அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

ஓர் அமெரிக்கக்கனவு

நான் ஒரு கனவு கண்டேன்....

கன்ஸாஸ் கபாடம்,
துளிர்காற்றுக்கு மஞ்சி விழிமூடிக்கொண்டதை
அதில் நான் கண்டேன்.

மத்தியகாலம் ஒத்தமைந்ததோர் உலகு;
மின்விளக்குகள் உடைத்து திரி கொளுத்தினர் மெழுகு.
தலைகீழெனக் கயிற்றில் தொங்கினான் டார்வின்.
கண்கள்பிடுங்கலுற்றான், தன் கிழவுடல்,
கல்பகோஸ் விலங்கு, நகக் கூர் கிழித்து
ஆயத்தூங்கினான் கூர்ப்பின் அப்பன்.

அவனுடல், கல்லெறி மனிதரை ஊக்கினார் கைத்
திருப்புத்தகம் உள்ளே நெளிந்தன கருந்தேள்கள்.
சந்தியில், சந்தையில், மேடையில், மலம் கழிக்கையில்,
பேர்னாட் குயிகள் பேசினர் பெருந்தொழில்நுட்பம்,
தம் படைத்தல் விஞ்ஞானம்.
திரித்துப் பேசுதல் தரித்துப்போன தவர் கோட்டைநாவில்,
கொடும்முற்றுகையிட்டது ஆட்சிவலிமை.

ஆய்வுகூடங்களை அறிந்தறிந்து காட்டிக்கொடுத்தனர் அரைவெள்ளிக்காசுகட்கு;
அணியணியாய் ஊர்வலம் போய் ஆணிச் சிலுவையில் அறையுண்டன
பாவக்கறை படிந்த பழம்பாறைச்சுவடுகளும் ஆபிரிக்கப் பாதி
ஆதிமண்டையோடுகளும்.

தம் கட்டில்-புணர்தலுக்காய்,
ஆங்காங்கே அவசரமாய்
ஆண் என்புவிலாக்கள் மட்டும்
ஒடிந்து ஒசிந்து உன்மத்த உருக்கொண்டாடின
ஓரிரு கட்டிளம்பெண் உற்பத்தி பண் ஊக்கத்தே.

அண்டத்தின் தோற்றமும் நகர்வும்கூட,
அடர் பேரதிர்வுக் கன்ஸாஸ் கதவடிப்புடன்
கலங்கி மூடின தம் கண்.
காலம் பின்னோக்கி முகம் காட்டி ஓடச்
சாட்டை அடித்தது கல்விச்சட்டம்.
அறிக,
ஒருநாள் காலையில், பழ உலகம் நழுவிப் பாலிற் பிறந்தது,
திறந்த தேனீரில் மல ஈ வந்து வீழ்தல்போல்.
சில நாள் போக,
தோன்றினான் தந்தை நினையத் தரணியில் மைந்தன்,
முன்னொரு ஈ விழக் கண்டு, தான் இறக்க, இன்னொரு
வண்டு வீழ்
எளிமையாய்.

பின் என் நா எனக்காய் அசைத்துப் பேச விடக் கூவினேன்,
என் மூச்சின் மூலத் தோற்றெங் கென்று
எதிர்ப்பட்டார் எவர்க்கும் எடுத்துச்சொல்ல.
கோரமாய்க் கூவியது தொன்னையில் அருந்திய கூட்டம்,
கொடியசைத்து, தோள்குலுக்கி, தொடை தட்டி.
கூர்ப்பின் தோற்றுவாயைக் குதறிக் கீழிறக்கி வீசி,
குறி இறுக்கித் தூக்கிக் கட்டினர் என்னைப் பலியாய்.

முதற் கபாலக் கல்லெறியில் விழித்தேன் மீள,
கன்ஸாஸ் கபாடத்தின் வெளியெங்கோ, கடல் கடந்து,
புல்மூடு டார்வின் கல்லறைத்தரை மீதென்றார் யாரோ.

அருகே,
புதிதாய்ப் பொருந்திக் கிடந்தது
ஒரு சிறு குழவிக்கல்லறை
இனி, அதன் வெளியே கோரைப்புல் கூர்த்துப் பூத்தது எருக்கலம்பூ.

..... இதுவாய், இனி வருமொரு காலை,
மனிதர், விலா முள் என்பால் தம் முகம் விளங்க,
அண்ட மூலமும் சாரமும் அறியான் கையுள்ளினுள் அடங்க,
என் உணர்வினைப் பறித்து பிறர் தமதை உட்திணிக்க,
இன்று ஒரு துன்புறு கனவு கண்டேன்
என் அமெரிக்கத்துயிலில்.

'99 செப்டெம்பர், 04

0பின்னூடுகை:

Post a Comment

<< Home