அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

திரிகள், இழைகள், திரிகளும் இழைகளும்

I திரிகள்

திரிகள் எரிய வைத்தன;
நுனி நகர நகர உடல் ஊறி சுற்றுவட்டமாய் எரியும் திரி;
பரவும் ஒளியின் புகழ் சேர்த்து மினுங்கும் குத்துக் கல்விளக்கு.
சுடர்த்திரிகள் மெல்லவும் பேசா சுடு சொல்லேதும்;
விளக்கு பெயர் விளங்க,
தாம் உறிஞ்சி எரியும் திரி;
ஒளி மறையும் வளியிற் கருகி;
மண்டும் புகை நூற்திரியின் குற்றமாய்த் திரிபு பெறும்.

கும்பிடுகள் தமக்கென்றெண்ணா எரி திரிகள்;
எதையும் காணாதெரிந்து கொண்டே யிருக்கும்;
"கடமையைச் செய்; பாராதே விளைபலனை."
குத்துவிளக்கு மட்டும் குதூகலித்துச் சொல்லும்
"உட்காராமல் ஊற்று என்னுள்ளே எண்ணைய்;
உலகுக்கு ஒளி கொடுத்துக்கொடுத்து, ஓயாமல் எரியவேண்டுமன்றோ நான்?"
திரிகள் வாய்பேசா.... சுருளும்; ஊறும்; எரியும்; மறையும்.
தோன்றும் புதிதாய்ப் பிறிதொரு திரி.

II இழைகள்

இழைகளோ, வளைந்து வளைந்து
தனியேடுகளின் சுயம் தின்று கட்டிவைத்தன,
காலம்,
கால் சுற்றிச்சுற்றிக் கறையான் புற்றாய் பிறக்க,
பெட்டிக்குள்.
தட்டிக்கொடுக்கும் கற்சிலைப் பண்டிதர்கள்
ஒட்டி இழைந்திருப்பர் இழைகளோடு;
எழுந்துநடவார்; எதிர்காலம் கண்பாரார்.
கற்பகதருவென்பார் கறையான் புற்றை.
காத்திருப்பார்.
கண்படு சிக்கலுக்கெல்லாம் கைவிட்டுத் தேடுவார் புற்றுள்.
கைபட்டதெல்லாம் உற்றபொன்னென்பார்;
உச்சி முகர்ப்பார்; ஓங்கிக் குட்டுவார் தம்தலையில்;
சுட்டிச்சொல்லுவார் சுற்றியிருப்போர்க்கு.
பின், சரிந்து பெட்டி இழைகள் புனைந்து உட்கார்வார்;
எப்பொழுதும்போலவே பின்னும் பேசுவார் வெட்டிப்பேச்சு.
இழைகள் இஷ்டம்போல் தளைத்தன எவ்விடமும்,
பெட்டியையும் பெட்டிவைத்து பழங்கதை பேசுவாரையும்
சுற்றிச்சுற்றி சுமையேறக் கட்டி வைத்து.

III திரிகளும் இழைகளும்

திரிகள் எரிவதற்கு;
இழைகளோ பேழைகட்கு;
நூற் பெட்டிகள் ஒளி கொடுக்கா;
திரிச்சுற்றுகளோ காலத்தே கட்டுப்படா.

ஏட்டுக்கட்டு இழைகளைப் போற்றுவோர்க்கும்
சுடர்த்திரிகள் ஒளிர்ந்தவிந்து இறக்கவேண்டும்.
காண ஒளிக்கங்குகளை விண்டழிந்த பின்னும்,
திரிகள் புகைத்திட்டுக்களைச் சுமக்கவேண்டும்.

வலைத்திரிகள் பாமரர்க்கு;
வலைஇழைகள் பண்டிதர்க்கு.
மரபுவில் வரம்பு அப்படித்தான்.
கோடு மீறி முறிக்கப்படலாகாதுகாண்.
பொத்திவைக்கவாம் பத்திரமாய்
புழுதூங்கு பேழைக்குள்,
இழைகள் பற்றிப்பற்றிப் பின்ன,
வலை.

-
'99/08/12 வியாழன், 23:45 மநிநே

0பின்னூடுகை:

Post a Comment

<< Home