அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

என் நிழலுக்கு....

தொடர்வது நீ மட்டுமல்ல;
நானும்கூடத்தான் உன்னை,
நீ என்னைக் கண்டோடும் நேரங்களில்.

அறிந்திருக்கா விட்டால்,
அவசியம் தெரிந்து கொள்.....
உன் இருட்டு இயல்பசைவுகளை
வெளிச்சத்தே படைப்பது,
என் தொழில்.

மற்றைய மனிதர்களுடன் உரசிக்கொள்வது
நேரான மனிதர்களின் முதுகுகளல்ல....
காலடிக்கும் தாழ்வான தெருநிழல்களின் நெஞ்சுகளே.

முன்னுக்கு வந்தவரே,
என்றாவது உங்கள் நிழல்களுடன்
உரை நிகழ்த்தாமற் தெரு நடந்திருந்தால்,
மன்னித்துக்கொள்ளுங்கள்,
உடல் மோதியதற் கென்னை.

உன்னை நானும் என்னை நீயும்
துரத்தும்போது உரசிக்கொள்கிறோம் பார்,
அவர் நிழலுடன் நீயும் அவள் மார்புடன் நானும்.

என் நகர்விலும் நகரா நிழற்கறையே,
உன் வலைப்படு செயலால்,
மன வயப்பட்டு நிகழ்வில்
செயற்படு பொழுதி ழக்கிறேன் புழுதியில்.

உன் வழி வேறு; என் வழி வேறு.....
எனைச் சுற்றல், சுருங்கிவிரிதல் உன் வேலை;
எதிரெழு தொலை நோக்கல், நடத்தல் என் திக்கு.

இன்று முதல் தரைநிழல்களுடன் நடைச்சமர் நிகழ்த்த
நேரமில்லா மாந்தன் யான்.

இனியேனும் பிய்ந்து போயுறங்கு நிழலே,
இரவில் நிலவில்லாத் தேசமொன்றில்
படி சுவடாய் நீ.


'99 செப்ரெம்பர், 09

0பின்னூடுகை:

Post a Comment

<< Home