கப்பறந்த
வெட்டுக்கிளி
நான்
-கண்ட
எந்தப் பனிப்புல்லின்
நுனிகூட நன்னிச்
சப்பித் தின்னமுன்னே,
பாதி,
தரை துப்பித்துப்பி,
மற்றப் புல்முனைமூலைக்குத்
தத்தும் முனைவுகொள்
வெட்டுக்கிளியாம்
என் முன்னை யாக்கையன்று.

அப்பிறப்பின் நூல்நிலையம்,
அகன்ற பெரும் புல்வெளிகள்.
சதா நச்சரித்துக்கொட்டும்
- ஒரு தத்துக்கிளிக்கு,
பசியின் விரல்கள்,
விழியாய் உருமாறித் திறக்கையிலே,
புற்களின்மேல்
ஜாதியில்லை;
வர்ணங்களில்லை.
என் முற்பிறப்புப்பெருவெளியின் புற்களிலே,
பச்சையில்லை,
பட்டதில்லை,
-ஒற்றை இலைகூட,
ஒடுக்கமும் உருண்டையும்
ஒன்றாகி அற்றதுபோலவே.

இலைகளே என் புத்தகங்கள்.
நொடியிலே,
நுனியிலை
வெட்டி வெட்டிச்
சப்பிக்கொண்டே
மனப்பாடம்
சத்தமிட்டுச் சொல்லிச்சொல்லிக்
கத்திக்கொண்டு களம் பாய்வேன்.
எங்கும் புற்கள்,
பழையதாய்ப் புதியதாய்
புதராய் இலைவிட்டுப் பரந்து கிடக்கிறன.
ஒரு வெட்டுக்கிளியின் வாழ்க்கை சிறிது;
சிறிதென்றால்,
சில மனிதர் முகமயிர் சிரைக்கும்
நாள் இடைவெளியின் மிகச்சிறிது.
புற்தரையோ,
பூப்பட்ட பெண் முகப் பூரிப்புப் போல
பொங்கிவழியும்
ஒரு அட்சயபாத்திரம்.
வெட்டி முடியவில்லை,
எத்தனையோ எட்டிக்கிடந்த
இதழ்நுனிகள்.....

அதனால்,
ஆழ்ந்து தின்னச்சலிக்குமென்று
நன்னி நன்னித்
துள்ளிப் போனேன்
நிரையாய்
இலை மேல்முனைகள்,
நுரை தள்ளு கடல்
அள்ளிக் குடித்துமுடிக்கும்
அடங்கா ஆர்வம்
காலடிச்சுழல்காற்றாய்ப்
பாவனை பண்ணி
நான்.

மேலிருந்து
கீ
ழ்



ர்
ந்
து
வேர் கண்டு மென்ற
பிற வெட்டுக்கிளிகள்,
மண்ணும் உண்டு
மயங்கின; மடிந்தன.
நிறைந்தவை தளம்பா என்றிருக்கலாம்;
நிறைந்தவை நகரா என்றாகிக்கூட இருக்கலாம்;
ஆனால்,
என்னைத் தரிக்கவைத்து,
பனி ஈரச் சிறகில்
முளைக்கொம்பிடு
அக்கேள்விகள், கொழுக்கிகள்
என்றுமே தனி ஒரு பொற்காசு நிறையாக்
கவலைகள் நிறை தவலைகள் ஆக விடேன்.

எனக்கோ,
கால்களைப் போன்றவை
என் சுவை உணர்வுகள்.
எதுவும்
சிறத்துப் போகவில்லை,
ஆயினும்,
செலுலோசாய்த்
தின்றைவைகூட
செரித்துப்போயின
உடனே.

ஒரு தனிப்புல்லை
முழுதாய்க் கடித்துத் தொலைப்பதெனக்
காத்திருப்பேனானால்,
ஒரு புல் அடி மண் தின்று முடிய,
நானே ஒரு
பனிதூங்கு
பச்சைப்புல்லாய் முளைத்து
மூக்குநுனி நன்னித்
தின்னப்பட்டிருந்திருக்கக்கூடும்
இப்பிறவி.

ஆனால்,
நுனிப்புல்லெல்லாம் தின்று முடியா
ஏக்கம் கொள்
ஒரு சுட்டுவிரலளவு வெட்டுக்கிளி
நான்,
தட்டித் திறந்து கொண்டு,
புத்தகங்களின்
முதற்பக்கங்களையும்
முடிவுகளையும்
மட்டுமே
இன்னும் இங்கே.


'99 05 01

0பின்னூடுகை:

Post a Comment

<< Home