அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

தொனி

எனக்குத் தெரியும் திரைக்குப் பின்னால்,
நீ நகம் வளர்த்து நகர்ந்து கொண்டிருப்பாய் என்று.

உனக்கு, எனது சொற்கள்
பனிபடர்ந்த கண்ணாடியூடாய்ப் பார்க்கும்
நிழல் உருக்களைப் போலவென்றும் புரிவேன் நான்.

ஒரு புறம் மட்டும் ஒளியூடு புகவிடு திசையுணர் ஆடிபோல
எம்மிடைப் புரிதல்கள் இதுவரை.

"நகரும் வாகனத்துள்ளே நான்;
வெளியே, வீதியிலே,
உள்ளே உட்கார்ந்தவன் உருவம் கிரகிக்கும் உன்னிப்பில்
உன் விழித்தொனி" என்கின்றேன் நான்.

மறுதலையைப் பிடித்துக்கொண்டு
அழுங்காய்த் தூங்கும் அவதியிலே நீ.

புரிந்தவன் நீ என்றும்
புரிய மறுப்பவன் நான் என்றும் புழுங்குகிறாய்.

"மன்னித்துக்கொள்;
இதுமட்டும்தான் புரியவில்லை எனக்கு"
என்று சொல்லும் மறுப்புரிமை இன்றும் எனக்குண்டு
என்றேனும் உறுதி செய்துதரக்கூடுமா, நீ?

தனித்துவம் பேணினும்
பரஸ்பரம் பார்த்தலும்கூடும் என்றுதான்
தடித்திரையை எடுத்துவிட்டு
ஆடியை நாட்டினோம் நம்மிடைக்களத்தே.

காட்டுப்புதர்க்கண்ணாடித் தேசத்தில்
உள்ளே இருப்பது யார்? வெளியே நிற்பவர் யார்?
கண்மூடித்தனமாய், கல்லெறிந்துடைப்பதால் உடைவதார் மாளிகை?
கற்றுக்கொள்ளமுயற்சித்தும் தத்தும்பிள்ளை நான், தோற்றுப்போனேன்.

தடுப்பூசிவிதைகளே கிளை பரப்பிற்று விஷத்தை என்பதுன் பேதமையானால்,
எம் இருவர்க்கும் வேண்டாம் இனியும் ஊசி குத்திக்கொள்ளும் வேதனை.

வெறிச்சிட்ட மௌனம் உன் முகம் குத்தியடிக்க,
முன்னே வெள்ளித்திரையை மாட்டி விட்டுத் திரும்பிப்போகிறேன்
கொட்டிய என் சொற்களைப் கூட்டிப் பொறுக்கிக் கொண்டு கூடையில்.

மூடிக்கிடக்கட்டும் இம்முற்றத்தில் இனி என் கடை.

என் சத்தம் செத்தது.
தனித்துச் சிரித்திரு உனக்குள்.

'99/08/05

0பின்னூடுகை:

Post a Comment

<< Home