அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

எனது சாத்தியங்கள்

காலை பர்ஹர் மதியம் பருப்பு மாலை பிட்ஸா
இடையில் தேநீர், நடையில் கோப்பி
எக்ஸ்பிரஸோ நுரைக்கும், ஸம்பேன் மதுரம் ருசிக்கும்
பியர் பாகற் கச்சல், வெரி ப்ளடி மேரி
எல்லாம் செரிக்கும் என் ஈழத்து இரப்பை.

"இவ்வித்தை எப்படி உனக்கு சாத்தியம்?" என்பார் சக அமெரிக்கர்


இந்த வருடம் இரண்டறை வதிவிடம்;
போன வருடம் புகை பொழி தனியறை;
வந்த வருடம் தனியறை -இரு நபர்;
வருமொரு வருடம் இரு அறை -ஒரு நபர்...
எல்லாம் சொர்க்கம் எதிலும் சுகத்தூக்கம்.

"இவ்வித்தை எப்படி உனக்கு சாத்தியம்?" என்பார் சக அமெரிக்கர்


இட்டலி தின்னல் பற்றியோர் இன்குறள்
கார்கில் வெற்றிக்கு துக்கடா வெண்பா
தமிழ்மொழி அலசலில் பொறிபடு கவிதை
துருக்கிப் பூநடுக்கம் முழுக்கவும் அறிவேன்....
.... அது அமைந்த பண் காந்தாரம்; தாளமோ ஆதி.
வாழ்க குர்தீஷியத் தனித்தேசப் போராட்டம்!

"இவ்வித்தை எப்படி உனக்கு சாத்தியம்?" என்பார் சக அமெரிக்கர்


தொழில் வித்தை புரி நுட்பம்,
எப்படி அவர்க்கு எடுத்துச் சொல்ல, நான்?

சக்கரையறு வெண்புக்கை செய் குறிப்புக்கு கிழக்கே
மேடமும் இடபமும் முட்டு ராசிக்களரிதன் மேற்கே
பின்னி ஜட்டிக்குக் கீழே, பெரனாஸ் பட்டுக்கு மேலே
போர்ஹே பிறந்தார் போன நூறாண்டென்று
கொடி இலக்கியம் பிடிக்கும் குடும்ப ஏடுதம் இலக்கணம்,
எண்ணில்லா வருடம் இயலாய்க் கற்றுணர் பழக்கமென
எப்படி அவர்க்கு நான் வாய், சட்டென்று உடைத்துச் சொல்ல?

'99 செப்ரெம்பர், 06

0பின்னூடுகை:

Post a Comment

<< Home