அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

பிறப்பு

அந்தத் தேசத்துக்கு இரண்டாம் பிரஜை
இந்தத் தேசத்துக்கு தெண்டித் தின்பவன்
மிகுதிக்கால்படு தேசத்தெல்லாம், அவர்கள்,
உன் கடவுச்சீட்டையும் உரசிப்பார்க்கையில்
உணர்வாய் என்னை உன்னுள்ளே.

அம்மா கண்ணில் தொலை சிறகடி பறவை
அக்கா கண்ணில் தனம் விளை மரம் நான்.
அவளின் கண்ணும் புறப்பொருள் காண்பதுண்டாம்; அதில்,
இல்லாத் தொலைவில் நிலைத்த தென் விழியாம்.

கற்றார் கண்களில் திமிர்க் கறுப்புரு அசுவம்
ஓடுகுதிரைதம் தெருவில் உதை கோவேறுகழுதை
ஓடலும் உதைத்தலும் உற்றிட வாழ்க்கை,
எச்சமாய்ப் போனது, கை எதுவுமே இல்லை.

எளியோர் முன்னே வலிபடு அசுரன்
வலியோர் காண மிதிபடும் பூண்டு
பொல்லார் உலகில் புலிவகை மனிதன்
பொருள் உள்ளார் பூமியில் புல்லும் யான்,
மண் நெளி
சிறுபுழுவும் யான்

கல்லாய்ப் போவேன் தூற்றலின் தெறிப்பில்
விஷப்பாம்பாய் ஊர்வேன் மறுபாம்புகள் காலில்
பூதமும் கணங்களும் கணத் தேவையின் நிமித்தம்
என ஆகியே நகர்வது என் நிகழ் நாட்காலம்.

இதுவாய்,
உள்ள எல்லாப் பிறப்பும் ஒரு தினப்பிறப்பில் எடுத்துழல்வேன்,
எம்பெருமான்,
நீ,
ஊளை நரிதனைப் பரியென ஆக்கிடல் வேண்டா,
மூசு பரிதனை நரியென மாற்றிடல் வேண்டா.
இனிவருமொருநாள், உன் சிறு புரிதலே போதும்;
எனை நானெனும் நீங்கிடலில்லை எனும் நிகழ்வு காட்டல்,
-ஆகும் கலியுக அற்புதம்.
போற்றி உன் பாதம்.
போற்றி! சய போற்றி! சக போற்றி!!


'99 செப்டெம்பர், 04

0பின்னூடுகை:

Post a Comment

<< Home