அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

கல்லறை அலை

வினைச்சில் உருள மறுத்தது;
மூளைத்தடத்தினில் முளைத்தது மோகம்.
முகத்தினில் எரிமலைப் பருப்போல்,
முகிழ்த்து வெடித்தது சிரத்தினுட் சுவாலை.
கரத்தினுட் பதுக்கிடு தவளைப்பதற்றம்,
நாநுனிக்குள்ளே தாவிக் குதிக்கும்.
சிரித்திட விரித்திடும் உதடு,
எறித்திடும் மனஞ் செறி தயக்கம்.
சொற்கள் சூடிக்கொள்ளும் நாணம்,
உள்ளே சொக்கித் தூங்கிச் சொட்டும் நளினம்.
மனத்திடைக் கெளுத்திமீன் காதல்,
அடிக்கடி கெளிறிட மார்படிக்கும்.
பின்னலில் ஏறும் என் பாதம்,
பிடித்துப் பிடித்து மேலும் தாவும்.

நாம் இருவரும் உடலிடை விரற்கடை தொலைவு வாழ் எதிர்ப்பால்
மாந்தர்.


காலம்


ங்
கு
ம் எல்லை நோக்கி மெல்ல மெல்ல.

கண்கள் தொலைத்தன முன் சொல்நாணம்;
கால்கள் பின்னல் தேக்காது;
பரு வற்றிப் பழுக்கும் முகம், நுனி விரி கயிற்றுத் திரி
புரி சுருக்கம்.

வயது மட்டும் தொலையும் உடையுடன்,
முதலைப் பலகணித்திரையினில் மினுங்கி மினுங்கித் தொங்கி.

மோகம் கண்ணறு நிலையும் கால் தளை விளைவும் கொண்டிடும்
வால்மிருகம்;
எரிய எரிய கண் இமையாது வளரும் வால் நுனி, காமம்.
வலை தனிற் சிக்கு நுகர்கொம்பு விறை தனிவண்டு.
முகமறை அலையாம் மோகம்.
உள் எழுதலும் இறங்கலும்
அலைகளின் வீச்சம்;
ஓய்தல் மட்டும் உணராது;
அறைந்துவிலகு கல் நோக்கித் தாக்க திரும்பு
நோக்குப் பெற்றதோர் கூரம்பு.
அறுதியின்றி கைபற்றித் தொடர் சங்கிலித்தாக்கம்.
எறிந்து விட்ட கை சுற்றிச் சேரும் வட்டத்தட்டு.
அள்ளக்குறையா அட்சயபாத்திரத்துள் ததும்பி விளை பனைவெள்ளம்.
பனியுட் படர்சிறகு தொட்டு, சுட்டுச் சுட்டுக் கவரும் தணல் நெருப்பு.

பிணைந்துடல் கிடந்து மூசி நனைந்தெழுந்து வெளி நடந்து திரும்ப,
கடவுறு காலம் போல் வாயில் வழி பிரித்து உட் செலுத்தி
மூடும் அறை, மோகம்.
விலங்குக்கில்லை, செல்வழி விலகிப் போதல்.

உள்ளே உற்றதை அற்றதென மறுத்தல்,
மக்கட்பதடியர் செப்பிடும் பண்பு.

இனியும், நாம் இருவரும் வற்று உடலிடை,
காய்ந்த விரற்கடை தொலைவு,
மோகம் மேய்ந்து வாழ்
எதிர்ப்பால்மாந்தர்
உயிர் செத்துத்தொலையும் வரை.

அறையும் பாறைக்கல் நாளையும் தேடித் திரும்பும் கடலலை.

'99 ஓகஸ்ட், 31

0பின்னூடுகை:

Post a Comment

<< Home