அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

ஆசிரியர்களும் மாணவர்களும்

வீண்கொழுப்பு நீக்கி புரதம் தின்ன சொன்னார்கள் ஆசிரியர்கள்.

"காலை சாப்பிட்டீர்களா?" என்று அவர்களும் கேட்கவில்லை;
"வேளைக்கும் சாப்பிடுவதில்லை" என்று இவர்களும் சொல்லவில்லை.

மாணவர் மௌனத்தைப் மிகப்புரிந்ததாய்ப் புரிந்து கொண்டார்கள்
ஆசிரியர்கள்.


அஸ்பெஸ்டஸ் கூரையின்கீழ் குடியிருக்கவேண்டாம் என்றார்கள் ஆசிரியர்கள்.

"எங்கே குடியிருக்கிறீர்கள்?" என்று அவர்களும் கேட்கவில்லை;
"அகதிகளாய்க் குந்தியிருக்கிறோம்" என்று இவர்களும் சொல்லவில்லை.

மாணவர் மௌனத்தைப் மிகப்புரிந்ததாய்ப் புரிந்து கொண்டார்கள்
ஆசிரியர்கள்.


மலசலகூடங்களைச் சுத்தமாய் வைத்திருக்க வேண்டிக் கொண்டார்கள்
ஆசிரியர்கள்.

"எங்கே கழிக்கிறீர்கள்?" என்று அவர்களும் கேட்கவில்லை;
"புதர்மறைவுகளைத் தேடித்திரிவோம்" என்று இவர்களும் சொல்லவில்லை.

மாணவர் மௌனத்தைப் மிகப்புரிந்ததாய்ப் புரிந்து கொண்டார்கள்
ஆசிரியர்கள்.


மழையில் நனைவது உடல்நலத்துக்குக் கேடென்றார்கள் ஆசிரியர்கள்.

"மழையில் நனைவதுண்டா?" என்று அவர்களும் கேட்கவில்லை;
"நனையாமல் வாழமுடிவதில்லை" என்று இவர்களும் சொல்லவில்லை.

மாணவர் மௌனத்தைப் மிகப்புரிந்ததாய்ப் புரிந்து கொண்டார்கள்
ஆசிரியர்கள்.


எதற்கும் இவர்களின் பதிலை ஆசிரியர்களூம் எதிர்பார்க்கவில்லை.
அப்படி எதிர்பார்க்கக்கூடும் என்று மாணவர்களும் நினைக்கவில்லை.

மணியடித்தது, பாடசாலை மூட என்று ஆசிரியர்க்கும் புரிந்தது;
அதற்குத்தான் அது அடித்ததென்று மாணவர்க்கும் தெரிந்தது.

அவர்கள் விரைந்து அப்படி போனார்கள்;
இவர்கள் கலைந்து இப்படி போனார்கள்.

எல்லோரும் இனி மாலையிற் கூடுவார்கள்,
ஒரு கொத்து அரிசிக்கு ஊரும் வரிசையில்,
ஓர் பெரும்மண்டபத்திற் பிதுங்கித் தூங்குவதற்கு,
ஒரு புதருக்குற் குந்தப் போட்டி போடுதற்கு,
ஓர் அடர் மழைக்கு தலை மரத்தடியதுங்க.

நாளைக்காலை மீண்டும்
பசியோடு திறக்கும் பாடசாலை
பரிந்துரைப்புகளுக்காய்.


'99 ஓகஸ்ட் 07, சனி 18:18 மநிநே

0பின்னூடுகை:

Post a Comment

<< Home